காரில் ரூ.2.10 கோடி பதுக்கிய விடுதலைச் சிறுத்தை பிரமுகர்கள்!

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social

‘’காரில் ரூ.2.10 கோடி பதுக்கிய விடுதலைச் சிறுத்தைகள் பிரமுகர்கள்,’’ என்ற தலைப்பில், ஒரு வீடியோ, ஃபேஸ்புக்கில் வைரலாகி வருகிறது. இதுவரை, 18,000 பேர் இந்த வீடியோவை, ஷேர் செய்துள்ளனர். இது, நாடாளுமன்ற தேர்தல் நேரம் என்பதால், பாலிமர் நியூஸ் பெயரில் வெளியாகியுள்ள இதன், உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:
காரில் ரூ.2.10 கோடி பதுக்கிய விடுதலைச் சிறுத்தைகள் பிரமுகர்கள்

Archived Link

தேர்தல் நேரம் என்பதாலும், விடுதலைச் சிறுத்தைகள் பிரமுகர்களின் காரில் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது என்பதாலும் இந்த வீடியோவை பல ஆயிரம் பேர் ஷேர் செய்துள்ளனர்.

உண்மை அறிவோம்:
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தொல்.திருமாவளவன் என்பவரால் தொடங்கப்பட்டதாகும். தற்சமயம், திமுக கூட்டணியில், அங்கம் வகிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதுபற்றி நக்கீரனில் வெளியான செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் தேர்தலை ஒட்டி, கட்சி பிரமுகர்களின் பணப் பரிவர்த்தனையை தேர்தல் அதிகாரிகளும், போலீசாரும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதன்போது, கடந்த ஏப்ரல் 3ம் தேதியன்று, பெரம்பலூர் அருகே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகர்கள் காரில் எடுத்துச் சென்ற பணத்தை, போலீசார் பறிமுதல் செய்ததாகக் கூறி, பாலிமர் நியூஸ் தொலைக்காட்சி, செய்தி வெளியிட்டுள்ளது.

இது பெரும்பாலும் உண்மையாகவே இருக்க அதிக வாய்ப்புள்ளது. இருந்தபோதிலும், ஃபேஸ்புக்கில் அதிகளவு ஷேர் செய்யப்படுவதால், இதுதொடர்பாக ஏதேனும் செய்தி, ஏப்ரல் 3ம் தேதி வெளியாகியுள்ளதா என்று கூகுளில் தேடி பார்த்தோம்.

அப்போது, பாலிமர் நியூஸ் மட்டுமின்றி, மேலும் பல ஊடகங்கள் வெளியிட்ட செய்தி, வீடியோ உள்ளிட்டவற்றின் இணைப்புகள் கிடைத்தன. ஆதார படம் கீழே தரப்பட்டுள்ளது.

இதுபற்றி பாலிமர் நியூஸ் இணையதளம் வெளியிட்ட செய்தியின் விவரம் அறிய இங்கே கிளிக் செய்யுங்கள். இதேபோல, பாலிமர் நியூஸ் தனது அதிகாரப்பூர்வ யூ டியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Archived Link

செய்தியின் சுருக்கம் பின்வருமாறு:
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் சிலர், திருச்சியில் இருந்து ரூ.5 கோடி பணத்தை காரில் பதுக்கிச் செல்வதாக திருச்சி ஐஜி அலுவலகத்தில் இருந்து பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன்பேரில், ஏப்ரல் 2ம் தேதி நள்ளிரவு, பெரம்பலூர் – அரியலூர் இடையே உள்ள பேரளி என்ற இடத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின், கார் ஒன்று வந்தது. அதனை மடக்கி சோதனையிட்டபோது, உள்ளே பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.2.10 கோடி பணம், கைப்பற்றப்பட்டது.

இதன்பேரில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட முன்னாள் செயலாளர் தங்கதுரை, மாநில நிர்வாகி பிரபாகரன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

முடிவு:
எனவே, உரிய ஆதாரங்களுடன் மேற்கண்ட செய்தி வீடியோ உண்மைதான் என உறுதி செய்யப்படுகிறது. இது உண்மை என்பதாலும், தேர்தல் நேரம் என்பதாலும் ஃபேஸ்புக்கில் அதிகம் பேரால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

Avatar

Title:காரில் ரூ.2.10 கோடி பதுக்கிய விடுதலைச் சிறுத்தை பிரமுகர்கள்!

Fact Check By: Parthiban S 

Result: True