மத்தியப் பிரதேசத்தில் பள்ளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இஸ்லாமியர்! – துணிந்து பொய் சொல்லும் ஃபேஸ்புக் பதிவு!

குற்றம் | Crime சமூக ஊடகம் | Social

மத்தியப் பிரதேசத்தில் பள்ளி வாசலில் நின்றுகொண்டிருந்த 7 வயது சிறுமியை இஸ்லாமியர் ஒருவர் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

MP GIRL 2.png

Facebook Link I Archived Link

உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்ட, உயிருக்குப் போராடும் குழந்தை ஒன்றின் படம் பகிரப்பட்டுள்ளது. அந்த படத்தின் மீது, மத்தியப்பிரதேச மாநிலத்தில் பள்ளி வாயிலில் பொற்றோர் வருகைக்காக காத்திருந்த 7 வயது சிறுமி கற்பழிப்பு… நாடு முழக்க கண்டனம் இல்லை, போஸ்டர் இல்லை, போராட்டம் இல்லை, மீம்ஸ் இல்லை, ஏனெனில் கற்பழித்தவன் முகம்மது இர்பான். பாதிக்கப்பட்டது ஹிந்து குழந்தை” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, முத்து கிருஷ்ணன் என்பவர் 2019 ஜூலை 2ம் தேதி வெளியிட்டுள்ளார். இது உண்மை என்று கருதி பலரும் இந்தப் பதிவைப் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இந்த படத்தைப் பார்க்கும்போது அந்த குழந்தைக்கு என்ன ஆனதோ என்று நெஞ்சு பதைபதைக்கிறது. குணமாகி மீண்டு வரவேண்டும் என்று பிரார்த்திக்க தோன்றுகிறது. அதேநேரத்தில், அதில் உள்ள தகவலை படிக்கும் போது அந்த குழந்தைக்கு எதிராக செயல்பட்ட கயவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது.

இந்த தகவல் உண்மைதானா என்று ஆய்வு செய்தோம். படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இதே படம் கடந்த ஆண்டு ஒரு ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டது தெரிந்தது. ஆனால், அந்த பக்கத்தில் குழந்தை பற்றி எந்த தகவலும் இல்லை.

Archived Link

இந்த படத்தை, yandex.com-ல் பதிவேற்றித் தேடினோம். அப்போது, ஷேர்சாட்.காமில் இந்த படம் பகிரப்பட்டது தெரிந்தது. ஆனால், அதன் மீது ஹிந்தியில் ஏதோ எழுதப்பட்டு இருந்தது. அந்த படத்தை நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ இந்தி பிரிவுக்கு அனுப்பி அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்று கேட்டோம்.

MP GIRL 3.png

“உடல்நலம் பதிக்கப்பட்டு உயிருக்குப் போராடும் இந்த குழந்தையின் உயிரைக் காப்பாற்றுங்கள்… நீங்கள் பண உதவி செய்ய வேண்டியது இல்லை. இந்த படத்துக்கு லைக் கொடுத்தால் ஒரு ரூபாய், கமெண்ட் செய்தால் ரூ.50, ஷேர் செய்தால் ரூ.500 ஃபேஸ்புக் வழங்கும்” என்று குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்தனர்.

நம்முடைய தேடலில் இந்த குழந்தை யார், என்ன பாதிப்பு என்று கண்டறிய முடியவில்லை. அதே நேரத்தில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டது போன்று இஸ்லாமியர் ஒருவரால் பாலியல் பாத்காரம் செய்யப்பட்ட குழந்தை இல்லை என்பதும் உறுதியானது.

அதே நேரத்தில், மத்தியப் பிரதேசத்தில் வேறு ஏதாவது பள்ளி குழந்தை பாலியல் பலாத்காரம் நடந்ததா, அது தொடர்பாக இஸ்லாமியர் யாராவது கைது செய்யப்பட்டுள்ளார்களா என்று ஆய்வு செய்தோம்.

என்.டி.டி.வி இணைய தளத்தில் ஜூன் 25ம் தேதி வெளியான செய்தி ஒன்று கிடைத்தது. அதில், ஐந்து வயது பழங்குடி இன சிறுமி கடத்தி பாலியல் பலாத்காரம் என்று குறிப்பிட்டிருந்தனர். ஆனால், இந்த விவகாரத்தில் யாரும் கைது செய்யப்பட்டதாக தகவல் இல்லை. யார் கடத்திச் சென்றார்கள் என்று அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருவதாக குறிப்பிட்டிருந்தனர்.

குற்றவாளி கைது செய்யப்பட்டானா என்று தொடர்ந்து தேடியபோது, இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட மற்றொரு செய்தி கிடைத்தது. ஜூன் 28ம் தேதி வெளியான அந்த செய்தியில், ஐந்து வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக 24 வயதான சந்தோஷ் மர்காம் என்ற போலீஸ் சமையல்காரரை கைது செய்துள்ளனர். குற்றத்தை சந்தோஷ் ஒப்புக்கொண்டதாக அந்த செய்தியில் குறிப்பிட்டிருந்தனர்.

நம்முடைய ஆய்வில், மத்திய பிரதேசத்தில் குழந்தைகள், சிறுமிகளை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யும் சம்பவம் அதிக அளவில் நடப்பதும் தெரிந்தது. ஜூன் 9ம் தேதி நான்கு வயது குழந்தையிடம் பாலியல் அத்துமீறல் நடந்துள்ளது. அதற்கு ஒரு நாளைக்கு முன்பு 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார். 

இருப்பினும், “முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் தற்போது குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல் சம்பவம் குறைந்துள்ளதாகவும், முற்றிலும் தடுக்க காங்கிரஸ் அரசு அனைத்து நடவடிக்கையையும் எடுத்துள்ளதாக” மாநில அமைச்சர் ஒருவர் விளக்கம் கொடுத்த செய்தியும் கிடைத்தது. அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

நாம் மேற்கொண்ட ஆய்வில், 

1) மத்தியப் பிரதேசத்தில் பள்ளியில் காத்திருந்த மாணவி கடத்தப்பட்டதாக எந்த செய்தியும் கிடைக்கவில்லை.

2) பெற்றோருடன் தூங்கிக்கொண்டிருந்த, ஐந்து வயது பழங்குடி இன சிறுமியைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பான செய்தி கிடைத்துள்ளது.

3) இந்த விவகாரத்தில் போலீஸ் சமையல்காரர் சந்தோஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

4) மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள படம் மிகவும் பழைய படம். அந்த குழந்தை யார் என்ற விவரம் கிடைக்கவில்லை.

சமூக ஊடகத்தில் இருந்து பழைய புகைப்படத்தை எடுத்து, குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், அதை இஸ்லாமியர் ஒருவர் செய்ததாகவும், ஹிந்து குழந்தை என்பதால் யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை என்றும் தவறான பிரசாரம் செய்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அது எப்படி கொஞ்சம் கூட மனதில் சிறு நெருடல், பயமின்றி உயிருக்கு போராடும்  ஒரு சிறு குழந்தையின் படத்தை வெளியிட்டு, தவறான கருத்தை பகிர முடிகிறதோ… 

முடிவு:தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட செய்திகள் தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:மத்தியப் பிரதேசத்தில் பள்ளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இஸ்லாமியர்! – துணிந்து பொய் சொல்லும் ஃபேஸ்புக் பதிவு!

Fact Check By: Chendur Pandian 

Result: False