சிஏபி சட்ட திருத்தத்துக்கு ஆதரவு தெரிவித்த ரஜினி?

அரசியல் சமூக ஊடகம்

குடியுரிமை சட்ட திருத்தத்தை வரவேற்று ரஜினி பேசியதாக புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

RAJINI 2.png
Facebook LinkArchived Link

ரஜினிகாந்த் படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “சிஏபி-க்கு ரஜினி ஆதரவு! நாட்டின் பாதுகாப்பிற்காக சில கடினமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டியள்ளது. குடியுரிமை சட்டத் திருத்தத்தை வரவேற்கிறேன். நாட்டு மக்கள் யாரும் அச்சமடைய தேவையில்லை. – ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களிடையே ரஜினி பேச்சு” என்று இருந்தது.

நிலைத்தகவலில், “பிறந்த நாளுக்கு கூட விடுப்பு எடுக்காமல் மோடி, அமித்ஷாவுக்கு கழுவி விடும் வேலை செய்து பிழைப்பு நடத்தும் இந்த எச்சையே வாழ்த்துவோம் பிரண்ட்ஸ்” என்று குறிப்பிட்டிருந்தனர்.

இந்த பதிவை, We support Ntk என்ற ஃபேஸ்புக் பக்கம் 2019 டிசம்பர் 12ம் தேதி பதிவிட்டிருந்தது. இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மத்திய பாரதிய ஜனதா ஆட்சியில் கொண்டுவரப்படும் பல்வேறு திட்டங்களை ரஜினிகாந்த்  வரவேற்றுள்ளார். பண மதிப்பிழப்பு தொடங்கி காஷ்மீருக்கான 370வது பிரிவு நீக்கம் வரை பல்வேறு விஷயங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அந்த வகையில் குடியுரிமை திருத்தத்துக்கும் ஆதரவு தெரிவித்திருக்கலாம் என்று நினைக்கும் வகையில் நியூஸ் கார்டு இருந்தது. மேலோட்டமாக பார்க்கும்போது  டிசைன், ஃபாண்ட் எல்லாம் அப்படியே புதிய தலைமுறை வெளியிடுவது போலவே உள்ளது. எடிட் செய்யப்பட்டது போலவே இல்லை. ஆனால், ரஜினிகாந்த் அப்படி பேசினார் என்று எந்த ஒரு ஊடகமும் செய்தி வெளியிடவில்லை. அவர் எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பதே உண்மை. இதனால், இந்த நியூஸ் கார்டு உண்மையானதுதானா என்று ஆய்வு மேற்கொண்டோம்.

RAJINI 3.png

புதிய தலைமுறை ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியான நியூஸ் கார்டுகளை ஆய்வு செய்தோம். அதில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்ற அச்சு அசல் நியூஸ் கார்டு ஒன்று இருந்தது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டில் டிசம்பர் 12 என்று குறிப்பிட்டிருந்தனர். புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டிலோ டிசம்பர் 11 என்று இருந்தது. 

புதிய தலைமுறை ஃபேஸ்புக் பக்கத்தில் கிடைத்த நியூஸ் கார்டில், “மாநில தலைமையின் அனுமதியின்றி, எந்த ஒரு அறிக்கையையும் பத்திரிகைகள், ஊடகங்கள், வாட்ஸ்அப் மூலமாக பகிர வேண்டாம் – மாவட்ட செயலாளர்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் அறிவுறுத்தல்” என்று இருந்தது. 

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டை புதிய தலைமுறை இந்த நியூஸ் கார்டை 12ம் தேதி வெளியிட்டுவிட்டு அகற்றிவிட்டதா என்ற சந்தேகம் எழுந்தது. இது குறித்து புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவு நிர்வாகியைத் தொடர்புகொண்டு பேசினோம். அவர், “இந்த நியூஸ் கார்டை நாங்கள் வெளியிடவில்லை. இது போலியானது. இந்த கார்டு போலியானது என்று எங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளோம்” என்று கூறி ட்விட்டர் லிங்கை கொடுத்தார்.

Archived Link

இது போலியானது என்று உங்களுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் என் பதிவிடவில்லை. அதில் பதிவிட்டிருந்தால் பலருக்கு குழப்பம் வந்திருக்காதே என்று கேட்டபோது, “ரஜினி ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக உள்ளார்கள். அதனால், அங்கே பதிவிட்டால் போதுமானதாக இருக்கும் என்று கருதினோம். நாங்கள் ட்விட்டரில் வெளியிட்ட அந்த பதிவை தற்போது ஃபேஸ்புக்கில் பலரும் ஷேர் செய்து வருகிறார்கள்” என்றார்.

புதியதலைமுறை நிர்வாகியிடம் பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் இந்த ஃபேஸ்புக் பதிவு மற்றும் புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டை fotoforensics.com என்ற இணையதளத்தில் பதிவேற்றி ஆய்வு செய்தோம். அப்போது, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள நியூஸ் கார்டில் பின்னணி டிசைனில் திருத்தங்கள் இருப்பது தெரிந்தது. எனவே, இது போலியானது என்பது தெரியவந்தது.

நம்முடைய ஆய்வில், குடியுரிமை திருத்த மசோதாவுக்கு ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்தார் என்று பகிரப்படும் நியூஸ் கார்டு போலியானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. “நாங்கள் அப்படி ஒரு கார்டை வெளியிடவில்லை” என்று புதிய தலைமுறை உறுதி செய்துள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:சிஏபி சட்ட திருத்தத்துக்கு ஆதரவு தெரிவித்த ரஜினி?

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •