“தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்காத பா.ம.க” – விஷம ஃபேஸ்புக் பதிவு!

அரசியல் சமூக ஊடகம்

சமீபத்தில் தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பா.ம.க பங்கேற்கவில்லை என்பது போன்ற ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

PMK 2.png

Facebook Link I Archived Link

தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு போன்று ஒன்று உள்ளது. அதில் மேல் பகுதியில் 10 சதவிகித இட ஒதுக்கீடு என்று உள்ளது. ஆதரவு தெரிவித்தவர்கள், எதிர்ப்பு தெரிவித்தவர்கள் என்று கட்சியின் பெயர்கள் வரிசையாக வெளியிட்டுள்ளனர். அதில், பா.ம.க பெயர் இல்லை. இதனால், கீழ் பகுதியில் “மரம் வெட்டி குரூப் எங்கடா காணும்” என்று கேட்டுள்ளனர்.

நிலைத் தகவலில், “எங்கடா மாங்கா பாய்ஸ்… பாஜக எதிர்த்தா mp சீட் கிடைக்காதா…” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த படம் மற்றும் பதிவை மாற்றியோசி Mattriyoci என்ற ஃபேஸ்புக் பக்கம் 2019 ஜூலை 8ம் தேதி வெளியிட்டுள்ளது. இதைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. தமிழகத்தில் அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அனைத்துக் கட்சிகளின் ஆலோசனையைப் பெற தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை 2019 ஜூலை 8ம் தேதி (திங்கட்கிழமை) கூட்டியது. இதில், ஆளும் கட்சியான அ.தி.மு.க மற்றும் தி.மு.க, காங்கிரஸ், பா.ஜ.க, கம்யூனிஸ்ட்டுகள், விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் பங்கேற்றன.

இந்த கூட்டத்தில் பா.ம.க பங்கேற்கவில்லை என்பது போன்று ஒரு தகவலை மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளனர். மேலும், ராஜ்ய சபா எம்.பி சீட் கிடைக்காமல் போய்விடும் என்பதால் பா.ம.க எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது போன்றும் கருத்து தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது உண்மையா என்று நம்முடைய ஆய்வை மேற்கொண்டோம்.

அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடர்பான செய்திகளை எல்லாம் ஆய்வு செய்தோம். அப்போது, சில செய்திகளில் பா.ம.க பெயர் இல்லை. சில செய்திகளில், பா.ம.க பங்கேற்றது என்பது போன்ற ஒரு வரி தகவல் நமக்குக் கிடைத்தன.

தொடர்ந்து தேடியபோது, பா.ம.க தலைவர் ஜி.கே.மணி பங்கேற்ற படம் மற்றும் கூட்டத்தில் அவர் தெரிவித்த கருத்து தொடர்பான செய்தி நமக்குக் கிடைத்தது. மின்னம்பலம் இணையதளம் வெளியிட்டிருந்த செய்தியில், பா.ம.க தலைவர் ஜி.கே.மணி கூட்டத்தில் பங்கேற்ற படத்தை வெளியிட்டிருந்தனர். இதன் மூலம், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பா.ம.க பங்கேற்றது உறுதியானது.

PMK 3.png

நியூஸ்18 தமிழ் வெளியிட்டிருந்த செய்தியில், “10 சதவிகித இட ஒதுக்கீட்டைத் தமிழக அரசு ஏற்கக் கூடாது” என்று பா.ம.க தலைவர் ஜி.கே.மணி வலியுறுத்தியதாகக் கூறப்பட்டுள்ளது.

PMK 4.png

மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், மாநிலங்கள் அவை உறுப்பினர் பதவி மறுக்கப்படும் என்பதால் பா.ம.க இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லையா என்று கேட்டிருந்தனர். தமிழகத்தில் காலியாகும் மாநிலங்கள் அவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் ஜூலை 18ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூலை 8ம் தேதி என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

PMK 5.png

 அனைத்துக் கட்சிக் கூட்டம் ஜூலை 8ம் தேதி மாலை நடந்தது. ஆனால், அதற்கு முன்பாக, அதாவது ஜூலை 6ம் தேதியே, மாநிலங்கள் அவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் அன்புமணி போட்டியிடுகிறார் என்ற அறிவிப்பு வெளியாகிவிட்டது.

Archived Link

வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான ஜூலை 8ம் தேதி அன்புமணி வேட்புமனு தாக்கல் செய்தார். ஜூலை 8ம் தேதி பிற்பகல் 3 மணியோடு வேட்புமனு தாக்கல் செய்தது நிறைவடைந்தது. இதனால், எம்.பி பதவி வாய்ப்பு பறிபோய்விடும் என்பதால் பா.ம.க பங்கேற்கவில்லை என்ற குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்பது உறுதியானது.

நம்முடைய ஆய்வில்,

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், பா.ம.க பங்கேற்றதற்கு ஆதாரமாக செய்திகள் கிடைத்துள்ளன.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஜி.கே.மணி பங்கேற்ற படம் கிடைத்துள்ளது.

ஜி.கே.மணி பேசிய பேச்சு பற்றிய குறிப்பு ஊடகங்களில் வெளியாகி உள்ளது.

அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாகவே, மாநிலங்கள் அவை உறுப்பினர் பதவிக்கு பா.ம.க சார்பில் அன்புமணி போட்டியிடுவார் என்று வெளியான அறிவிப்பு கிடைத்துள்ளது. 

நமக்கு கிடைத்த இந்த ஆதாரங்கள் அடிப்படையில், தமிழகத்தில் நடந்த 10 சதவிகித இடஒதுக்கீடு தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பா.ம.க பங்கேற்றதுடன், இட ஒதுக்கீட்டுக்கு எதிரான நிலைப்பாட்டை அறிவித்துள்ளது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:“தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்காத பா.ம.க” – விஷம ஃபேஸ்புக் பதிவு!

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •