
விபசார விடுதி நடத்திய நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்று ஒரு புகைப்படத்துடன் கூடிய தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

ஒன்பது பேர் தலைகுனிந்தபடி நிற்கின்றனர். அருகில் காவலர் ஒருவர் உள்ளார். நியூஸ்7 தமிழ் செய்தி வெளியிட்ட செய்தி போன்று தலைப்பு, லோகோ உள்ளது. ஆனால், தலைப்பு பிழையோடு இருந்தது.
படத்தின் கீழ், “கட்சி பூரா பொறுக்கி, ரவுடி, கொலைகாரன் வச்சிகிட்டு நீ நாட்ட திருத்த போரியா… முதல்ல உன் கட்சிய திருத்து” என்று குறிப்பிட்டு இருந்தனர்.
இந்த பதிவை, Thilaga Sivamoorthy என்பவர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
விபசார விடுதி நடத்தியதாக நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளார்களா, அது தொடர்பாக செய்தி வெளியாகி உள்ளதா என்று கூகுளில் தேடினோம். அதுபோல், எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. நியூஸ்௭ தமிழில் இது தொடர்பாக செய்தி வெளியாகி உள்ளதா என்று தேடினோம். எப்படி எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை.

பதிவில் உள்ள படத்தைப் பார்க்கும்போது அவர்கள் தமிழகத்தைச் சார்ந்தவர்கள் போலவே தெரியவில்லை. போலீசும் வெளிமாநில போலீஸ் போல தெரிந்தது. எனவே, படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். நம்முடைய தேடலில், இந்த படம் பற்றிய செய்திகள் கிடைத்தன. மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஆன்லைன் செக்ஸ் மோசடியில் ஈடுபட்டதாக பா.ஜ.க நிர்வாகி உள்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டதாகச் செய்திகள் கூறின.

இது தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டிருந்த செய்தியைப் பார்த்தோம். 2017ம் ஆண்டு இந்த சம்பவம் நடந்திருப்பது தெரிந்தது. அந்த செய்தியில், “ஆளும் பா.ஜ.க-வின் நிர்வாகி ஒருவர் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து ஆன்லைன் செக்ஸ் முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார். நான்கு பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்” என்று இருந்தது. தொடர்ந்து படித்த போது கைது செய்யப்பட்டவர் கட்சியின் அடிமட்டத்தில் உள்ள ஏதோ ஒரு நிர்வாகி இல்லை என்பது தெரிந்தது. கைது செய்யப்பட்டவர் பாரதிய ஜனதா கட்சியின் தாழ்த்தப்பட்டோர் பிரிவின் மாநில ஊடகப் பிரிவு பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட நீரஜ் சாக்யா என்பது தெரியவந்தது. இந்த செய்தியைப் படிக்க, படத்தைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
தமிழில் இந்த செய்தி வெளியாகி உள்ளதா என்று தேடினோம். அப்போது, லாலு பிரசாத் யாதவ் மகள் மிஸா பாரதி வெளியிட்ட ட்வீட்டை அடிப்படையாகக் கொண்டு புதிய தலைமுறை, ஏஷியா நெட் தமிழ் உள்ளிட்ட ஊடகங்கள் செய்தி வெளியிட்டது தெரிந்தது.
புதிய தலைமுறை வெளியிட்டிருந்த செய்தியில், (இதுவும் 2017 மே 21ம் தேதி வெளியாகி இருந்தது) “பா.ஜ.க தலைவர்களுக்கு ஆன்லைன் செக்ஸ் மோசடியில் தொடர்பு இருப்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. இத்தகைய செயல்களில் ஈடுபடுவதற்கு அவர்கள் எங்கு பயிற்சி பெற்றார்கள் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. பா.ஜ.க தலைவர்கள் சிலருக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ ஏஜெண்டுகளுடன் தொடர்பு இருப்பதாகத் தெரியவந்துள்ளது. பா.ஜ.க மற்றவர்களை நோக்கி விரல்களை நீட்டி குற்றம்சாட்டுவதற்கு முன், தனது தலைவர்களுக்கு ஆன்லைன் செக்ஸ் மோசடி போன்ற குற்றச்செயல்களில் எப்படி தொடர்பு ஏற்பட்டது, ஐ.எஸ்.ஐ ஏஜெண்டுகளுடன் தொடர்பு ஏற்பட்டது எப்படி என்பது பற்றி விளக்கம் அளிக்க வேண்டும்” என்று மிஸா பாரதி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியதாகக் குறிப்பிட்டு இருந்தனர். அந்த செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
நம்முடைய ஆய்வில்,
நாம் தமிழர் கட்சியினர் பாலியல் விடுதி நடத்தியது தொடர்பாக கைது செய்யப்பட்டதாக எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.
நியூஸ் 7 தமிழில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கைது தொடர்பாக எந்த செய்தியும் கிடைக்கவில்லை.
படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது படத்தில் உள்ளவர்கள் பா.ஜ.க நிர்வாகி உள்ளிட்டவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இவர்கள் 2017ம் ஆண்டு கைது செய்யப்பட்டது தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸ், புதியதலைமுறை, ஏஷியாநெட் வெளியிட்ட செய்திகள் நமக்குக் கிடைத்துள்ளன.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், விபசார விடுதி நடத்திய நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சென்னையில் கைது என்று வெளியான ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:விபசார விடுதி நடத்திய நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கைது: பரபரப்பு ஃபேஸ்புக் பதிவு
Fact Check By: Chendur PandianResult: False
