
தமிழக சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு பா.ஜ.க 660 இடங்களில் வெற்றி பெறும் என்று தமிழக பா.ஜ.க பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் கூறியதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

நாளிதழில் ஒன்ற வெளியான, “தமிழகத்தில் தனித்துப்போட்டியிட்டால் 660 இடங்களில் ஜெயிப்போம்! – பா.ஜ.க பொதுச் செயலாளர் பேட்டி” என்ற செய்தியின் புகைப்படத்துடன் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், இந்த அறிவாளியை வைத்திருக்கும் பாஜக தமிழகத்தில் வெற்றி பெற போகிறதாம் 660 தொகுதியிலும். முதலில் நன்றாக அரசியலை படித்துவிட்டு மேடைக்கு வரவும் சங்கிகளே” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை அதிரடி பஷீர் என்பவர் 2020 செப்டம்பர் 22ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழக பா.ஜ.க-வில் மிக விவரமாகக் கருத்துக்களை எடுத்து வைக்கும் கே.டி.ராகவன் தமிழகத்தில் எத்தனை சட்டமன்றத் தொகுதிகள் இருக்கிறது என்பது கூட தெரியாமல் பேசியது போன்ற தோற்றத்தை சமூக ஊடகங்களில் சிலர் உருவாக்க முயற்சித்திருப்பது தெரிகிறது. உண்மையில் ராகவன் அப்படி பேட்டி அளித்திருந்தால் ஊடகங்களில் தலைப்பு வேறு விதமாக இருந்திருக்கும்.
தமிழகத்தில் தனித்துப் போட்டியிட்டாலே பா.ஜ.க 60 இடங்களில் வெற்றி பெறும் என்று மாநில தலைவர் முருகன், பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் தொடர்ந்து பேசி வருகின்றனர்.

தமிழகத்தில் தனித்து போட்டியிட்டாலும் 60 தொகுதிகளில் வெல்வோம் என்று பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் பல இடங்களில் பேட்டி அளித்து வந்துள்ளார். அப்படி இருக்கும் போது திடீரென்று 660 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று ராகவன் கூறியதாக பகிரப்பட்டு வருகிறது. 60 என்று அவர் கூறியதில் கூடுதலாக ஒரு 6ஐ சேர்த்து 660 என்று விளையாட்டாக யாரோ உருவாக்கியது விஷமத்தனமாக பகிர்ந்து வருவதை காண முடிகிறது. பலரும் இந்த பதிவை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இது எந்த நாளிதழில் வெளியானது என்ற தகவல் இல்லை. அதனால் ஒப்பீடு செய்ய முடியவில்லை. அதே நேரத்தில் 60க்கு முன்பு ஆறு சேர்க்கப்பட்டிருப்பதை உண்ணிப்பாக பார்த்தால் கண்டுகொள்ள முடிகிறது. பத்திரிகை ஊடகம் பயன்படுத்திய ஃபாண்ட், அளவுக்கும், கூடுதலாக சேர்க்கப்பட்ட 6ன் ஃபாண்ட், அளவுக்கும் மெல்லிய வித்தியாசம் இருப்பதை காண முடிகிறது.
இது தொடர்பாக தமிழக பா.ஜ.க ஊடகப் பிரிவு நிர்வாகி எஸ்.எம்.பாலாஜியைத் தொடர்புகொண்டு கேட்டோம். அப்போது அவர் “இது போலியானது. கே.டி.ராகவன் அவ்வாறு கூறவில்லை. இது பற்றி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் கூட கே.டி.ராகவன் விளக்கம் அளித்துள்ளார்” என்றார்.

போலியான தகவல் என்று கே.டி.ராகவன் விளக்கம் அளித்துள்ள நிலையில் நேரடியாக அவரைத் தொடர்புகொண்டு விசாரித்தோம். அப்போது அவர், “நான் இப்படிப் பேசுவேன் என்று நினைக்கின்றீர்களா… போலியாக உருவாக்கி பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர். 60 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று நான் கூறியதை 660 எடிட் செய்து பலரும் பகிர்ந்து வருகின்றனர்” என்றார்.
இதன் அடிப்படையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் 660 இடங்களில் பா.ஜ.க வெற்றி பெறும் என்று மாநில பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் கூறியதாக பகிரப்படும் பதிவுகள் எடிட் செய்யப்பட்டது, தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு எடிட் செய்யப்பட்டது, தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:தமிழக சட்டமன்ற தேர்தலில் 660 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று ராகவன் கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: Altered
