இந்தியாவை விட இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை அதிகமா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

இந்தியாவை விட இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக இருப்பது போன்று பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்று பாலிமர் தொலைக்காட்சி வெளியிட்ட நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இங்கு உள்ள பெட்ரோல் டிசல் உயர்வு போராளிகளுக்கு சமர்ப்பணம்…..” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை Anandakumar என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஏப்ரல் 18ம் தேதி பதிவிட்டுள்ளார்.

உண்மைப் பதிவைக் காண: Facebook 

மற்றொரு பதிவில் இலங்கையில் பெட்ரோல் விலை உயர்வு தொடர்பாக பாலிமர் வெளியிட்டிருந்த நியூஸ் கார்டுடன் சினிமா காட்சியை இணைத்து பதிவிட்டிருந்தனர். பா.ஜ.க ஆதரவாளர்கள் “ராவணன் தேசத்தில் பெட்ரோல் விலை கம்மி, ராம ராஜ்ஜியத்தில் அதிகம்னு ஒரு குரூப் சுத்திட்டு இருந்தானுங்க அந்த மானஸ்தனுங்களை தேடுறேன்” என்று கூறுவது போன்று பதிவு உருவாக்கப்பட்டிருந்தது. இந்த பதிவை மோடி ரசிகன் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2022 மார்ச் 13ம் தேதி வெளியிட்டிருந்தது. இதையும் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இந்தியா மட்டுமின்றி இலங்கை, பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளும் தங்கள் நாட்டு நாணயத்தை ரூபாய் என்றே அழைக்கின்றன. இந்த நிலையில் இலங்கையில் பெட்ரோல் விலை உயர்ந்தது தொடர்பான செய்தியில் எந்த நாட்டு ரூபாய் மதிப்பு என்று குறிப்பிடாமல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டதால் சிலர் அதை தவறாகப் புரிந்துகொள்ள நேர்ந்ததைக் காண முடிகிறது.

சன் நியூஸ் வெளியிட்டிருந்த நியூஸ் கார்டில் இலங்கை மதிப்பு என்று குறிப்பிட்டிருந்தனர். ஆனால், பாலிமர் உள்ளிட்ட ஊடகங்கள் இலங்கை மதிப்பில் என்பதைக் குறிப்பிடத் தவறிவிட்டன. இலங்கையிலும் ரூபாய் என்று தானே குறிப்பிடுவார்கள், அதனால் மக்களாக புரிந்துகொள்வார்கள் என்று கருதியிருக்கலாம். ஆனால், மக்களில் சிலர் இதைத் தவறாகப் புரிந்துகொண்டு இந்தியாவை விட இலங்கையில் பல மடங்கு பெட்ரோல், டீசல் விலை உள்ளது போன்று பதிவிட்டு வருவதைக் காண முடிகிறது.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் ஒருவர் இனி ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு நம்முடைய மீனவர்கள் பெட்ரோல், டீசலை கடத்துவார்கள் என்று மிகவும் கொச்சையாக விமர்சித்திருந்தார். இந்தியாவில் ரூ.112க்கு விற்பனையாகும் பெட்ரோலை வாங்கிக் கொண்டு, இலங்கைக்கு கடத்திச் சென்று இலங்கை மதிப்பில் 338க்கு விற்றால், நஷ்டம்தான் வரும் என்ற அடிப்படை கூட தெரியாமல் பலரும் பதிவிட்டு, விமர்சனங்களை செய்து வருகின்றனர்.

உண்மைப் பதிவைக் காண: Facebook

மற்றொரு பதிவில், ரூ.254க்கு பெட்ரோல் விற்பனை செய்யப்படுவதாகவும், இது இந்தியா கிடையாது, இலங்கை என்று தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு பற்றி பேசுபவர்களை நக்கல் செய்து பதிவிடப்பட்டிருந்தது. இலங்கையின் ஒரு ரூபாய் என்பது இந்தியாவின் 25 பைசாவுக்கு கூட நிகரானது இல்லை. 2022 ஏப்ரல் 20 தேதி அடிப்படையில் இலங்கையின் ஒரு ரூபாய் என்பது இந்தியாவின் 23 பைசாவுக்கு சமம். அப்படி என்றால் இலங்கையில் அந்நாட்டு ரூபாய் மதிப்பில் ஒரு லிட்டர் பெட்ரோல் 338-க்கு விற்பனை செய்யப்படுகிறது என்றால், இந்திய மதிப்பில் ரூ.78.1-க்கு விற்பனை செய்யப்படுகிறது என்று அர்த்தம்.

இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110ஐ கடந்து விற்பனையாகிக் கொண்டிருக்கும் சூழலில் இலங்கையில் இந்திய மதிப்பில் ரூ.78.10க்குத்தான் பெட்ரோல் விற்பனையாகிறது. அதே போல் ஒரு லிட்டர் டீசல் இந்திய மதிப்பில் ரூ.67 ரூபாய்க்கு விற்பனையாகிறது. உண்மை இப்படி இருக்க, இலங்கையில் இந்தியாவைக் காட்டிலும் அதிக விலைக்கு பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவது போன்று சிலர் பதிவிட்டு வருவது தவறானது என்று உறுதியாகிறது.

ஊடகங்கள் செய்தி வெளியிடும் போது இலங்கை ரூபாய்க்கு என்று குறிப்பிட்டிருந்தால் மூலம் இந்த குழப்பம் வந்திருக்காது. அல்லது இந்திய மதிப்பில் அதை மாற்றி வெளியிட்டிருக்கலாம். அப்படி இல்லாமல், 338 ரூபாய்க்கு பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது என்று பொதுவாக குறிப்பிட்டதன் மூலம், நம்மை விட அதிக செலவு செய்து அவர்கள் பெட்ரோல் வாங்குகின்றனர் என்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருப்பது தெளிவாகிறது. இதன் அடிப்படையில் முழுமையான தகவல் இல்லாத பதிவாக இவை இருப்பது உறுதியாகிறது.

முடிவு:

இந்தியாவைக் காட்டிலும் இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக இருப்பது போன்று பகிரப்படும் தகவல் தவறானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:இந்தியாவை விட இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை அதிகமா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

Leave a Reply