இந்திய அரசியல்வாதிகள் பற்றி சுந்தர் பிச்சை ஃபேஸ்புக்கில் பதிவிட்டாரா?

அரசியல் சமூக ஊடகம்

இந்திய அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் பற்றி சுந்தர் பிச்சை கருத்து கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Sundar 2.png
Facebook LinkArchived Link

சத்தியம் தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு போல பகிரப்பட்டுள்ளது. அதில் சுந்தர் பிச்சை வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவை அவர்கள் வெளியிட்டுள்ளது போல அந்த நியூஸ் கார்டு உள்ளது. 

அதில், “ஒரு அரசியல் வாதியால் இரண்டு இடங்களில் தேர்தலில் போட்டியிட முடியும். ஆனால் நாம் இரு இடங்களிலிருந்து வாக்களிக்க முடியாது. நீங்கள் சிறையில் இருந்தால் உங்களுக்கு ஓட்டுரிமை இல்லை. ஆனால், அரசியல்வாதி சிறையிலிருந்துகொண்டே தேர்தலில் போட்டியிடலாம். நீங்கள் ஒரு முறை  சிறை வாசம் அனுபவித்து விட்டால் அரசாங்க வேலையை கனவில் கூட நினைத்து பார்க்க முடியாது. அதே நேரம் அரசியல்வாதி பல முறை சிறை சென்றிருந்தாலும் பிரதம மந்திரியாகவோ, ஏன் ஜனாதிபதியாகவோ கூட ஆகலாம். ஒரு வங்கியில் சாதாரண வேலைக்கு பட்டதாரியாக இருக்க வேண்டும். ஆனால், கல்வி அறிவே இல்லை என்றாலும் அரசியல்வாதியால் இந்தியாவின் நிதி அமைச்சர் ஆக முடியும். இந்த நிலையிலிருந்து மாற்றத்தை விரும்புகிறீர்களா? இந்த செய்தியை மற்றவர்களுக்கு பகிர்ந்து ஆதரவளியுங்கள்” என்று உள்ளது.

நிலைத் தகவலில், “சுந்தர் பிச்சை வெளிநாட்டில் இருப்பதால் தைரியமாக உண்மையை எழுதுகிறார் போல” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை, R.s. Manoharan என்பவர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் 30 நவம்பர் 2019 அன்று வெளியிட்டுள்ளார். 

உண்மை அறிவோம்:

இந்திய கல்வி முறை, நுழைவுத் தேர்வு ஏன் சீமான் பற்றி எல்லாம் சுந்தர் பிச்சை கருத்து கூறியதாக சமூக ஊடகங்களில் பல வதந்திகள் பரவிக்கொண்டே இருக்கின்றன. ஆனால், அவை அனைத்தும் பொய்யான பதிவு என்று நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் பிரிவில் தொடர்ந்து கட்டுரை வெளியிட்டு வருகிறோம். 

இந்திய அரசியல் பற்யோ, கல்வி பற்றியோ சுந்தர் பிச்சை இதுவரை எந்த ஒரு கருத்தையும் வெளியிட்டது இல்லை என்று நம்முடைய கட்டுரைகளில் தெளிவாக ஆதாரத்தோடு நிரூபித்திருக்கிறோம்.

சீமானை கண்டித்த சுந்தர் பிச்சை
இந்தியா தொழில்நுட்பத்தை நோக்கி முன்னேற வேண்டும்!
திறமைசாலிகளை அழிக்க உருவாக்கப்பட்டது நீட்

தற்போது இந்திய அரசியல் மற்றும் அரசியல்வாதிகளை விமர்சித்து சுந்தர் பிச்சை கருத்து தெரிவித்துள்ளது போன்ற பதிவை வெளியிட்டுள்ளனர். சத்தியம் டி.வி லோகோவோடு பகிரப்படுவதால் தொலைக்காட்சி வெளியிட்டது என்று கருதி பலரும் இதை ஷேர் செய்கின்றனர்.

சுந்தர் பிச்சை ஃபேஸ்புக்கில் தன்னுடைய பெயரை தமிழில் வைத்துள்ளது போலவும் தமிழில் பதிவிட்டது போலவும் போட்டோ மார்ஃபிங் செய்துள்ளனர். எனவே, உண்மையில் அந்த பதிவை அவர் எப்போது வெளியிட்டார் என்பதை இதில் கண்டறிய முடியவில்லை.

சுந்தர் பிச்சையின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளாரா என்று காண முயற்சித்தோம். ஆனால், அதிகாரப்பூர்வ பக்கம் என்று எதுவும் இல்லை. சுந்தர் பிச்சை என்ற ஃபேஸ்புக் ஐ.டி ஒன்று கிடைத்தது. அதில் ஆண்டுக்கு ஒரு முறை பதிவிட்டிருந்தார். சுந்தர் பிச்சை அவருடைய மனைவியுடன் இருக்கும் பல படங்களும் அதில் இருந்தன. எனவே, அது சுந்தர் பிச்சையின் பக்கமாக இருக்கலாம் என்று தெரிகிறது. அதில் 2015க்குப் பிறகு எந்த பதிவும் இல்லை. அதே நேரத்தில் சுந்தர் பிச்சை ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கக் கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகத்தில் சுந்தர் பிச்சை கூறியதாக இடம் பெற்ற கருத்தின் முதல் வரியை மட்டும் டைப் செய்து தேடினோம். அப்போது, இந்த பதிவு சில ஆண்டுகளாகவே சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவது தெரிந்தது. இந்த பதிவை சத்தியம் டிவி 2016ம் ஆண்டு வெளியிட்டதும் தெரிந்தது. ஆனால், சுந்தர்பிச்சைதான் இதை கூறினார் என்பதற்கு அவர்கள் எந்த ஒரு ஆதாரத்தையும் அளிக்கவில்லை. 

Sundar 3.png
Facebook LinkArchived Link

கூகுளில் “இந்திய அரசியல் பற்றி சுந்தர் பிச்சை ஃபேஸ்புக்கில் பதிவு” என்று ஆங்கிலத்தில் டைப் செய்து தேடியபோது, இது தொடர்பாக பல உண்மை கண்டறியும் ஆய்வுகள் நடந்திருப்பது தெரிந்தது. மேலும், சுந்தர் பிச்சையின் ஃபேஸ்புக் பதிவு என்று பகிரப்படும் போட்டோ கார்டு நமக்கு கிடைத்தது.

சுந்தர் பிச்சை என்பதை ஆங்கிலத்தில் Sundar Pichai என்று எழுதுகிறார். சுந்தரில் A வர வேண்டும். ஆனால், இந்த ஃபேஸ்புக் போஸ்டில் சுந்தர் என்பதில் E  உள்ளது. இதுவே இந்த போஸ்ட் போலியானது என்பதை உறுதி செய்தது. இது பற்றி நம்முடைய முந்தைய கட்டுரைகளில் கூட நாம் எழுதியிருக்கிறோம். சுந்தர் பிச்சையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தின் படம் கீழே கொடுத்துள்ளோம்.

Search LinkArticle LinkArchived Link

இந்திய அரசியல் பற்றி சுந்தர் பிச்சை பேசினாரா கூகுளில் தேடிய போது உண்மை கண்டறியும் ஆய்வுகளைத் தவிர்த்து வேறு எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை. நாம் சில மாதங்களுக்கு முன்பு ஆய்வு மேற்கொண்ட போதே இந்திய அரசியல் பற்றி சுந்தர் பிச்சை எந்த கருத்தையும் கூறியது இல்லை என்பதை நிரூபித்திருந்தோம். மேலும், சின்ன சின்ன கட்சித் தலைவர்கள் சொன்னது எல்லாம் மிகப்பெரிய செய்தியாக வெளியாகிறது. ஆனால், கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ கூறியிருந்தால் அதை ஒரு பிட் செய்தியாகக் கூடவா வெளியிட்டிருக்க மாட்டார்கள்?.. இதன் மூலம் அப்படி சுந்தர் பிச்சை கூறவில்லை என்பது உறுதியானது.

நம்முடைய ஆய்வில்,

இந்த பதிவை சத்தியம் தொலைக்காட்சி 2016ம் ஆண்டு வெளியிட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு எந்த ஒரு ஆதாரத்தையும் அவர்கள் அளிக்கவில்லை.

சுந்தர் பிச்சை என்று இருந்த ஃபேஸ்புக் பக்கத்தில் மேற்கண்ட பதிவில் இடம் பெற்றது போன்ற எந்த ஒரு கருத்தையும் சுந்தர் பிச்சை கூறவில்லை.

இந்திய அரசியல் பற்றி சுந்தர் பிச்சை கருத்து கூறியதாக ஒரு சிறு பிட் செய்தி கூட நமக்கு கிடைக்கவில்லை.

பிழையோடு யாரோ போலியாக சுந்தர் பிச்சை பெயரில் ஃபேஸ்புக் போஸ்ட் படத்தை உருவாக்கி உள்ளனர் என்ற உண்மை கண்டறியும் ஆய்வுகள் ஆங்கிலத்தில் வந்திருப்பது நமக்கு கிடைத்துள்ளது.

சுந்தர் பிச்சை இந்திய அரசியல், நுழைவுத் தேர்வு, அரசியல்வாதிகள், சீமான் பற்றி கருத்து கூறினார் என்று எல்லாம் தொடர்ந்து வதந்திகள் பரப்பப்பட்டு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், இந்திய அரசியல் பற்றி சுந்தர் பிச்சை கூறியதாக பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:இந்திய அரசியல்வாதிகள் பற்றி சுந்தர் பிச்சை ஃபேஸ்புக்கில் பதிவிட்டாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

1 thought on “இந்திய அரசியல்வாதிகள் பற்றி சுந்தர் பிச்சை ஃபேஸ்புக்கில் பதிவிட்டாரா?

Comments are closed.