
‘’கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி கூடிய ராம பக்தர்கள்,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இந்த பதிவில், ராம பதாகைகளை ஏந்தியபடி நிற்கும் நபர்களின் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’ ஊரடங்கில் கூட்டம் கூட்டமாக, சமூக இடைவெளி இல்லாமல் இருக்கும் இவர்கள் முட்டாள்களா??
இல்லை.. வாழ்வாதாரத்துக்கு வழி இல்லாத நிலையிலும் பட்டினியோடு வீட்டிலேயே இருப்பவர்கள் முட்டாள்களா??
என்ன செய்ய.. வெளிய வராதேனு போலீஸ் அடிச்சாலும், அடிச்சே கொன்னாலும் நமக்கு என்ன பிரச்சனை,’’ என்று எழுதியுள்ளனர்.
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவில் எழுப்பப்பட்டுள்ள அரசியல் கருத்து பற்றி நாம் எந்த குறையும் சொல்லவில்லை. அரசியல் பேச அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால், அதனுடன் பகிர்ந்துள்ள புகைப்படம் பற்றி மட்டுமே நாம் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.
காரணம், அயோத்தியில் பெரும் பரபரப்புக்கு இடையே, ஆகஸ்ட் 5ம் தேதியன்று பிரதமர் மோடி ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பங்கேற்றார். இதையொட்டி, ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், ஏராளமான புகைப்படங்கள், வீடியோக்கள் பகிரப்படுகின்றன. அவற்றில் பலவும் ராமர் கோயில் அடிக்கல் நாட்டும் விழாவுக்கு சம்பந்தமே இல்லாதவையாக உள்ளன. பழைய புகைப்படங்களை எடுத்து, ‘அயோத்தியில் கூடிய பாஜகவினர், ராம சேனைகள்,’ என்றெல்லாம் எழுதி வருகின்றனர்.
அப்படி எழுதப்பட்ட தவறான தகவல்தான், மேற்சொன்ன ஃபேஸ்புக் பதிவிலும் இடம்பெற்றுள்ளது.
உண்மையில் இந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்பது பற்றி கண்டறிய, இதனை கூகுளில் பதிவேற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது, இது கடந்த 2018ம் ஆண்டு டெல்லி ராமலீலா மைதானத்தில் எடுக்கப்பட்டதாக, தெரியவந்தது.
2018, டிசம்பர் மாதம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும்படி மத்திய அரசை வலியுறுத்தி, டெல்லி ராமலீலா மைதானத்தில், விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். Dharma Sabha என்ற பெயரில், அந்த போராட்டம் நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் ஒன்றுதான் மேலே உள்ள ஃபேஸ்புக் பதிவில் இணைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான வீடியோ காட்சி ஒன்றையும் கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.
எனவே, 2018ம் ஆண்டில் நடைபெற்ற வேறொரு நிகழ்வின் புகைப்படத்தை எடுத்து, தற்போதைய அயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டும் நிகழ்வுடன் தொடர்புபடுத்தி பகிர்ந்துள்ளனர் என்று தெளிவாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் உள்ள புகைப்படம் தவறானது என நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி கூடிய ராம பக்தர்கள்: உண்மை என்ன?
Fact Check By: Pankaj IyerResult: False
