மக்கள் கலை இலக்கிய கழகத்தின் செயலாளரும் மதுவுக்கு எதிராக தொடர்ந்து பாடல்களை பாடி வருபவருமான கோவன், புதுச்சேரியில் மது அருந்தும்போது மதுபானக் கடை ஊழியர்களுடன் ஏற்பட்ட மோதலில் தாக்கப்பட்டார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

இணைய ஊடகம் ஒன்றின் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், "சமூக ஆர்வலர் கோவனுக்கு சரமாரி அடி, உதை! புதுச்சேரியில் நண்பர்களுடன் மது அருந்தும் போது மதுபான கடை ஊழியர்கள் உடன் மோதல்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நியூஸ் கார்டை MGR Memes என்ற ஃபேஸ்புக் பக்கம் 2022 மே 14ம் தேதி பதிவிட்டுள்ளது. இதை பலரும் தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மதுக்கடைகளுக்கு எதிராக புரட்சிகர பாடல்களை பாடி பெயர் பெற்றவர் கோவன். கலை மக்கள் இலக்கிய கழகத்தைச் சேர்ந்த அவர் பாடல்கள் மூலம் அரசுக்கு எதிரான கருத்தை பரப்புவதாக பல முறை கைது செய்யப்பட்டுள்ளார். அவரே மதுக் கடையில் தகராறு செய்தார் என்று நியூஸ் கார்டு வைரலாக பரவி வரவே அது பற்றி ஆய்வு செய்தோம்.

புதுச்சேரியில் கோவன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா, அவர் மீது வழக்குப் பதிவு எதுவும் செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தோம். நியூஸ் கார்டில் எங்கு, எப்போது என எந்த தகவலும் இல்லை. எனவே, புதுச்சேரியில் பணியாற்றி வரும் முன்னணி ஊடகம் ஒன்றின் செய்தியாளரைத் தொடர்புகொண்டு இப்படி ஏதும் சம்பவம் நடந்ததா என்று கேட்டோம். அப்படி எந்த ஒரு சம்பவமும் நடைபெறவில்லை என்று அவர் நம்மிடம் தெரிவித்தார்.

உண்மைப் பதிவைக் காண: Facebook

இணைய ஊடகத்தில் இந்த நியூஸ் கார்டு வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். அதில், போலியானது (FAKE) எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருந்தனர். அதே நேரத்தில் கோவன் தரப்பைத் தொடர்புகொள்ள முயற்சி செய்தோம். அப்போது, கலை மக்கள் இலக்கிய கழகம் சார்பில் இது தொடர்பாக விளக்கம் வெளியிடப்பட்டிருப்பதாக அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர். அதில், “எமது தோழர்கள் மீதும் குறிப்பாக தோழர் கோவன் மீது களங்கம் விளைவிக்கும் வகையில் பொய்யான செய்திகளை வெளியிட்டு அவதூறு பரப்புகின்றனர்.

குறிப்பாக தோழர் கோவன் மது அருந்தியதாகவும், அங்கே தகராறு ஏற்பட்டதாகவும் தவறாக சித்தரித்து சமுக ஊடகங்களில் செய்தி ஒன்றை வெளியிட்டு உள்ளனர். இது முழுக்க முழுக்க காவிகளாலும் அவர்களைச் சார்ந்தவர்களாலும் திட்டமிட்டு பரப்பப்படும் பொய் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம். சங்கிகளின் இந்த திட்டமிட்ட அவதூறு செய்திக்கு எதிர்வினையாற்றிய தோழர்களுக்கும், நண்பர்களுக்கு நன்றி” என்று குறிப்பிட்டிருந்தனர்.

எந்த ஊடகத்தின் பெயரில் நியூஸ் கார்டு பரவி வருகிறதோ, அந்த ஊடகமே இது போலியானது என்று தெரிவித்துள்ளது. கோவன் சார்ந்துள்ள கலை மக்கள் இலக்கிய கழகம் இந்த தகவலை போலியானது என்று உறுதி செய்துள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

பாடகர் கோவன் மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்டதாக பரவும் தகவல் மற்றும் நியூஸ் கார்டு தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:புதுச்சேரி மதுபானக் கடையில் பாடகர் கோவன் தாக்கப்பட்டதாக பரவும் வதந்தி!

Fact Check By: Chendur Pandian

Result: False