மு.க.ஸ்டாலினுக்கு சவால் விடுத்த ராமதாஸ்: உண்மை அறிவோம்!

அரசியல் சமூக ஊடகம்

‘’மு.க.ஸ்டாலினுக்கு சவால் விடுத்த ராமதாஸ்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

MKS For CM

எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை நவம்பர் 19, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதில், பாமக நிறுவனர் ராமதாஸ் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’முரசொலி நிலம் பஞ்சமி நிலம் அல்ல என நிரூபித்தால் அரசியலில் இருந்தே விலக தயார். மீறினால் அது நான் என் தாயுடன் உறவு வைப்பதற்கு சமம்,’’ என்று எழுதியுள்ளனர். இது பார்ப்பதற்கு உண்மையிலேயே ராமதாஸ் சொன்னதைப் போலவே உள்ளதால், ஃபேஸ்புக் பயனாளர்கள் குழப்பமடைந்துள்ளனர். பலர் இதனை உண்மை என நம்பி வைரலாகவும் ஷேர் செய்ய தொடங்கியுள்ளனர். 

உண்மை அறிவோம்:
திமுக.,வின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி அலுவலகம் சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ளது. எனினும், இந்த அலுவலகம் பஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஒன்று என பல தரப்பிலும் புகார் கூறப்படுகிறது. இதுபற்றி சமீபத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து வெளியிட அதற்கு மு.க.ஸ்டாலின் பதில் கூறி பட்டா ஆவணங்களை வெளியிட, தமிழக அரசியலில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. 

Vikatan News LinkJaya Plus News Link Maalaimalar News Link 

இந்த விவகாரம் தொடர்பாக தற்போது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இதில், பாஜக சார்பாக அதன் மாநில செயலாளர் சீனிவாசன் முறையீடு செய்ய, திமுக சார்பில் உரிய விளக்கம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

Vikatan News Link News 7 Story Link 

 
இத்தகைய சூழலில்தான் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில் கூறப்பட்டுள்ளதுபோல, ராமதாஸ் எங்கேயும் சவால் விடவில்லை. ராமதாஸ், மு.க.ஸ்டாலின் என இருவருமே அரசியலை விட்டு விலக தயாரா என மாறி மாறி கேள்விக்கணைகள் தொடுத்து வருகிறார்களே தவிர, எந்த இடத்திலும் இதுபோல காரசாரமாக சவால் விடுத்துக் கொள்ளவில்லை.

அதிலும் குறிப்பாக, பெற்ற தாயுடன் உறவு வைப்பதற்குச் சமம் என்று ராமதாஸ் கூறியதாகப் பகிரப்படும் இந்த பதிவு தவறான தகவலாகும். இப்படி எந்த ஊடகத்திலும் செய்தி வெளியாகவில்லை. இதுதவிர, திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைப்பது பெற்ற தாயுடன் உறவு வைப்பதற்குச் சமம் என்று ராமதாஸ் பேசியதாகக் கடந்த சில ஆண்டுகளாகவே ஒரு தகவல் பகிரப்படுகிறது. அதன் நம்பகத்தன்மை பற்றி நாம் ஏற்கனவே ஆய்வு செய்து, முடிவுகளை சமர்ப்பித்துள்ளோம்.

Fact Crescendo Tamil Link 

தற்போதைய நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். உண்மை இப்படியிருக்க, அவர் சொல்லாததை சொன்னது போல தகவல் பகிர்ந்து ஃபேஸ்புக் பயனாளர்களை குழப்பியுள்ளனர். 

The Hindu News Link NewsToday Website Link 

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,

1) முரசொலி நில விவகாரத்தில் ராமதாஸ், மு.க.ஸ்டாலின் இருவரும் மாறி மாறி ஒருவருக்கு ஒருவர் சவால் விட்டுக் கொண்டதும், விமர்சித்துக் கொண்டதும் உண்மைதான். ஆனால், ‘முரசொலி இடம் பஞ்சமி நிலம் இல்லை என நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார். அப்படி செய்யவில்லை எனில் அது பெற்ற தாயுடன் உறவு கொள்வதற்குச் சமம்,’ என்று ராமதாஸ் கூறவில்லை.

2) முரசொலி இட விவகாரம் தற்போது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் முன்பாக விசாரணையில் உள்ளது.

3) ராமதாஸ் மீதுள்ள தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்வின் பேரில் அவர் சொல்லாததை சொன்னது போல கூறி பதிவு வெளியிட்டு ஃபேஸ்புக் பயனாளர்களை குழப்பியுள்ளனர்.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவு தவறான தகவல் என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:மு.க.ஸ்டாலினுக்கு சவால் விடுத்த ராமதாஸ்: உண்மை அறிவோம்!

Fact Check By: Pankaj Iyer 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •