
சொமேட்டோ நிறுவனத்தின் வியாபாரம் மற்றும் பங்குகள் ஒரே நாளில் 55 சதவிகிதம் சரிந்துவிட்டதாக சமூக ஊடகங்களில் ஒரு பதிவு அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

நகைச்சுவை நடிகர்கள் வடிவேலு, விவேக் இணைந்து நடித்த படத்தின் காட்சி ஒன்றைப் பகிர்ந்துள்ளனர். அதில், வடிவேலு படத்தின் மீது ஃபேஸ்புக் போராளிகள் என்று எழுதப்பட்டுள்ளது. விவேக் படத்தின் மீது சொமேட்டோ ஓனர் என்று எழுதப்பட்டுள்ளது.
நிலைத் தகவலில், “Zomato வின் வியாபாரம் & பங்குகள் ஒரே நாளில் 55% சரிவு -செய்தி.
இப்ப அந்த காபி கடை காரன மாதிரி நானும் ஆத்துல விழுந்து சாகனும்.. அதானடா உங்க ஆச…?” என்று குறிப்பிட்டுள்ளனர். அதாவது, சொமோட்டோ உரிமையாளர் இந்த கேள்வியைக் கேட்பது போல வெளியிட்டுள்ளனர்.
இந்த பதிவை, Aravind Ramesh என்பவர் 2019 ஆகஸ்ட் 3ம் தேதி வெளியிட்டுள்ளார். இவரைப் போலப் பலரும் இந்த பதிவை பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சில தினங்களுக்கு முன்பு மத்தியப் பிரதேச மாநிலம், ஜபல்பூரைச் சேர்ந்த பண்டிட் அமித் சுக்லா எனும் வாடிக்கையாளர், சொமேட்டோ ஆப் மூலம் உணவு ஆர்டர் செய்தார். உணவை டெலிவரி செய்பவரின் பெயரை சொமேட்டோ நிறுவனம் அமித் சுக்லாவுக்கு அளித்தது. அதில், இஸ்லாமியர் பெயர் இருந்ததால், இந்து ஒருவர் எனக்கு டெலிவரி செய்ய வேண்டும் என்று கேட்டிருந்தார். ஆனால், அதற்கு சொமேட்டோ நிறுவனம் மறுத்துவிட்டது. இது குறித்து அமித் சுக்லா ட்விட்டரில் கருத்து பகிர்ந்திருந்தார். இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இதற்கு சமூக ஊடகத்தில் எதிர்ப்பு கிளம்பியது. அமித் சுக்லாவுக்கு சோமேட்டோ நிறுவனம் ட்விட்டரிலேயே பதில் அளித்திருந்தது. உணவுக்கு மதம் இல்லை… உணவே மதம்தான் என்று சோமேட்டோ நிறுவனம் அளித்திருந்த பதில் சமூக ஊடகத்தில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
ஆனால், நிலைமை தலைகீழாக மாறியது… அன் இன்ஸ்டால் சொமேட்டோ என்று தீவிர வலதுசாரிகள் ட்வீட் செய்தனர். அது ட்விட்டர் டிரெண்டிங்கில் முதல் இடத்தைப் பிடித்தது. இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இந்தநிலையில், சொமேட்டோ நிறுவனத்தின் வியாபாரம் மற்றும் பங்குகள் ஒரே நாளில் 55 சதவிகிதம் அளவுக்கு சரிந்துவிட்டதாக சமூக ஊடகங்களில் ஒரு தகவல் பரவிவருகிறது. ஃபேஸ்புக், ட்விட்டர் சமூக ஊடகங்களில் அது அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
பங்குச் சந்தையில் சொமேட்டோ பட்டியலிடப்பட்டுள்ளதா என்று பார்த்தோம். ஆனால், பங்குச் சந்தையில் சொமேட்டோ இல்லை. மும்பை, தேசிய பங்குச் சந்தை என எதிலும் இந்த நிறுவனம் பட்டியலிடப்பட்டதாக அதன் வருடாந்திர அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. அதனால், பங்குச் சந்தையில் சொமேட்டோ வீழ்ச்சியை சந்தித்தது என்பது ஆதாரமில்லாதது என்று தெரிந்தது. சொமேட்டோ நிறுவனத்தின் ஊடகத் தொடர்பு பக்கத்தைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
வியாபாரம் சரிந்ததா என்று ஆய்வு மேற்கொண்டோம். சோமேட்டோ இந்தியாவில் மட்டுமில்லை… 24 நாடுகளில் செயல்படுவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன் வணிகத்தை எதன் அடிப்படையில் கணித்து வெளியிட்டார்கள் ஆய்வு மேற்கொண்டோம். அது தொடர்பாக எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை.

விற்பனை சரிவு பற்றி சொமேட்டோ நிறுவனம் அறிவித்தால் தவிர அதை அறிய வேறு வழி இல்லை. அதனால், அந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பத்திரிகை செய்தி, ட்விட்டர், ஃபேஸ்புக் பக்கத்தில் ஆய்வு மேற்கொண்டோம். ஆனால், எதிலும் வியாபாரம் சரிவைச் சந்தித்ததாக குறிப்பிடவில்லை.
ஆனால், சொமேட்டோ தன்னுடைய செயல்பாட்டை இன்னும் விரிவாக்கம் செய்துள்ளதாக சொமேட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் ஜூலை 31ம் தேதி வெளியிட்ட ட்வீட்தான் கிடைத்தது.
அதனுடன், ஹலால் பற்றி சமூக ஊடகங்களில் பலரும் எழுப்பிய கேள்விக்கும் பதில் அளித்திருந்தனர். அதில், நாங்கள் உணவைத் தயாரிப்பவர்கள் இல்லை. உணவைத் தயாரிக்கும் ஹோட்டல்களில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு உணவைக் கொண்டுபோய் சேர்க்கும் பணியை மட்டுமே செய்கிறோம். ஹலால் உணவு என்று சொல்வது உணவகங்களின் விருப்பம்… அது உணவை கொண்டுபோய் சேர்க்கும் எங்களுடைய விருப்பம் இல்லை என்று குறிப்பிட்டு இருந்தனர்.
நம்முடைய தேடலில், இந்தி உள்ளிட்ட வேறு மொழிகளில் இதேபோன்று வதந்தி பரவி வருவது பற்றியும் அது உண்மை இல்லை என்றும் வெளியான செய்திகள் கிடைத்தன. அந்த செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
நம்முடைய ஆய்வில்,
சொமேட்டோ பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனம் இல்லை என்பது உறுதியாகி உள்ளது.
சொமேட்டோ தன்னுடைய விற்பனை பாதிக்கப்பட்டதாகவோ, சரிந்ததாகவே எந்த ஒரு அறிக்கையையும் வெளியிடவில்லை.
எந்த ஒரு அரசு, தனியார் கண்காணிப்பு அமைப்போ சொமேட்டோவின் மூலம் உணவு ஆர்டர் செய்யும் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்று கூறவில்லை.
உணவு விநியோக செயல்பாடுகள் தொடர்ந்து விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது என்று சொமேட்டோ நிறுவனத்தை நிறுவிய தீபிந்தர் கோயல் வெளியிட்ட ட்வீட் கிடைத்துள்ள.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில் சொமேட்டோ நிறுவனத்தின் பங்குகள் மற்றும் வியாபாரம் 55 சதவிகிதம் சரிவு என்ற தகவல் பொய்யானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:ஒரே நாளில் 55 சதவிகித சரிவை சந்தித்த சொமேட்டோ பங்கு விலை: ஃபேஸ்புக் பதிவால் பரபரப்பு
Fact Check By: Chendur PandianResult: False

காயத்ரி என்ற போலீஸ் அதிகாரி ஒரு கொடூரனை ஆணுறுப்பில் சுட்டதாக ஒரு முகநூல் பதிவு Viral ஆக ஷேர் செய்யப்படுகிறது. இதன் உண்மை தன்மையை கண்டறியும் படி உங்களை கேட்டுக்கொள்கிறேன் .
https://www.facebook.com/karthika099/photos/a.228893578016069/341787450060014/?type=3&theater