
நீட் தேர்வுக்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன் என்று ஊடகவியலாளர் செந்தில் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Facebook
ஊடகவியலாளர் செந்தில்வேல் புகைப்படத்துடன் தந்தி டிவி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “திமுகவை நம்பி ஏமாந்துவிட்டோம்- செந்தில்வேல்! நீட் தேர்வுக்கு எதிராக ஊடகவியலாளர் தமிழ் கேள்வி செந்தில்வேல் சாகும் வரை உண்ணாவிரதம்! அறிவிப்பு திமுக கொடுக்கும் பணம் இனி எனக்கு தேவையில்லை – செந்தில்வேல்” என்று இருந்தது.
இந்த பதிவை அம்மா சுப்பு என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 செப்டம்பர் 16, 2021 அன்று பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பா.ஜ.க-வுக்கு எதிராக கேள்வி கேட்பது, பேசுவது உள்ளிட்டவற்றை தொடர்ந்து செய்து வருபவர் செந்தில்வேல். இதைத் தொடர்ந்து அவரை விமர்சித்து பல பொய்யான பதிவுகள், நியூஸ் கார்டுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. நீட் விவகாரத்தில் அவர் கருத்து என்று ஒரு நியூஸ் கார்டு பகிரப்பட்டது. அது போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்திருந்தது.

இந்த சூழலில், மீண்டும் ஒரு நியூஸ் கார்டு தந்தி டிவி பெயரில் பரவத் தொடங்கியுள்ளது. பலரும் இதை ஷேர் செய்யவே, இது பற்றி ஆய்வு செய்தோம். நீட் தேர்வு விவகாரம் 2017ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து நீடிக்கிறது. கடந்த செப்டம்பர் 12ம் தேதி நீட் தேர்வு நடந்தது. அதற்கு அடுத்த நாள் தமிழ்நாடு சட்டப் பேரவையில் நீட் தேர்வு விலக்கு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. தேர்வு எழுதிய பிறகு சில மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். அதன் பிறகு மிகப் பெரிய விவகாரமாக உருவெடுத்துள்ளது.
நியூஸ் கார்டு அசல் போல இல்லை. தமிழ் ஃபாண்ட் வழக்கமாகத் தந்தி டிவி பயன்படுத்துவது போல் இல்லை. மேலும் வாக்கிய அமைப்பிலும் பிழை இருந்தது. மேலும் பின்னணியில் இருக்கும் தந்தி டிவி வாட்டர் மார்க் லோகோவும் இல்லை. இவை எல்லாம் இந்த நியூஸ் கார்டு உண்மையானது இல்லை என்பதை உறுதி செய்தன.

ஆதாரப்பூர்வமாக உறுதி செய்ய ஆய்வை தொடர்ந்தோம். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட இந்த நியூஸ் கார்டு செப்டம்பர் 3, 2021ம் தேதி வெளியானதாகக் குறிப்பிடப்பட்டு இருந்தது.
எனவே, செப்டம்பர் 3ம் தேதி தந்தி டிவி வெளியிட்ட நியூஸ் கார்டுகளை பார்வையிட்டோம். அதில் அப்படி எந்த ஒரு நியூஸ் கார்டும் இல்லை.
இது தொடர்பாக தந்தி டிவி ஆசிரியர் அசோக வர்த்தினியிடம் கேட்டோம். அவர் “இந்த நியூஸ் கார்டு நாங்கள் வெளியிட்டது இல்லை. போலியானது” என்றார்.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில் செந்தில்வேல் தொடர்பாக பரவும் தந்தி டிவி நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
நீட் தேர்வுக்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக செந்தில்வேல் அறிவிப்பு என்று பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:நீட் தேர்வுக்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று செந்தில்வேல் கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: False

Done very good job
Nothing