பள்ளிவாசலுக்கு புர்கா அணிந்து அரிவாளுடன் வந்தது ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதியா?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

பெங்களூரு பள்ளி வாசல் முன்பாக புர்ஹா போட்டுக் கொண்டு கையில் கத்தியுடன் கலவரம் செய்யும் நோக்கில் திரிந்த ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதி பிடிபட்டான் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link 1Archived Link 2

3.06 நிமிடம் ஓடக்கூடிய வீடியோவை பகிர்ந்துள்ளனர். அதில், ஒருவர் இஸ்லாமியப் பெண்கள் அணிந்திருக்கும் புர்கா அணிந்துள்ளார். வீடியோவில் பேசும் நபர், இது பெங்களூருவில் உள்ள மசூதி. மசூதியின் வாசலில் புர்கா அணிந்தபடி இந்த நபர் நின்றுகொண்டிருந்தார். கையில் சிவப்பு பையுடன் சந்தேகத்துக்குரிய வகையில் நின்றுகொண்டிருந்ததால் அவரை சோதனையிட்டோம். அப்போது அவர் கையில் அரிவாளுடன் இருப்பதும், அவர் ஒரு ஆண் என்பதும் தெரியவந்தது. இவர் யார் என்று தெரியவில்லை, எதற்காக வந்துள்ளார் என்றும் தெரியவில்லை” என்று கன்னடத்தில் பேசுகிறார். 

நிலைத் தகவலில், “Bangalore ல் பள்ளி வாசல் முன்னால் புர்ஹா போட்டு கையில் #அரிவாளுடன்(கத்தியுடன்) கலவரம் செய்யும் நோக்குடன் சுற்றித்திரிந்த #RSS #தீவிரவாதி பிடிபட்டுள்ளான்” என்று குறிப்பிட்டுள்ளனர். 

Sdpi Pandamangalam என்ற ஃபேஸ்புக் ஐடி-யில் இருந்து 2020 ஜனவரி 8ம் தேதி இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பெங்களூருவில் உள்ள மசூதி, ஆண் ஒருவர் கையும் களவுமாக பிடிபட்டுள்ளார். எனவே, இந்த தகவல் உண்மையாக இருக்கலாம் என்றே தோன்றியது. வீடியோவில் பிடிபட்ட நபர் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் என்று கூறுகிறாரா என்று கன்னட நண்பர்களிடம் இந்த வீடியோவை அனுப்பி கேட்டோம். அப்படி எதுவும் இல்லை என்று கூறினார்கள். எனவே, இந்த வீடியோவின் மீது சந்தேகம் எழுந்தது. மேலும், இது போன்று பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

பெங்களூருவில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடக்கும் போராட்டங்களை சீர்குலைக்க ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் இப்படி செய்கிறார்கள் என்று வதந்திகள் பரவிக்கொண்டே இருப்பதால், இந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் ஈடுபட்டபோது எந்த செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை. வீடியோவில் பெங்களூருவில் ஆண் ஒருவர் புர்கா அணிந்து கையில் அரிவாளுடன் சிக்கினார் என்று வீடியோவில் குறிப்பிட்ட சில கீ வார்த்தைகளை கூகுளில் டைப் செய்து தேடினோம். அப்போது, 2018ம் ஆண்டு வெளியான செய்தி மற்றும் வீடியோ கிடைத்தது. 

Search Link

அந்த செய்தியில் கைது செய்யப்பட்ட நபர் பெயர் சிவராஜ் என்றும், இவர் தன்னுடைய நண்பரிடம் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் அவரைத் தாக்க வந்ததாகவும் குறிப்பிட்டிருந்தனர்.

சிவராஜ் தன்னுடைய நண்பரிடம் கடன் வாங்கியுள்ளார். கடன் கொடுத்தவரோ கால அவகாசம் கொடுக்காமல் தன்னுடைய பணத்தை உடனடியாக திருப்பித் தர வேண்டும் என்று கட்டாயப்படுத்தியுள்ளார். இதனால், அவரைத் தாக்க சிவராஜ் திட்டமிட்டார். புர்கா அணிந்து சென்றால் யாருக்கும் அடையாளம் தெரியாது என்று நினைத்து புர்கா அணிந்து வந்துள்ளார். மசூதிக்கு அருகே புர்காவுடன் அவர் நண்பரின் வருகைக்காக காத்திருந்தபோது சிக்கியதாக குறிப்பிட்டிருந்தனர்.

english.varthabharati.inArchived link 1
deccanherald.comArchived link 2

நியூஸ்18 கன்னடா இது தொடர்பாக வெளியிட்ட செய்தியில், இதே வீடியோ பயன்படுத்தப்பட்டு இருப்பதும் தெரிந்தது. அதில் கூட இந்த நபர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சார்ந்தவர் என்று குறிப்பிடவில்லை. இந்த செய்தி வெளியான காலக்கட்டத்தில் கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Archived Link

இதன் மூலம் பழைய வீடியோவை எடுத்து, ஆர்.எஸ்.எஸ் நபர் என்ற தவறான தகவலை சேர்த்து ஷேர் செய்திருப்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு உண்மையுடன் தவறான தகவலும் சேர்த்து வெளியிடப்பட்டது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:பள்ளிவாசலுக்கு புர்கா அணிந்து அரிவாளுடன் வந்தது ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதியா?

Fact Check By: Chendur Pandian 

Result: Partly False