
“இந்துக்களின் பாரம்பரியத்தில் ஒழுக்கமோ சுயமரியாதையோ இருந்ததில்லை” என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாக ஒரு பதிவு வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link |
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் புகைப்படத்துடன் புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “ஹிந்துக்களின் பாரம்பரியத்தில் அவர்களுக்கு ஒழுக்கமோ சுயமரியாதையோ இருந்ததில்லை – சீமான், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை, Namasivayam என்பவர் மார்ச் 14, 2020 அன்று வெளியிட்டுள்ளார். பலரும் அதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்த நியூஸ் கார்டை பார்க்கும்போது நமக்கு போலியானது என்பது தெரிகிறது. ஆனால், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இது உண்மை என்று கருதி ஷேர் செய்திருப்பதால் இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
புதிய தலைமுறை வெளியிடும் வழக்கமான நியூஸ் கார்டுடன் இதை ஒப்பிட்டுப் பார்த்தோம். இந்த நியூஸ் கார்டில்,
வழக்கமாக புதிய தலைமுறை வெளியிடும் நியூஸ் கார்டில் உள்ளது போன்ற தமிழ் ஃபாண்ட் இல்லை.
பின்னணி டிசைன், லோகோ இல்லை.
தனியா டைப் செய்து போட்டோ மார்ஃபிங் மூலம் கருத்துப் பகுதி வைக்கப்பட்டது போல் உள்ளது.

இந்த நியூஸ் கார்டில் 2019 மார்ச் 9ம் தேதி என்று வெளியிடப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது 2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம் தமிழகத்தில் தீவிரமாக நடந்துவந்தபோது இந்த நியூஸ் கார்டு வந்ததாக குறிப்பிட்டுள்ளனர். தேர்தல் நேரத்தில் சீமான் அப்படி பேசியதாக நினைவில் இல்லை. எனவே, கூகுள் செய்து பார்த்தபோது அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை.
Search Link |
ஓராண்டுக்கு முந்தைய நியூஸ் கார்டு என்பதால் புதிய தலைமுறை சமூக ஊடக பக்கங்களில் அதை தேடுவது சிரமமாக இருந்தது. எனவே, புதிய தலைமுறை சமூக ஊடகப் பிரிவு நிர்வாகியைத் தொடர்புகொண்டு, இதன் நம்பகத்தன்மை பற்றிக் கேட்டோம். அப்போது அவர், ‘இது போலியானது,’ என்று குறிப்பிட்டார்.
நம்முடைய ஆய்வில்,
இந்த நியூஸ் கார்டு போலியானது என்பது உறுதியாகி உள்ளது.
இந்த நியூஸ் கார்டில் உள்ளது போன்று சீமான் பேசியதாக எந்த ஒரு துண்டு செய்தி கூட நமக்கு கிடைக்கவில்லை.
இந்த நியூஸ் கார்டை நாங்கள் வெளியிடவில்லை என்று புதிய தலைமுறை உறுதி செய்துள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், “ஹிந்துக்களின் பாரம்பரியத்தில் அவர்களுக்கு ஒழுக்கமோ சுயமரியாதையோ இருந்ததில்லை என்று சீமான் கூறியதாக பகிரப்படும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:இந்து பாரம்பரியத்தை விமர்சித்து சீமான் பேசினாரா? போலி நியூஸ் கார்டு!
Fact Check By: Chendur PandianResult: False
