
இத்தாலியில் ஷாப்பிங் மாலில் பொருட்களை வாங்க குவிந்த கூட்டம் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link 1 | Archived Link 2 |
4.30 நிமிட வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில் கடையின் ஷட்டரை திறக்க ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர். ஷட்டர் கொஞ்சம் திறந்ததுமே மக்கள் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைகின்றனர். ஆளாளுக்கு பொருட்களை எடுக்க போராடுகிறார்கள். கட்டுக்கடங்காத கூட்டம் கடைக்குள் வந்துகொண்டே இருக்கிறது. நெரிசலில் சிக்கி சிலர் கீழே விழுகின்றனர். ஒரே கூச்சலும் குழப்பமுமாக உள்ளது.
நிலைத் தகவலில், “இத்தாலி ஷாப்பிங் மாலில்.. பொருட்கள் வாங்க.. கடவுளே இந்நிலை மனித இனத்திற்கு வேண்டாம். கனத்த இதயத்துடன்” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, Bishop Godfrey Noble என்பவர் மார்ச் 28, 2020 அன்று வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இத்தாலியில் கொரோனா கோர தாண்டவம் ஆடுவதால் ஊரடங்கு அமலில் உள்ளது. மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரவே அச்சம் கொண்டுள்ளனர். அப்படியே வந்தாலும் மாஸ்க் அணிந்து மிகவும் பாதுகாப்பாக வருகின்றனர். இங்கு மிக நெரிசலான இடத்தில் யாரும் மாஸ்க் அணியவில்லை. பொது மக்கள் மட்டுமின்றி, ஊழியர்களும் மாஸ்க் அணியவில்லை எனவே, இது உண்மையில் இத்தாலியில் எடுக்கப்பட்டதுதானா என்று ஆய்வு செய்தோம்.

Search Link |
வீடியோ கட்சிகளை புகைப்படங்களாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது நமக்கு பல வீடியோக்கள் கிடைத்தன. பலவும் 2019ம் ஆண்டு நவம்பர் இறுதியில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தன.
அதில் உள்ளது லத்தின் மொழியா என்று தெரியவில்லை. எனவே, அதை கூகுளில் டிரான்ஸ்லேட்டரில் மொழி மாற்றம் செய்து பார்த்தபோது போர்த்துக்கீசு மொழி என்றும், அமெரிக்காவில் கருப்பு வெள்ளியன்று மக்கள் பொருட்களை வாங்க குவிந்தால் கடை சேதமடைந்தது என்று குறிப்பிட்டிருந்தனர்.

Search Link | costanorte.com.br | Archived Link |
அமெரிக்காவில் என்றால் எந்த இடத்தில் என்று குறிப்பிடவில்லை. எனவே, இந்த கீ வார்த்தைகளை கூகுளில் டைப் செய்து தேடினோம். அப்போது நமக்கு சில செய்திகள் கிடைத்தன. costanorte.com.br என்ற இணையதளத்தில் மேற்கண்ட வீடியோவுடன் கூடிய செய்தி நமக்கு கிடைத்தது.
அதில், பிரேசில் நாட்டில் பெர்னம்புகோ மாநிலத்தில் ரெசிஃபி என்ற நகரத்தில் இந்த கடை உள்ளது என்றும், அங்க ரெட் ஃபிரைடே எனப்படும் குறைந்த விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படும் தினத்தில் மக்கள் உள்ளே நுழைந்ததாகவும் குறிப்பிட்டிருந்தனர்.
நம்முடைய ஆய்வில்,
இந்த வீடியோ 2019 நவம்பரில் பிரேசிலில் எடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிளாக் ஃபிரைடே என்ற சிறப்பு விற்பனை தினத்தன்று எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் கொரோனா பரவல் தீவிரமாக உள்ள இத்தாலியில், ஷாப்பிங் மாலில் பொருட்களை வாங்க குவிந்த மக்கள் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:இத்தாலியில் பொருட்களை வாங்க குவித்த கூட்டமா இது? – ஃபேஸ்புக் வைரல் வீடியோ
Fact Check By: Chendur PandianResult: False
