இந்திரா காந்தி கணவர் ஃபெரோஸ் கான், மாமனார் யூனுஸ் கான்?- ஃபேஸ்புக் விஷமம்

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

கணவர் ஃபெரோஸ் கான் மற்றும் மாமனார் யூனூஸ்கானுடன் இந்திரா காந்தி உள்ள படம் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

நேரு, இந்திரா காந்தியின் பழைய படம் பகிரப்பட்டுள்ளது. அதில் இளைஞர் ஒருவரின் படம் சிவப்பு கோட்டால் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், “இதுதான் யூனுஸ்கான்  மகன் ஃபிரோஸ்கான். அதாவது நேருவின் மகளாகிய இந்திராவின் கணவன். இதில் புரியாத புதிர் என்ன என்றால், நேருவின் மகளும் ஃபிரோன்கானின் மனைவியுமான இந்திரா கான் எப்படி இந்திரா காந்தி ஆனதுதான்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புகைப்பட பதிவை முத்து கிருஷ்ணன் என்பவர் 2020 ஜூன் 27ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ஃபெரோஸ் காந்தி 1960ல் இறந்துவிட்டார், இந்திரா காந்தி 1984ம் ஆண்டு இறந்துவிட்டார். கிட்டத்தட்ட இந்திரா காந்தி இறந்து 36 ஆண்டுகள் ஆன நிலையில் அவரது கணவர், மாமனார் யார் என்று எல்லாம் அலசி ஆராய்ந்து சிலர் பதிவிடுகின்றனர். உண்மையை கண்டறிந்து சொல்லியிருந்தால் வரவேற்கலாம், இது போன்ற பதிவுகள் விஷமத்தனமாக, மறைந்த தலைவர்களைப் பற்றித் தரக்குறைவான கருத்தைப் பரப்பும் வகையில் அமைந்திருப்பதுதான் வேதனை. 

ஃபெரோஸ் காந்தியின் உண்மையான பெயர் ஃபோரஸ் கான், இந்திரா நேருவை அவர் இஸ்லாம் முறைப்படி திருமணம் செய்துகொண்டார். இதற்காக லண்டன் சென்று இஸ்லாமியராக இந்திரா நேரு மதம் மாறினார் என்று வதந்தி பரப்பப்பட்டது. அப்போது அவருடைய திருமண புகைப்படத்துடன் அந்த தகவல் தவறானது என்று உறுதி செய்தோம். அந்த கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

தற்போது இந்திராவுக்கு அருகில் இருக்கும் இரண்டு நபர்களை காட்டி அவர்கள்தான் இந்திரா காந்தியின் கணவர் மற்றும் மாமனார் என்று குறிப்பிட்டுள்ளனர். ஃபெரோஸ் காந்திக்கும் படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நபருக்கும் உருவ ஒற்றுமை துளி கூட இல்லை. இந்திரா – ஃபெரோஸ் காந்தி திருமணப் படத்தை ஒப்பிட்டுப் பார்த்தால் இதைத் தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியும். எனவே, படத்தில் உள்ளவர்கள் யார் என்று ஆய்வு செய்தோம்.

படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது, படத்தில் ஃபெரோஸ் கான் என்று சிவப்பு கோட்டால் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள நபரின் பெயர்தான் முகமது யூனுஸ் என்று தெரியவந்தது. வயதான அந்த நபரின் பெயர் நிக்கோலஸ் ரோரிச். தாடி வைத்துள்ளதால் அவரை இஸ்லாமியர்கள் என்று முடிவு கட்டியிருப்பது தெரிந்தது. உண்மையில் அவர் ரஷ்யா நாட்டைச் சேர்ந்தவர். எழுத்தாளர், அகழ்வாராய்ச்சியாளர், ஓவியர் என்று தெரியவந்தது.

படத்தில் உள்ள இளைஞர் பெயர் முகமது யூனுஸ் என்று தெரிந்தது. அவர் யார் என்று தேடியபோது, அவர் இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றவர் என்றும், இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு இந்திய வெளியுறவுத் துறையில் பணியாற்றியதும் தெரிந்தது. துருக்கி, இந்தோனேசியா, ஈரான், ஸ்பெயின் உள்பட பல நாடுகளில் இந்தியத் தூதராக அவர் பணியாற்றி வந்திருப்பதும் தெரிந்தது. இந்த புகைப்படம் 1946ம் ஆண்டு இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள குலுவில் எடுக்கப்பட்டது என்றும் தகவல் கிடைத்தது. அவரைப் போய் ஃபெரோஸ் காந்தி என்று தவறாகக் குறிப்பிட்டு விஷமப் பிரசாரம் செய்திருப்பது தெரிந்தது. 

allaboutheaven.orgArchived Link

ஃபெரோஸ் காந்தியின் தந்தையின் பெயர் என்ன என்று பார்த்தபோது ஜகாங்கீர் ஃபரிதூன் காந்தி (Faredoon Jehangir Ghandy) எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது. இவர் பார்சி இனப் பிரிவைச் சேர்ந்த வணிகர் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.  இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி, ராகுல் காந்தி என யாரும் தாங்கள் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் வழிவந்தவர்கள் என்று கூறவில்லை. ஃபெரோஸின் குடும்பப் பெயராக காந்தி இருப்பதால் அவர்கள் அதை வைத்துக்கொள்கிறார்கள். இதில் குறிப்பிட்ட பிரிவினருக்கு என்ன பிரச்னை என்று தெரியவில்லை. தேச விடுதலைக்கு காந்தியின் பங்கே இல்லை என்று பிரசாரம் செய்யும் சிலர், நேரு, இந்திரா காந்தி, சோனியா காந்தி பற்றி தொடர்ந்து பல விஷமத்தனமான பதிவுகளை வெளியிட்டு வருவதில் உள்ள பின்னணி அரசியல் புரிகிறது. அதற்குள்ளாக நாம் செல்ல விரும்பவில்லை.

நம்முடைய ஆய்வில்,

ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட படத்தில் இருக்கும் நபர் ஃபெரோஸ் காந்தி இல்லை என்பது உறுதியாகி உள்ளது.

ஃபேரோஸ் கான் என்று குறிப்பிடப்பட்டுள்ள நபரின் பெயர் முகமது யூனுஸ் என்பதும் அவர் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரியாக பணியாற்றியதும் உறுதியாகி உள்ளது.

இந்திரா காந்தியின் மாமனார் யூனுஸ் கான் என்று குறிப்பிடப்பட்டுள்ள நபர் பெயர் நிகோலஸ் ரோரிச் என்பதும், அவர் ரஷ்யாவைச் சேர்ந்தவர் என்பதும் உறுதியாகி உள்ளது.

ஃபெரோஸ் ஜகாங்கீர் காந்தி இஸ்லாமியர் இல்லை, அவர் பார்சி சமூகத்தைச் சேர்ந்தவர். அவர் தந்தை பெயர் யூனுஸ் கான் இல்லை, ஃபரிதூன் காந்தி என்பதும், அவர்கள் குடும்ப பெயர் காந்தி என்பதும் உறுதியாகி உள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில் இந்திரா காந்தி பற்றி இந்த பதிவிலும் விஷமத்தனமாக அவதூறான தகவல் பரப்ப முயற்சி செய்யப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், மாமனார் யூனுஸ் கான் மற்றும் கணவர் ஃபெரோஸ் கான் உடன் இந்திரா காந்தி உள்ள படம் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:இந்திரா காந்தி கணவர் ஃபெரோஸ் கான், மாமனார் யூனுஸ் கான்?- ஃபேஸ்புக் விஷமம்

Fact Check By: Chendur Pandian 

Result: False