தமிழ்நாட்ல தான இருக்கோம்; தமிழ்ல பேச முடியாதா? வைரல் வீடியோ

சமூக ஊடகம் | Social

‘’தமிழ்நாட்ல தான இருக்கோம்; தமிழ்ல பேச முடியாதா,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் ஒரு வைரல் வீடியோ பதிவை காண நேரிட்டது. இந்த வீடியோ இதுவரையிலும், 19,000-க்கும் அதிகமான ஷேர்களை பெற்று, இன்னும் டிரெண்டிங்கில் உள்ளது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:
தமிழ் நாட்ல தான இருக்கோம் தமிழ்ல பேச முடியாதா.. Airport நிர்வாகியை வெளுத்து வாங்கிய தமிழன் ??

Archived Link

இதில், ஆண் ஒருவர் ஏர்போர்ட்டில் விமான ஊழியரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனை உண்மைத்தமிழன் எனப் பாராட்டி, Tamil Virals என்ற ஃபேஸ்புக் குழு, கடந்த ஏப்ரல் 6ம் தேதி வெளியிட்டுள்ளது. தமிழ், தமிழன் என்ற உணர்ச்சி காரணமாக, பலரும் வேகமாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட பதிவில் கூறப்பட்டுள்ள வீடியோ உண்மையானதா என அறிய, முதலில் அதில் இருந்து ஒரு ஃபிரேமை பிரித்தெடுத்து, Yandex உதவியுடன் ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அதில், இது உண்மையானதுதான் என தெரியவந்தது.

இதற்கடுத்தப்படியாக, கூகுள் சென்று, இப்படியான வீடியோ எதுவும் வெளியாகியுள்ளதா, என தேடிப் பார்த்தோம். அதில், ஏராளமான வீடியோக்கள் இதுதொடர்பாக, வெளிவந்துள்ளதை காண முடிந்தது.

இதன்படி, நமக்கு கிடைத்த வீடியோ தொடர்பான, யூடியூப் இணைப்பை திறந்து பார்த்தோம். ஏப்ரல் 9ம் தேதி இந்த வீடியோ வெளியிடப்பட்டிருந்தது. ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட அதே காட்சிகள் இதிலும் இடம்பெற்றிருந்தன.

எனினும், நாம் ஆய்வு செய்யும் குறிப்பிட்ட வீடியோ, ஏப்ரல் 6ம் தேதி வெளியிடப்பட்டதாகும். இதையடுத்து, InVid உதவியுடன் நமக்கு கிடைத்த வீடியோவை பகுப்பாய்வு செய்து பார்த்தோம். அதில், வீடியோ உண்மையானதுதான் என தெரியவந்தது. ஆதார படங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

இதன்பின், AmnestyInternational தளம் சென்று, இதே வீடியோ இணைப்பை பதிவேற்றி, அதன் உண்மைத்தன்மையை பரிசோதித்தோம். அதிலும், இது உண்மையானதுதான் என தெரியவந்தது. ஆனால், மற்ற விவரங்கள் தெரியவில்லை.

இருந்தபோதிலும், குறிப்பிட்ட வீடியோவில், பேசும் நபர், ‘‘சென்னை டூ கோவை விமானம் கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி தாமதமாக வருகிறது, தமிழ்நாட்லதான இருக்கீங்க, ஏன் தமிழில் பேசாம, இந்தியில் பேசறீங்க,’’ உள்ளிட்ட கேள்விகளை எழுப்புகிறார். எனவே, இது தமிழகத்தில் சென்னை விமான நிலையத்தில் நடந்த ஒன்றுதான் என உறுதி செய்யப்படுகிறது. ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் நடந்த இந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்து, யாரோ ஃபேஸ்புக்கில் பகிர, அது வைரலாகப் பரவி வருவதும் தெரியவந்துள்ளது.

எனவே, மேற்கண்ட வீடியோ உண்மையான ஒன்றுதான் என உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
குறிப்பிட்ட வீடியோ உண்மையான ஒன்றுதான் என உரிய ஆதாரங்களின்படி, உறுதி செய்யப்படுகிறது. தமிழ் உணர்வு மற்றும் இந்தி எதிர்ப்பு காரணமாக, இந்த வீடியோவில் இருக்கும் நபரை பாராட்டும் வகையில், இந்த வீடியோ அதிகம் பேரால் ஷேர் செய்யப்பட்டு வருவதாகவும், தெரியவருகிறது.

Avatar

Title:தமிழ்நாட்ல தான இருக்கோம்; தமிழ்ல பேச முடியாதா? வைரல் வீடியோ

Fact Check By: Parthiban S 

Result: True