
கடலில் மிதக்கும் மசூதி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் வாசகர் ஒருவர் நம்முடைய வாட்ஸ் அப் எண்ணுக்கு (+91 9049044263) மேற்கண்ட ஃபேஸ்புக் லிங்கை அனுப்பி வைத்து அது உண்மையா என்று கேட்டார். அதன் அடிப்படையில் இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம்.
கடலில் உள்ள சிறு திட்டு போன்ற பகுதியில் கட்டப்பட்ட கட்டிடத்தை காட்டுகின்றனர். அதின் மேல் துருக்கி நாட்டுக் கொடி பறக்கிறது. அரபியில் குரல் ஒலிக்கிறது. நிலைத் தகவலில், “கடலில் மிதக்கும் மசூதி” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை Riyas Mohammed என்பவர் 2020 மே 20ம் தேதி வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை நான்காயிரத்துக்கும் மேற்பட்டோர் ஷேர் செய்துள்ளனர்.
உண்மை அறிவோம்:
துருக்கி கொடி பறப்பதால் அதன் தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள கட்டிடமாக இருக்கலாம் என்று தெரிந்தது. வீடியோ காட்சியை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இஸ்தான்புல்லில் இந்த கட்டிடம் இருப்பது தெரியவந்தது.
இந்த கட்டிடத்தின் பெயர் மெய்டன் டவர். இது இஸ்தான்புல் உஸ்குதார் கடற்கரையில் இருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு சிறிய திட்டுப் பகுதியாகும். இந்த சிறிய திட்டுப் பகுதியில் இந்த கட்டிடம் எப்போது கட்டப்பட்டது என்ற சரியான வரலாறு இல்லை. இருப்பினும் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு 340 ஆண்டுகளில் இது கட்டப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஓட்டோமான் சாம்ராஜ்யம் கான்ஸ்டன்டைன் நோபிளை கைப்பற்றிய போது இந்த இடத்தில் இருந்த கட்டிடம் இடிக்கப்பட்டது. பிறகு, அதற்குப் பிறகு இங்கு மரத்தாலான கட்டிடம் கட்டப்பட்டது. 1719ம் ஆண்டு ஏற்பட்ட தீவிபத்தில் அந்த மரத்தாலான கட்டிடம் எரிந்து சாம்பலானது. அதைத் தொடர்ந்து அதே வடிவத்தில் கல்லால் ஆன கட்டிடத்தை இஸ்தான்புல்லின் தலைமை கட்டிடக்கலை நிபுணர் கட்டினார் என்று தகவல் கிடைத்தது.
இந்த கட்டிடம் மசூதியாக பயன்படுத்தப்பட்டு வருகிறதா அல்லது ஒரு காலத்தில் மசூதியாக இருந்ததா என்று பார்த்தோம். பல நூற்றாண்டுகளாக இந்த கட்டிடம் பல அரசுகளின் நிர்வாகத்தில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இது கப்பல்கள் துறைமுகத்துக்குள் வரும்போது வரி வசூலிக்கும் மையமாகவும், பாதுகாப்பு தாக்குதல் நடத்தும் கோட்டையாகவும், கலங்கரைவிளக்கமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த 1830ம் ஆண்டு காலரா நோய்த்தொற்று பரவியபோது இது குவாரன்டைன் மருத்துவமனையாகவும் அதைத் தொடர்ந்து வானொலி நிலையமாகவும் செயல்பட்டு வந்துள்ளது. 1964ம் ஆண்டு துருக்கி ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதன்பிறகு இது கடல்சார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது இந்த கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு சுற்றுலா தலமாக உள்ளது. தரை தளத்தில் துருக்கியின் பிரபல உணவுகள் விற்பனை செய்யும் உணவகமும், அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டுள்ளது என்று செய்திகள் கூறுகின்றன.
துருக்கி அரசின் அதிகாரப்பூர்வ சுற்றுலா துறை தளத்தில் இந்த கட்டிடம் பற்றி என்ன குறிப்பிட்டுள்ளார்கள் என்று தேடினோம். அதிலும் இந்த இடம் மசூதியாக இருந்தது பற்றி எதையும் குறிப்பிடவில்லை. இந்த தீவானது போஸ்போரஸ் என்ற நீரிணைப்பின் நுழைவு பகுதியில் அமைந்துள்ளது என்றும், பைசான்டைன் பேரரசு காலத்தில் கட்டப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.
இது பல முறை இடிக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது என்றும், கண்காணிப்பு கோபுரம் முதல் கலங்கரை விளக்கம் வரை பல பணிகளை இது செய்துள்ளது என்றும், தற்போது இது உணவகமாக உள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
மேலும், இந்த இடம் பற்றி நிலவும் பண்டையகால கதை பற்றி குறிப்பிட்டிருந்தனர். அந்த பகுதியை ஆண்ட மன்னனிடம் வந்த மந்திரக்காரி ஒருவர், உன்னுடைய மகளின் 18வது பிறந்த தினத்தன்று விஷப்பாம்பு கடித்து இறந்துவிடுவார் என்று கூறியுள்ளார். மகளைக் காக்க இந்த இடத்தில் கோட்டை கட்டியதாகவும், கடைசியில் பிறந்த நாளன்று தந்தை அனுப்பிய சிறப்பு பரிசுப் பையில் மறைந்திருந்த பாம்பு இளவரசியை கடித்ததாகவும் கூறப்படுகிறது என்று குறிப்பிட்டிருந்தனர்.
நம்முடைய ஆய்வில்,
துருக்கி நாட்டு அரசு சுற்றுலா தளம் வெளியிட்ட தகவலில் இது உணவகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் மருத்துவமனை, வரி வசூலிக்கும் மையம், வானொலி நிலையம் என மக்கள் பயன்படுத்தி வந்தது தெரியவந்துள்ளது.
மசூதியாக இருந்ததா என்பது பற்றிய குறிப்பு இல்லை, ஆனால், துருக்கி ஒரு இஸ்லாமிய குடியரசு நாடு என்பதால் கடந்த காலத்தில் இங்கு வழிபாடு நடத்தப்பட்டிருக்கலாம்.
இதன் அடிப்படையில் தற்போது இந்த இடம் தற்போது மசூதியாக இல்லை, உணவகம் என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறான புரிதலை ஏற்படுத்தக்கூடியது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:கடலில் மிதக்கும் மசூதி… ஃபேஸ்புக் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: Partly False
