
சீனாவில் 2020 மே மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு படத்தை சிங்கப்பூர் நெட்டிசன்கள் சிலர் தவறாக பரப்பி வருகின்றனர்.
தகவலின் விவரம்:
வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “சென்னையில் வெள்ளம் வந்த பொழுது சிங்கப்பூரை பார் சவுதியை பார் என… எப்போதும் நம்ம ஊரை மட்டம் தட்டுகிற குபீர் குஞ்சுகள் கவனத்திற்கு.. வெள்ளத்தில் மிதக்கும் உங்கள் சிங்கப்பூரை பார்.!!” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை எங்கள் இந்தியா என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 ஜூன் 25ம் தேதி பகிர்ந்துள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் மழை வெள்ளமே ஏற்படாது என்று யாரும் கூறவில்லை, ஒரு முறை ஒரு பகுதியில் வெள்ளம் ஏற்பட்டால் அடுத்த முறை அங்கு அப்படி நடக்காமல் இருக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது… நம் ஊரிலும் அது போன்று விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
ஷேர் செய்பவர்களின் தனிப்பட்ட கருத்து சரியா, தவறா என்ற ஆய்வுக்குள் நாம் செல்லவில்லை. இந்த புகைப்படம் சிங்கப்பூரில் எடுக்கப்பட்டதா என்று மட்டுமே ஆய்வு செய்தோம். சிங்கப்பூரில் மழை வெள்ளம் தொடர்பான செய்தியை முதலில் பார்த்தோம். அப்போது ஒரே நாளில் 108.8 மி.மீ மழை கொட்டித்தீர்த்ததால் வெள்ளம் ஏற்பட்டதாக தகவல் கிடைத்தது. சிங்கப்பூர் தமிழ் முரசு வெளியிட்ட செய்தியில் கன மழை காரணமாக ஜூன் 23ம் தேதி காலை சில பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது. காலை 9.20 மணிக்குள்ளாக அனைத்துப் பகுதிகளிலும் வெள்ளம் வடிந்தது” எனக் குறிப்பிட்டிருந்தனர்.
இது தொடர்பாக தேடியபோது முழங்கால் மூழ்கும் அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட படங்கள், வீடியோக்கள் கிடைத்தன.
படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது, ஜூன் 22, 23ம் தேதி சிங்கப்பூரில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது எடுக்கப்பட்ட படம் என்று சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை காண முடிந்தது.
அதே நேரத்தில் சீனாவின் தென் பகுதியில் உள்ள குவாங்சௌ பகுதியில் ஏற்பட்ட மழை வெள்ளத்தின்போது எடுக்கப்பட்ட படம் என்று பல பதிவுகள், ட்வீட் பதிவுகள் நமக்கு கிடைத்தன. சீனாவின் பல செய்தி ஊடகங்கள் இந்த படத்தை மே 22ம் தேதி வெளியிட்டிருப்பதைக் காண முடிந்தது.
நியூஸ் பிஎஸ் என்ற ஊடகம் வெளியிட்டிருந்த குவான்சௌ வெள்ளம் வீடியோவில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட படத்தில் உள்ள காட்சிகள் இடம் பெற்றிருந்ததைக் காண முடிந்தது. வீடியோவின் 1.35வது நிமிடத்தில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட படத்தில் உள்ள இடத்தின் காட்சி வருவதைக் காணலாம்.
இந்த ஆதாரங்கள் அனைத்தும் நாம் ஆய்வுக்கு எடுத்தக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள புகைப்படம் சீனாவில் எடுக்கப்பட்டது என்பதை உறுதி செய்ய போதுமானதாக உள்ளது. இதன் அடிப்படையில் சிங்கப்பூரில் மழை வெள்ளம் காரணமாக நீரில் மூழ்கிய கார்கள் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:சீனாவில் எடுத்த மழை வெள்ளம் பற்றிய புகைப்படத்தை சிங்கப்பூர் என்று பரப்பும் நெட்டிசன்கள்!
Fact Check By: Chendur PandianResult: False
