புனே தொழிலதிபர் முகுல் வன்சி இறுதிச் சடங்கு வீடியோவா இது?

இந்தியா சமூக ஊடகம் சமூகம்

புனேயின் ரூ.1500 கோடி சொத்து மதிப்புள்ள தொழில் அதிபர் முகுல் வன்சி கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துவிட்டதாகவும், அவருடைய கடைசி நிலையைப் பாருங்கள் என்று கூறி ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link 1Archived Link 2

ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்றில் இருந்து மிகப் பாதுகாப்பாக டேப் சுற்றப்பட்ட உடல் ஒன்று இறக்கி இறுதிச் சடங்கு நடத்தும் இடத்துக்குக் கொண்டு செல்லப்படும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “1500 கோடி சொத்துக்கு அதிபதி!

புனே தொழில் அதிபர் முகுல் வன்சியின் கடைசி நிலை!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை, Sowdha Mani என்பவர் 2020 ஜூன் 20ம் தேதி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பலரும் இந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மரணம் மிகக் கொடியது, அதிலும் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழப்பு நிகழும்போது குடும்பத்தினர் அருகில் இருந்து இறுதிச் சடங்கு கூட செய்ய முடியாத நிலை. தங்களுக்கு நெருக்கமாக இருந்தவரை தொட்டுக்கூட பார்க்க முடியாத ஏக்கம் புரிகிறது. அது கோடீஸ்வரராக இருந்தாலும் சரி, சாதாரண நபராக இருந்தாலும் சரி மரணம், கொரோனா மரணம் மிகப்பெரிய சோகம்தான்.

புனேவைச் சேர்ந்த ரூ.1500 கோடிக்கு சொந்தக்காரரான தொழில் அதிபர் இறந்துவிட்டதாக வீடியோ பகிரப்பட்டுள்ளது. வீடியோவில் சந்தேஷ் சந்தேஷ் என்று கூறி கதறி அழுவதை கேட்க முடிகிறது.

அப்படி இருக்கும்போது, யார் அந்த 1500 கோடி ரூபாய்க்கு சொந்தக்காரரான தொழிலதிபர் என்று தேடிப் பார்த்தோம். நமக்கு அப்படி எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை, புனேயின் முகுல் வன்சி என்று மிகப்பெரிய கோடீஸ்வரர் இருந்ததாகவோ, அவர் கொரோனா காரணமாக உயிரிழந்ததாகவோ எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை. 

mumbaimirror.indiatimes.comArchived Link

இந்த வீடியோ காட்சிகளை புகைப்படமாக மாற்றித் தேடியபோதும் எந்த ஒரு தகவலும் நமக்கு கிடைக்கவில்லை. வேறு வேறு கீ வார்த்தைகளைப் பயன்படுத்தி தேடியபோது மகாராஷ்டிராவின் தானேவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கவுன்சிலர் முகுந்த் கெனி என்பவர் உயிரிழந்ததாக ஒரு செய்தி கிடைத்தது. புனே, தேசியவாத காங்கிரஸ், கவுன்சிலர் ஆகிய கீ வார்த்தைகள் அடிப்படையில் தேடியபோது நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட அதே வீடியோவை, ரூ.1500 கோடிக்கு சொந்தக்காரரான கவுன்சிலர் முகுந்த் கெனியின் இறுதிச்சடங்கு என்று மகாராஷ்டிராவில் சிலர் பகிர்ந்து வருவதைக் காண முடிந்தது.

எனவே தானே கவுன்சிலர் முகுந்த் கெனியைத்தான் புனேயின் ரூ.1500 கோடி தொழிலதிபர் முகுல் வன்சி என்று தவறாக குறிப்பிடுகிறார்களோ என்ற சந்தேகம் எழுந்தது.

Facebook LinkArchived Link

நம்முடைய மராட்டி ஃபேக்ட் கிரஸண்டோ குழுவைத் தொடர்புகொண்டு புனேவில் முகுல் வன்சி என்று யாராவது தொழிலதிபர் இருந்தாரா? அவர் கொரோனா காரணமாக உயிரிழந்தாரா? என்று கேட்டோம். அப்போது, மராட்டியத்திலும் நாம் ஆய்வு செய்யும் அதே வீடியோ பரவி வந்ததாகவும், அது தொடர்பாக ஆய்வு நடத்தியபோது அது தவறான தகவல் என்று தெரிய வந்ததாகவும் கூறினர்.

முகுந்த் கெனியின் இறுதிச் சடங்கு புகைப்படங்களை அவரது மகன் அனுப்பியதாகவும் அதை மராத்தி கட்டுரையில் வெளியிட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தனர். ஃபேக்ட் கிரஸண்டோ மராத்தி கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

மேலும் அவர்கள் கூறுகையில், சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோ மகாராஷ்டிர மாநிலம் வாசாய் விரார் தாலுகாவில் காலமான காவலர் ஒருவரின் இறுதிச் சடங்கின் போது எடுக்கப்பட்டது. இது தொடர்பாக இறுதிச் சடங்கில் பங்கேற்ற இன்ஸ்பெக்டர் விஜய் மத்துடன் தொடர்புகொண்டு பேசி அதை உறுதி செய்துள்ளோம்.

ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே வாசாய் மாநகராட்சி என்று மராத்தியில் எழுதப்பட்டிருப்பதை காணலாம். இதன் மூலம் இந்த இறுதிச் சடங்கு புனேவில் நடந்தது இல்லை என்று உறுதியாகிறது. மேலும், முகுந்த் கெனியின் மகனிடம் பேசினோம். தன்னுடைய தந்தையைப் பற்றி தவறான தகவல் பரப்பப்பட்டு வருவதாக அவர் போலீசில் புகார் செய்ததும் தெரியவந்தது” என்று கூறினர். மேலும் மராத்தியில் வெளியான செய்தி ஒன்றையும் கொடுத்தனர்.

lokmat.comArchived Link

அதில், “ரூ.1500 கோடி சொத்து வைத்திருந்த கவுன்சிலர் கொரோனாவுக்கு மரணம் என்று பகிரப்படும் வீடியோ தவறானது என்று தலைப்பிட்டிருந்தனர். மறைந்த கவுன்சிலர் முகுந்த் கெனியின் மகன் போலீசில் புகார் செய்துள்ளார். அதில், “முகுந்த் கெனி சமீபத்தில் காலமானார், அவரது உடல் தானேவில் உள்ள ஜவஹர் பாக் மயானத்தில் இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது.

வேறு ஒருவரின் இறுதிச் சடங்கு வீடியோவை வெளியிட்டு ரூ.1500 கோடி சொத்துக்கு சொந்தக்காரர் கவுன்சிலர் முகுந்த் கெனியின் இறுதிச் சடங்கு என்று தவறாக வதந்தி பரப்பி வருகின்றனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

நம்முடைய ஆய்வில்,

தானே தேசியவாத காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் மரணமடைந்ததைத் தொடர்ந்து அவருடைய இறுதிச் சடங்கு என்று குறிப்பிட்டு வீடியோ வதந்தி பரப்பப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக, உயிரிழந்த கவுன்சிலரின் மகன் போலீசில் புகார் செய்திருப்பது தெரியவந்துள்ளது.

மகாராஷ்டிராவின் வாசாய் என்ற இடத்தில் உயிரிழந்த போலீஸ் அதிகாரியின் இறுதிச் சடங்கு வீடியோ கோடீஸ்வரரின் இறுதிச் சடங்கு என்று தவறாக தகவலுடன் பரப்பப்பட்டு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ மராத்தி பிரிவு சார்பில் முகுந்த் கெனியின் மகன் மற்றும் இறுதிச் சடங்கில் பங்கேற்ற காவல்துறை ஆய்வாளருடன் பேசி தவறு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நம்முடைய ஆய்வில் புனேவில் முகுல் வன்சி என்று ரூ.1500 கோடி சொத்துக்கு சொந்தக் காரர் யாரும் இறந்ததாக எந்த செய்தியும் கிடைக்கவில்லை. 

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், புனேவின் ரூ.1500 கோடிக்கு சொந்தக்காரர் முகுல் வம்சியின் இறுதிச் சடங்கு வீடியோ என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:புனே தொழிலதிபர் முகுல் வன்சி இறுதிச் சடங்கு வீடியோவா இது?

Fact Check By: Chendur Pandian 

Result: False

1 thought on “புனே தொழிலதிபர் முகுல் வன்சி இறுதிச் சடங்கு வீடியோவா இது?

  1. This is not videographed by myself. I forwarded it from a news portal. How can I be blamed. I want more clarification that how you are fact checking. As it’s already in social media why the blame is spared on me. It disturbed me much. Again I can forward it as I received in whatsapp.

Comments are closed.