நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்பார் என்று ராகுல் காந்தி கூறினாரா?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

நரேந்திர மோடி மீண்டும் இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்பார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I newindianexpress.com

ராகுல் காந்தி இந்தி மொழியில் பிரசாரம் மேற்கொண்ட வீடியோ பகிரப்பட்டுள்ளது. 2024 ஜூன் 4ம் தேதி இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்பார் என்று ராகுல் காந்தி கூறுவது போல் உள்ளது. நிலைத் தகவலில், “*மோடி இந்தியாவின் பிரதமராக நீடிப்பார். முடிந்தவரை வேலை செய்து பார்த்து விட்டோம் உத்தரப்பிரதேசத்தில் ஒரு சீட்டு கூட கிடைக்காது.4/06/2024ல் மோடி மறுபடி பிரதமர் ஆவது உறுதி.இன்றைய பிரேக்கிங் நியூஸ். வரும் ஜூன் 4-ம் தேதி மோடி தான் பிரதமர்னு நடத்தப்பட்ட   காங்கிரஸ் கூட்டத்தில் ராகுல் காந்தி முக்கிய கணிப்பை வெளியிட்டுள்ளார். நீங்களே கேளுங்கள்…… ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி படுதோல்வி அடையும் என்று காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவர்களும் தொடர்ந்து பிரசாரம் செய்து வருகின்றனர். ஜூன் 4ம் தேதி நரேந்திர மோடி பிரதமராக இருக்க மாட்டார் என்று ராகுல் காந்தி எல்லா இடங்களிலும் பிரசாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் ஜூன் 4ம் தேதி நரேந்திர மோடி இந்திய பிரதமராக நீடிப்பார் என்று ராகுல் காந்தி கூறியதாக சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

ராகுல் காந்தி அப்படிக் கூறியதாக எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை. உண்மையில் ராகுல் காந்தி இப்படி பேசியிருந்தால் அனைத்து ஊடகங்களிலும் செய்தி வெளியாகி இருக்கும். மேலும், ராகுல் காந்தி தன் பிரசாரத்தில் நரேந்திர மோடி பிரதமராவர் என்று கூறும் போது கூடியிருந்த தொண்டர்கள் ஆர்ப்பரிக்கின்றனர். இதுவும் சந்தேகத்தை ஏற்படுத்த வீடியோவை ஆய்வு செய்தோம்.

இந்த வீடியோவை புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, கடந்த மே 10, 2024 அன்று இந்தியத் தேசிய காங்கிரஸ் தன்னுடைய யூடியூப் பக்கத்தில் வெளியிட்டிருந்த வீடியோவுடன் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ ஒத்துப்போனது. கான்பூரில் நடந்த கூட்டத்தில் ராகுல் காந்தியின் கர்ஜனை… மோடிக்கு எதிரான இந்த பேச்சு ஒட்டுமொத்த தேர்தலையும் புரட்டிப்போடும் என்று அர்த்தம் வரும் வகையில் தலைப்பிட்டு வீடியோ பகிரப்பட்டிருந்தது.

வீடியோவின் 1.10வது நிமிடத்தில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி வந்தது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி இருப்பார் என்று அர்த்தம் வரும் வகையில் “நரேந்திர மோதி இந்துஸ்தான்கே பிரதான் மந்திரி ரஹேங்கே” என்று இருந்தது. ஆனால் காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருந்த யூடியூப் வீடியோவில் “நரேந்திர மோதி இந்துஸ்தான்கே பிரதான் மந்திரி நஹி ரஹேங்கே” என்று ராகுல் காந்தி பேசினார். “நஹி” என்ற வார்த்தையை மட்டும் எடிட் செய்து அகற்றியிருப்பது தெரிந்தது. அதாவது ராகுல் காந்தி தன்னுடைய பேச்சில் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக இருக்க மாட்டார் என்று கூறியதை, நஹி என்ற வார்த்தையை அகற்றியதன் மூலம் இந்தியாவின் பிரதமராக இருப்பார் என்று அர்த்தம் வரும் வகையில் மாற்றியுள்ளனர் என்பது தெரிந்தது.

நமக்கு அவ்வளவாக இந்தி தெரியாது என்பதால், இதை உறுதி செய்துகொள்ள நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ இந்தி குழுவினரின் உதவியை நாடினோம். அவர்களும் “இந்த வீடியோ எடிட் செய்யப்பட்டதுதான். ராகுல் காந்தி தன்னுடைய பேச்சில் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக இருக்க மாட்டார் என்று மீண்டும் மீண்டும் கூறியிருந்தார். எந்த இடத்திலும் நரேந்திர மோடிதான் இந்தியாவின் பிரதமராக தொடர்வார் என்றும் உத்தரப்பிரதேசத்தில் ஒரு இடத்தில் கூட காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறாது என்றும் அவர் கூறவில்லை” என்றனர்.

உண்மைப் பதிவைக் காண: economictimes I Archive

கான்பூரில் ராகுல் காந்தி பேசியது தொடர்பான செய்திகளைத் தேடி எடுத்தோம். நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக முடியாது என்று ராகுல் காந்தி பேச்சு என்று குறிப்பிட்டு பல ஊடகங்களிலும் வெளியான செய்திகள் நமக்குக் கிடைத்தன. இவை எல்லாம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ பதிவு தவறானது எடிட் செய்யப்பட்டது என்பதை உறுதி செய்கின்றன.

முடிவு:

ஜூன் 4ம் தேதி இந்திய பிரதமராக மீண்டும் மோடி பொறுப்பேற்பார் என்று ராகுல் காந்தி பேச்சியதாக பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டுள்ளது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்பார் என்று ராகுல் காந்தி கூறினாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: Altered