
மும்பையிலிருந்து மேற்கு வங்கம் சென்ற ரயில் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
ரயில் இன்ஜின் முழுக்க பயணிகள் தொங்கியபடி செல்லும் ரயில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளனர். 2.15 நிமிடம் இந்த வீடியோ செல்கிறது. வீடியோவில், “மும்பையில் இருந்து மேற்கு வங்கம் சென்ற ரயில், 10-5-2020” என குறிப்பிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில் டிஜிட்டல் இந்தியாவின் புதிய முயற்சி என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை சோழமாதேவி என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 மே 12ம் தேதி வெளியிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல மாநில அரசின் பரிந்துரை அடிப்படையில் மட்டுமே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதுவும் மாநில அரசை அணுகி டிக்கெட் பெறுபவர்கள் மட்டுமே ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
அப்படி இருக்கும்போது ரயில் இன்ஜினிலேயே ஃபுட்போர்ட் அடித்து பயணிக்கும் வீடியோ நம்பும்படி இல்லை. வீடியோவைப் பார்க்கும்போது யார் கையிலும் பையோ, முகத்தில் முக கவசமோ இல்லை. மேலும், இந்தியாவில் இயக்கப்படும் ரயில் போல இல்லை. எனவே, வங்கதேசத்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்டிருக்கலாம் என்பது தெரிகிறது.
போலி செய்திகளை கண்டறிய உதவும் Invid தளம் மூலம், இந்த வீடியோ காட்சியை புகைப்படமாக மாற்றி, ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது வங்கதேசத்தில் ரயில் போக்குவரத்து என்று பல வீடியோக்கள், புகைப்படங்கள் கிடைத்தன.
அதை ஆய்வு செய்தபோது, 2018ம் ஆண்டு யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோ ஒன்று கிடைத்தது. News Today Kolkata என்ற யூடியூப் சேனல் இந்த வீடியோ 2018 அக்டோபர் 8ம் தேதி பதிவேற்றம் செய்திருந்தது. அதில், “வங்கதேச ரயில். மிக மோசமான நிலை!” என குறிப்பிட்டிருந்தனர்.
மேலும், இந்த வீடியோ பல ஆண்டுகளாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதையும் காண முடிந்தது. வங்கதேசத்தில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளதன் மூலம் இது இந்தியாவில் இல்லை என்பது உறுதியானது.
2018ம் ஆண்டே இந்த வீடியோ யூடியூபில் இருந்தன மூலம் இது கொரோனா பரவல் காலத்தில் எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதியானது. இருப்பினும் இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்று தேடினோம். அப்போது ஈத் திருநாளையொட்டி வங்கதேச ரயிலில் கூட்ட நெரிசல் என்று சில செய்திகள் கிடைத்தன. இந்த கலைச் சொற்களை அடிப்படையாகக் கொண்டு கூகுளில் தேடினோம்.
2018ம் ஆண்டு இந்த வீடியோ தொடர்பாக வெளியான செய்தி கிடைத்தது. அதில், வங்கதேசத்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தனர். மேலும், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள வீடியோவின் அசலையும் அந்த செய்தியில் வெளியிட்டிருந்தனர்.
Beautiful Places To See என்ற யூடியூப் பக்கம் 2018ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி இந்தே போன்ற வீடியோவை பதிவேற்றம் செய்திருந்ததைக் காண முடிந்தது. அந்த வீடியோவின் தொடக்கத்தில், “வங்கதேசத்தில் இது வழக்கமான நிகழ்வு இல்லை. வங்கதேசத்தில் இஸ்லாமியர்களின் மிக முக்கியமான விழாவான ஈத் திருநாளையொட்டி இப்படி ஒரு அசாதாரணமான சூழல் ஏற்பட்டது. டாக்கா நகரில் உள்ள 80 லட்சம் மக்கள் ஈத் பண்டிகைக்கு முன்னதான இரண்டு நாட்களில் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முற்பட்டனர். வங்கதேசம் போன்ற ஒரு சிறிய நாட்டில் இவ்வளவு பெரிய கூட்டத்தை கையாளுவது சாத்தியமில்லை” என்று குறிப்பிட்டிருந்தனர்.
இதன் மூலம் வங்கதேசத்தில் எடுக்கப்பட்ட பழைய வீடியோவை எடுத்து, இந்தியாவில் தொழிலாளர்களுக்காக இயக்கப்பட்ட சிறப்பு ரயில் என்று தவறான தகவலைச் சேர்த்து இந்த பதிவை வெளியிட்டிருப்பது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
Title:மும்பையில் இருந்து மேற்கு வங்கம் சென்ற தொழிலாளர்கள் ரயில் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False



Sorry. Correct. I not forwarded
Thank you