கர்நாடகாவில் பாகிஸ்தான் கொடியுடன் தமிழக கார்? – ஃபேஸ்புக் பதிவால் பரபரப்பு

சமூக ஊடகம் | Social சமூகம் தமிழ்நாடு | Tamilnadu

கர்நாடகாவில் பாகிஸ்தான் கொடியுடன் வந்த நபரைப் பிடித்து இந்திய தேசியக் கொடியை ஏற்ற வைத்து அனுப்பிய காவலர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link 1Archived Link 2

காரில் பிறை – நட்சத்திரத்துடன் கூடிய பச்சை நிற கொடியை அகற்றி, இந்திய தேசியக் கொடி பொருத்தும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பாகிஸ்தான் கொடியுடன் வலம் வந்த நபரை பிடித்து நமது தேசியக் கொடியை ஏற்ற வைத்து அனுப்பி வைத்த போக்குவரத்து காவலர்.. இது நடந்தது கர்நாடகாவில்… வண்டி தமிழ்நாட்டை சார்ந்தது..இவர்களுக்கு யார் இந்த தமிழகத்தில் தைரியம் குடுத்தது.. இவர்களுக்கு எப்படி இருக்கும் தேசபற்று..,CAA சட்டத்தை எதிர்க்கும் நபர்கள் இதை பார்த்து தெரிந்துகொள்ளவும்…” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த வீடியோவை Vinu Sree என்பவர் 2020 செப்டம்பர் 11 அன்று பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இந்த கொடியைப் பார்க்கும் போது பாகிஸ்தான் கொடி போல இல்லை. ஆனால், நிலைத் தகவலில் பாகிஸ்தான் கொடி என்று குறிப்பிடுகின்றனர். கடந்த ஆண்டு ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தின் போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொடியை பாகிஸ்தான் கொடி என்று பலரும் பகிர்ந்து வந்தனர். அப்போதே நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் பிரிவு அந்த கொடி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கொடி என்று உறுதி செய்திருந்தோம்.

பாகிஸ்தான் ஆதரவுடன் வயநாட்டில் போட்டியிடும் ராகுல்காந்தி?
எச்.வசந்தகுமார் வாகனத்தில் பாகிஸ்தான் கொடியா?

தற்போது அதே போன்ற கொடியுடன் புதிதாக ஒரு தகவல் பரவவே அது பற்றி ஆய்வு செய்தோம். வீடியோவில் கன்னடத்தில் பேசுவது தெரிகிறது. மற்றபடி எங்கே, எப்போது இந்த சம்பவம் நடந்தது என்று எந்த தகவலும் இல்லை. வீடியோவில் உள்ள கொடியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் பாகிஸ்தான் நாட்டு தேசியக் கொடியோடு ஒப்பிட்டுப் பார்த்தோம். 

பாகிஸ்தான் கொடியில் பச்சை நிறத்துக்கு முன்பு பட்டையாக வெள்ளை நிறம் இருக்கும். இந்த கொடியில் முழுக்க முழுக்க பச்சை நிறம் மட்டுமே உள்ளது. இதன் மூலம், இது பாகிஸ்தான் கொடி இல்லை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொடி என்பது உறுதியானது.

இந்த சம்பவம் எங்கே, எப்போது நடந்தது என்று தேடினோம். அப்போது கன்னடத்தில் சில செய்திகள் வெளியாகி இருப்பதைக் காண முடிந்தது. தமிழில் விகடன், புதிய தலைமுறை ஊடகங்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக் கொடியை பாகிஸ்தான் கொடி என தவறாக நினைத்து மாற்றச் சொன்ன பெங்களூரு போலீசார் என செய்தி கிடைத்தன.

vikatan.comArchived Link 1
puthiyathalaimurai.comArchived Link 2

நம்முடைய ஆய்வில்,

காரில் உள்ள கொடி பாகிஸ்தான் கொடி இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொடியை பாகிஸ்தான் கொடி எனத் தவறுதலாக நினைத்து கர்நாடக போலீசார் மாற்றியது தொடர்பான செய்தி கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில், காரில் பாகிஸ்தான் கொடியுடன் வந்த நபர் என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:கர்நாடகாவில் பாகிஸ்தான் கொடியுடன் தமிழக கார்? – ஃபேஸ்புக் பதிவால் பரபரப்பு

Fact Check By: Chendur Pandian 

Result: Partly False