FACT CHECK: இந்தோனேஷிய காட்டில் கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கம் வீடியோவா இது?

ஆன்மிகம் சமூக ஊடகம் | Social சர்வதேசம் | International

இந்தோனேஷிய காட்டில் பழமையான சிவ லிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது என்று வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2

சிவலிங்கம் ஒன்றின் வீடியோ பகிரப்பட்டுள்ளது. வீடியோவில், “காராக் ஹைவேயில் சிவன் கோவில் உள்ளது. ஹைவேயில் இருந்து 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. சிவ லிங்கம் மீது இருந்து தண்ணீர் ஊற்றுகிறது” என்று தமிழில் கூறுகிறார்.

நிலைத் தகவலில், “இந்தோனேசியாவின் காட்டுப் பகுதியில் காணப்பட்ட பழங்கால சிவலிங்கம். இதில் தண்ணீர் ஊற்றெடுத்து பாய்வதை பாருங்கள். ஓம் நமசிவாய” என்று கூறப்பட்டுள்ளது. இந்த வீடியோ பதிவை அர்த்தமுள்ள இந்துமதம் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Neyveli Murali என்பவர் 2021 ஜனவரி 3ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல ஏராளமானவர்கள் இந்த வீடியோவை பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இந்தோனேஷியாவில் சில லிங்கம் காணப்படுவது ஒன்றும் புதிது இல்லை. அங்கு இப்போது லட்சக் கணக்கில் இந்துக்கள் வசிக்கின்றனர். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்து மன்னர்கள் ஆட்சி செய்து வந்துள்ளனர். ஒரு இஸ்லாமிய பல்கலைக் கழக வளாகத்தில் புதிய கட்டிடம் கட்ட அஸ்திவாரம் தோண்டியபோது சிவன் கோவில் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக ஏற்கனவே ஒரு உண்மை கண்டறியும் ஆய்வை நாம் நடத்தியுள்ளோம்.

எனவே, இந்த கோவில் இந்தோனேஷியாவில் உள்ளது என்ற தகவல் உண்மையாக இருக்கலாம் என்றே பலரும் கருது ஷேர் செய்து வருகின்றனர். பலரும் ஷேர் செய்து வருவதால் உண்மையில் இந்த கோவில் இந்தோனேசியாவில்தான் உள்ளதா என்று ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சிகளைப் புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். ஆனால், நமக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. வீடியோவின் தொடக்கத்தில் “கராக் ஹைவேயில் இருந்து 10 கி.மீ தொலைவில் இந்த சிவன் கோவில் காட்டுப்பகுதியில் உள்ளது” என்று வீடியோவை எடுத்தவர் கூறியிருப்பார். எனவே, காராக் ஹைவே, சிவலிங்கம் என்று டைப் செய்து தேடினோம்.

அப்போது இந்த சிவலிங்க கோவில் மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் கராக் நெடுஞ்சாலை வனப் பகுதியில் இருப்பது தெரியவந்தது. இந்த கோவில் தொடர்பாக பல வீடியோக்கள் வெளியாகி இருப்பதையும் காண முடிந்தது.

இந்த கோவில் எப்போது, யாரால் கட்டப்பட்டது என்று செய்தி ஏதும் கிடைக்கிறதா என்று பார்த்தோம். அப்போது, 2009ம் ஆண்டில் இங்கு சிறு கோவில் எழுப்பப்பட்டது என்றும், வேறு இடங்களிலிருந்து 100 ஆண்டுக்கு முந்தைய சிலைகள் இங்குக் கொண்டு வந்து மக்கள் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டுள்ளது என்றும் செய்தி கிடைத்தது. நமக்கு வேறு எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.

malaysiahanuman.com I Archive

அதே நேரத்தில் வீடியோ ஒன்றில் இந்த கோவில் தொடர்பான பேனரை முழுமையாக காட்டியிருந்தனர். அதில் இரண்டு தொலைபேசி எண்களும் வழங்கப்பட்டு இருந்தது. எந்த தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டு பேச முயன்றோம். அந்த எண்ணுக்கு உரியவர்கள் நம்முடைய அழைப்பை ஏற்கவில்லை. 

Youtube Link

கூகுள் மேப்பில் இந்த இடத்தை தேடினோம். மலேசியாவில் சிலாங்கூர் மாகாணத்தில் இந்த கோவில் இருப்பதும், இது தொடர்பான பல படங்கள் அந்த பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருப்பதும் நமக்கு தெரியவந்தது.

Google Map

இந்த கோவில் மலேசியாவில் இருக்கிறது என்பது உறுதியாகி உள்ளது. 2009ம் ஆண்டில் இந்த கோவில் அமைக்கப்பட்டதாக செய்தி ஒன்று தெரிவிக்கிறது. இதன் அடிப்படையில், இந்தோனேஷியாவில் கண்டுபிடிக்கப்பட்ட சிவ லிங்கம் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

இந்தோனேஷியாவில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம் என்று பகிரப்படும் கோவில் மலேசியாவில் உள்ளது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:இந்தோனேஷிய காட்டில் கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கம் வீடியோவா இது?

Fact Check By: Chendur Pandian 

Result: False