“பேனர் விழத்தான் செய்யும்” – அமைச்சர் பெயரில் பரவும் போலி செய்தி!

அரசியல் சமூக ஊடகம்

“ஆயிரம் பேனர்கள் வைத்தால் ஒரு பேனர் விழத்தான் செய்யும், வாகன ஓட்டிகள்தான் கவனமாக செல்ல வேண்டும்” என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக நியூஸ்7 தமிழ் நியூஸ் கார்டு ஒன்று அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Jayakumar 2.png
Facebook LinkArchived Link

நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. 2019 செப்டம்பர் 13ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு இந்த நியூஸ் கார்டு வெளியிடப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளனர்.

நியூஸ் கார்டில், “ஆயிரம் பேனர்கள் வைத்தால் ஒரு பேனர் விழத்தான் செய்யும், வாகன ஓட்டிகள்தான் கவனமாக செல்ல வேண்டும் – அ.தி.மு.க அமைச்சர் ஜெயக்குமார் அறிவுரை” என்று இருந்தது.

இந்த நியூஸ் கார்டை TTV Dinakaran Peravai Thanjavur என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் ‎V A Kumar BA என்பவர் 2019 செப்டம்பர் 13ம் தேதி பகிர்ந்திருந்தார். இவரைப் போல ஏராளமானோர் இந்த நியூஸ் கார்டை பரப்பி வைரல் ஆக்கிவருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இரு சக்கர வாகனத்தில் சென்ற சுபஶ்ரீ என்ற இளம் பெண் பேனர் விழுந்து நிலை தடுமாறி சாலையில் விழுந்தார். பின்னால் வந்த லாரி அவர் மீது ஏறியதில் அவர் உயிரிழந்தார். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அமைச்சர் ஜெயக்குமார் பெயரில் நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

நியூஸ் 7 தமிழ் பெயரில் யாராவது போலியாக தயாரித்து நியூஸ் கார்டு வெளியிட்டுள்ளார்களா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், அச்சு அசலாக நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட நியூஸ் கார்டு போலவே இருந்தது. ஃபாண்ட், டிசைன், வாட்டர் மார்க் என அனைத்தும் சரியாக இருந்தது. எனவே, இது குறித்து உண்மை அறிய நியூஸ் 7 தமிழ் ஃபேஸ்புக் பக்கத்தை ஆய்வு செய்தோம்.

குறிப்பிட்ட நேரத்தில் டாக்டர் ராமதாஸ், சீமான் உள்ளிட்டோர் பற்றிய நியூஸ் கார்டு பகிரப்பட்டு இருந்தது. ஆனால், அமைச்சர் ஜெயக்குமார் பற்றிய நியூஸ் கார்டு மட்டும் இல்லை.

Jayakumar 3.png

இது தொடர்பாக செய்தி ஏதும் உள்ளதா, அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி ஏதும் அளித்துள்ளாரா என்று தேடினோம். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை.

Jayakumar 4.png

இது குறித்து நியூஸ் 7 தமிழ் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு கேட்டோம். அலுவலக எண்ணை அழைத்தபோது யாரும் எடுக்கவில்லை. நியூஸ்7 தொலைக்காட்சியின் நிர்வாகி ஒருவரிடம் இது குறித்து கேட்க முயற்சித்தோம். ஆனால், எந்த ஒரு பதிலும் அளிக்க முன்வரவில்லை.

எனவே, நடந்தது என்ன என்பதை அறிய தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமாரை தொடர்புகொண்டு பேசினோம். நம்மிடம் பேசிய அவர், “இது போலியாக உருவாக்கப்பட்ட நியூஸ் கார்டு. நான் இப்படி எந்த இடத்திலும் கூறவில்லை. என்னுடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இப்படி ஒரு தகவலை சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர். இது தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன். என்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் இது போலி என்று தகவல் வெளியிட்டுள்ளேன்” என்று கூறி ட்வீட் இணைப்பை நமக்கு அனுப்பி வைத்தார்.

Archived Link

அமைச்சர் புகார் அளித்திருப்பதாக தெரிவித்திருந்தார். அது தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று தேடினோம். தமிழில் நமக்கு எந்த செய்தியும் கிடைக்கவில்லை. ஆங்கிலத்தில் தேடியபோது, பாதிக்கப்பட்டவர் மீது குற்றம்சாட்டிய அமைச்சர் ஜெயக்குமார் என்று டைம்ஸ்நவ் நியூஸ் வெளியிட்ட வீடியோ கிடைத்தது.

Jayakumar 5.png
News LinkArchived Link

அந்த வீடியோவை பார்த்தோம். அதில் டி.வி நிருபர் அமைச்சர் ஜெயக்குமாரிடம் சுபஶ்ரீ மரணம் தொடர்பாக ஆங்கிலத்தில் கேள்வி எழுப்புகிறார். அதற்கு அமைச்சர் ஆங்கிலத்திலேயே பதில் அளிக்கிறார். அந்த உரையாடல் விவரம் வருமாறு:

நிருபர்: பேனர் விழுந்து 23 வயதான பொறியாளர் சுபஶ்ரீ மரணம் அடைந்துள்ளார். இந்த சட்டத்துக்குப் புறம்பான பேனரை வைத்தது அ.தி.மு.க-வினர்.

அமைச்சர்: இந்த சம்பவம் மிகவும் சோகமானது, துரதிஷ்டவசமானது… எதிர்பாராமல் நடந்தது. பேனர் வைத்தவர்கள் மீது  முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. ஃபிளெக்ஸ் பேனரை தயாரித்துக் கொடுத்த நிறுவனத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

நிருபர்: பேனர் வைத்த அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் என்பவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

அமைச்சர்:  அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

நிருபர்: நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் கூட தமிழகத்தில் ஏன் இன்னும் இந்த மாதிரியான மோசமான பேனர் கலாச்சாரத்தை அ.தி.மு.க பின்பற்றுகிறது?

அமைச்சர்: அ.தி.மு.க மட்டுமல்ல… தமிழகத்தில் எல்லா அரசியல் கட்சிகளும்.

நிருபர்: ஆனால், அ.தி.மு.க-வினர் வைத்த பேனர் காரணமாகத்தான் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

அமைச்சர்: கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், கவலைப்படாதீர்கள்.

நிருபர்: இனிமேலாவது பேனர் கலாச்சாரத்தை நிறுத்த நடவடிக்கை எடுப்பீர்களா.

அமைச்சர்: இது சரியான நேரம்.இவ்வாறு உரையாடல் முடிந்தது. ஆனால், எந்த இடத்திலும் விபத்து நடந்ததற்கு சுபஶ்ரீதான் காரணம் என்றோ, வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என்றோ அமைச்சர் ஜெயக்குமார் கூறவில்லை. ஆனால், அவதூறு பரப்பும் வகையில் அந்த செய்தி எழுதப்பட்டு இருந்தது தெரிந்தது.

Archived Link

இந்த செய்தி அடிப்படையில் மேற்கண்ட நியூஸ் கார்டு உருவாக்கப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. நியூஸ் 7 தமிழ் இந்த நியூஸ் கார்டை உருவாக்கியதா இல்லையா என்று நாம் ஆய்வு மேற்கொள்ளவில்லை. ஆனால், இவ்வளவு பெரிய விஷயம், நியூஸ் 7 தமிழ் பெயரால் அதிக அளவில் பரப்பப்படுகிறது, அமைச்சர் புகார் அளித்துள்ளார்… “பொறுப்பும் பொது நலனும்” என்ற தாரக மந்திரத்தை கொண்டுள்ள நியூஸ் 7 குறைந்தபட்சம் தங்கள் பெயரில் பரவும் செய்தி பொய்யானது என்று கூறியிருக்கலாம்.  நியூஸ் 7 பெயரில் ஏராளமான பொய்யான நியூஸ் கார்டுகள் பரவுகின்றன, அத்தனைக்கும் இல்லை என்றாலும் போலீசில் புகார் ஆன நிலையில் இதற்கு மட்டுமாவது உண்மை நிலவரம் என்ன என்று தகவல் வெளியிட்டிருக்கலாம்.

நம்முடைய ஆய்வில், 

நியூஸ் 7 தமிழ் ஃபேஸ்புக் பக்கத்தில் சர்ச்சைக்குரிய நியூஸ் கார்டு இல்லை என்பது உறுதியாகி உள்ளது.

நான் அவ்வாறு கூறவில்லை, போலியாக நியூஸ் கார்டை பரப்பி வருகின்றனர் என்று அமைச்சர் ஜெயக்குமார் நம்மிடம் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி என்று கூறி தவறான தகவலை ஆங்கில தொலைக்காட்சி ஒன்று வெளியிட்டுள்ளது நமக்கு கிடைத்துள்ளது.

சமூக ஊடகங்களில் பரவும் தகவல் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், “ஆயிரம் பேனர்கள் வைத்தால் ஒரு பேனர் விழத்தான் செய்யும், வாகன ஓட்டிகள்தான் கவனமாக செல்ல வேண்டும்” என அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக பரவும் தகவல் பொய்யானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:“பேனர் விழத்தான் செய்யும்” – அமைச்சர் பெயரில் பரவும் போலி செய்தி!

Fact Check By: Chendur Pandian 

Result: False

2 thoughts on ““பேனர் விழத்தான் செய்யும்” – அமைச்சர் பெயரில் பரவும் போலி செய்தி!

Comments are closed.