
‘’தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இறந்துவிட்டார்,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
Facebook Link | Archived Link |
என்பவர் இந்த பதிவை அக்டோபர் 20, 2019 அன்று வெளியிட்டுள்ளார். இதில், தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் புகைப்படத்தை பகிர்ந்து, அவரது பெயரை டைகர் எனக் குறிப்பிட்டு, மாவட்ட தெருநாய்கள் சங்க தலைவர் இறந்துவிட்டார், என்றும் கூறி, விமர்சித்துள்ளனர். இதனை பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழக அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி சர்ச்சை பேச்சுகளுக்கு பெயர்பெற்றவர். இதனாலேயே, அடிக்கடி அவர் மீது சர்ச்சை எழுவது வழக்கம். சமீபத்தில் கூட காங்கிரஸ் எம்பி மாணிக் தாகூரை ‘காட்டுப் பன்றியை போல சுடுங்கள்‘ எனக் கூறி விமர்சித்து, கடும் கண்டனத்திற்கு உள்ளானார். (இதுபற்றி மாலைமலர் வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.)
அரசியல் காரணங்களால், ராஜேந்திர பாலாஜி சொன்னாததையும் சொன்னதுபோல வதந்தி பரப்புவது சிலர் வழக்கமாகும். அதை உண்மை என நம்பி பலர் நம்புவதும் உண்டு. அப்படி சில வதந்திகளை நாமே இதற்கு முன் உண்மை கண்டறியும் சோதனை செய்து நிரூபித்துள்ளோம். அவற்றில் சில செய்திகளின் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.
Fact Crescendo Tamil Link 1 | Fact Crescendo Tamil Link 2 |
இவை அனைத்திற்கும் மேலாக, சில நாள் முன்புகூட இஸ்லாமியர்களை ராஜேந்திர பாலாஜி மிரட்டினார் என்று தகவல் பரவியது. இதற்கு பதில் அளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தனது பேச்சை சிலர் தவறாக திரித்து பரப்பியுள்ளனர் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதுபற்றி நாம் ஆய்வு செய்து, அதன் உண்மைத்தன்மையை சமர்ப்பித்துள்ளோம். ஆதாரத்திற்காக, அதன் லிங்க் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Fact Crescendo Tamil Story Link |
தொடர்ச்சியாக இப்படி ராஜேந்திர பாலாஜி சர்ச்சைக்குரிய வகையில் பேசி வரும் சூழலில்தான் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு வெளியாகியுள்ளது. இது பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும், ஃபேஸ்புக் பயனாளர்களை குழப்பும் வகையில் அமைந்துள்ளது.
சமூக ஊடகங்களின் வருகையால், சாமானிய மக்கள் அன்றாடம் படிக்கும் செய்திகளில் எது உண்மை, எது பொய் என்ற தெரியாத அளவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ராஜேந்திர பாலாஜி பற்றிய மேற்கண்ட ஃபேஸ்புக் செய்தியும் அப்படிப்பட்ட ஒன்றாக உள்ளது. தனிப்பட்ட அரசியல் விருப்பு, வெறுப்பிற்காக, அமைச்சர் பதவியில் உள்ள ஒருவரை இறந்துவிட்டதாகக் கூறி தகவல் பகிர்வது தவறான செயலாகும்.
இந்த செய்தி பதிவேற்றப்படும் நொடி வரையிலும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உடல்நலத்துடன் அன்றாட தமிழக அரசியல் நிகழ்வுகளில் பங்களிப்பு செய்து வருகிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து ராஜேந்திர பாலாஜி ட்விட்டரில் வெளியிட்ட பதிவின் விவரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட ஃபேஸ்புக் செய்தி, தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காக வெளியிடப்பட்ட தவறான தகவல் என உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, மேற்கண்ட ஃபேஸ்புக் செய்தி தவறானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இறந்துவிட்டதாகப் பரவும் வதந்தி உண்மையா?
Fact Check By: Pankaj IyerResult: False
