
இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்றினால் தற்கொலை செய்துகொள்வேன் என்று வைகோ கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
“இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்றினால் தற்கொலை செய்து கொள்வேன் வைகோ ஆவேசம் – நல்ல முடிவு” என்று குறிப்பிட்டு பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Mylai Rama என்பவர் 2020 ஜூன் 14ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்ற உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது குறித்து உள்துறை அமைச்சகத்தில் மனு செய்யலாம், அதை அமைச்சகம் பரிசீலிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. இதைக் கண்டித்து அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் அறிக்கை வெளியிட்டிருந்தனர்.
இந்த நிலையில், இந்தியாவின் பெயரை பாரதம் என்று மாற்றினால் தற்கொலை செய்வேன் என்று வைகோ கூறியதாக சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டு வருகிறது. சமூக ஊடகங்களில் இந்த பதிவை பலரும் ஷேர் செய்ய தொடங்கியுள்ளனர். அதனால் உண்மையில் வைகோ என்ன சொன்னார் என்று ஆய்வு செய்தோம்.
வைகோ வெளியிட்ட அறிக்கையைத் தேடினோம். அப்போது அது தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகள் கிடைத்தன. அதில், “இந்தியாவின் பெயரை மாற்ற வேண்டுமெனில், ‘இந்திய ஐக்கிய நாடுகள் அதாவது united states of india என்று மாற்றுவதுதான் பொருத்தமாகவும், கூட்டாட்சி கோட்பாட்டிற்கு வலு சேர்ப்பதாகவும் அமையும் எனவும் அதைவிடுத்து, இந்துத்துவ சனாதன சக்திகள் தங்கள் விருப்பம் போல் நாட்டின் பெயரை மாற்ற நினைத்தால், எதிர்மறையான விளைவுகளையே உருவாக்கும்” என்று அவர் கூறியதாக இருந்தது.
ம.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான மதிமுகத்தின் இணையதள பக்கத்தில் வைகோ அறிக்கையை வெளியிட்டிருந்தார்கள். அதில், எந்த இடத்திலும் தற்கொலை செய்வேன் என்று வைகோ கூறியதாக இல்லை.
வைகோவின் ஃபேஸ்புக் பக்கத்தைத் தேடிப் பார்த்தோம். வைகோ பெயரில் பல பக்கங்கள் இருந்தன. ம.தி.மு.க ஊடகப் பிரிவு நிர்வாகி ஒருவரைத் தொடர்புகொண்டு கேட்டபோது, ‘’இது தவறான தகவல், தலைவரின் ஃபேஸ்புக் பக்கத்தில் தினசரி அறிக்கை வெளியாகிறது. அதை பாருங்கள்,’’ என்று கூறி ஐடி லிங்க் நமக்கு கொடுத்தார். அது வெரிஃபைடு பக்கம் இல்லை. ஆனால், வைகோவின் அறிக்கைகள், மதிமுகம் தொலைக்காட்சி போட்டோகார்டுகள் அப்லோடு செய்யப்பட்டு இருந்தது.
நியூஸ் கார்டு வடிவிலும், முழு அறிக்கையும் அந்த பக்கத்தில் வெளியிடப்பட்டு இருந்தது. முழு அறிக்கையில் எந்த இடத்திலும் இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்றினால் தற்கொலை செய்வேன் என்று வைகோ கூறவில்லை.
நம்முடைய ஆய்வில், வைகோ வெளியிட்ட முழு அறிக்கையும் கிடைத்துள்ளது. தற்கொலை செய்வேன் என்று வைகோ எந்த இடத்திலும் கூறவில்லை என்பது உறுதியாகி உள்ளது. இதன் அடிப்படையில் விஷமத்தனமான, தவறான தகவலை வேண்டுமென்றே உருவாக்கிப் பகிர்ந்து வருவது உறுதியாகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:இந்தியாவின் பெயரை மாற்றினால் தற்கொலை செய்வேன் என்று வைகோ கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: False
