FACT CHECK: ராமதாஸ், திருமாவளவன் வாழ்க்கை வரலாறு படம்?- சமூக ஊடகங்களில் பரவும் போலி நியூஸ் கார்டுகள்!

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

டாக்டர் ராமதாஸ், தொல் திருமாவளவன் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்கப் போவதாக இயக்குநர்கள் அறிவித்ததாக சமூக ஊடகங்களில் போலியான நியூஸ் கார்டுகள் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

புதிய தலைமுறை வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில் “அடுத்த படத்தின் பெயரை மக்கள் சொல்ல வேண்டும்! ஜெய்பீம் படத்தைவிட வலுவான கதை அம்சம் கொண்ட, மருத்துவர் ஐயாவின் வரலாற்றை படமாக எடுக்கிறேன். படத்தின் பெயரை மக்கள்தான் சொல்ல வேண்டும். – இயக்குநர் மோகன் ஜி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை சறுக்கு மரம் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 நவம்பர் 6ம் தேதி வெளியிட்டிருந்தார். 

அசல் பதிவைக் காண: Facebook 

இயக்குநர், அரசியல் கட்சித் தலைவர் பெயரை மாற்றி கிட்டத்தட்ட இதே நியூஸ் கார்டில் உள்ள விஷயத்தை தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பா.ரஞ்சித் இயக்க உள்ள புதிய படம். திருமாவளவன் வாழ்க்கை வரலாற்றையும் தோழர் சுந்தரவல்லி வாழ்க்கை வரலாற்றையும் இணைத்து படம் எடுக்க உள்ளார் பா.ரஞ்சித், உதயநிதி தயாரிக்க உள்ள படத்தின் தலைப்பை மக்கள் முடிவு செய்ய படக்குழு வேண்டுகோள்” என்று இருந்தது. இந்த பதிவை ஒன்றிய கட்டுமரம் என்ற ஃபேஸ்புக் பக்கம் நவம்பர் 10, 2021 அன்று பதிவிட்டிருந்தது.

உண்மை அறிவோம்:

இந்த இரண்டு நியூஸ் கார்டுகளுமே போலியானது என்பது அதன் டிசைன், தமிழ் ஃபாண்ட், பின்னணி வாட்டர் மார்க் லோகோ ஆகியவற்றின் மூலம் தெரிந்துகொள்ள முடிந்தது. டாக்டர் ராமதாஸ் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப் போகிறேன் என்று இயக்குநர் மோகன் கூறியதாக போலியாக நியூஸ் கார்டு வெளியாகவே, அதற்கு பதிலடியாக திருமாவளவன் – சுந்தரவல்லி ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை இணைத்து படமாக எடுக்கப்போவதாக இயக்குநர் ரஞ்சித் கூறியதாக போலியான நியூஸ் கார்டை உருவாக்கியிருக்கலாம். இவை இரண்டுமே போலியான நியூஸ் கார்டுதான் என்பதை உறுதி செய்ய ஆய்வு செய்தோம்.

புதிய தலைமுறை மற்றும் தந்தி டி.வி வெளியிட்ட நியூஸ் கார்டுகளை அதன் ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களுக்கு சென்று பார்வையிட்டோம். அதில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்ற நியூஸ் கார்டு இல்லை. எனவே, புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவு நிர்வாகி சரவணன் மற்றும் தந்தி டிவி டிஜிட்டல் பிரிவு நிர்வாகிக்கு இந்த நியூஸ் கார்டுகளை அனுப்பி இவற்றின் நம்பகத்தன்மை குறித்து விசாரித்தோம். அவர்கள் இது போலியான நியூஸ் கார்டு என்பதை உறுதி செய்தனர். 

அரசியல் கட்சித் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக இயக்கப் போவதாக இயக்குநர்கள் அறிவித்தார்களா, அது தொடர்பாக செய்தி ஏதும் வெளியானதா என்று பார்த்தோம். அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை. இது தொடர்பாக இயக்குநர் ரஞ்சித்தின் மக்கள் தொடர்பு அதிகாரியைத் தொடர்புகொண்டு கேட்டபோது இது போலியான செய்தி என்று அவரும் உறுதி செய்தார். இயக்குநர் மோகனின் ட்விட்டர் பக்கத்தைப் பார்வையிட்டோம். அதில் டாக்டர் ராமதாஸ் வாழ்க்கை வரலாறு படம் எடுக்கப்போவதாக அவர் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இவற்றின் மூலம் இந்த நியூஸ் கார்டு, மற்றும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

டாக்டர் ராமதாஸ், திருமாவளவன் ஆகியோர் வாழ்க்கை வரலாற்று படத்தை எடுக்கப்போவதாக இயக்குநர்கள் கூறியதாக பரவும் நியூஸ் கார்டுகள் போலியானவை என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ராமதாஸ், திருமாவளவன் வாழ்க்கை வரலாறு படம்?- சமூக ஊடகங்களில் பரவும் போலி நியூஸ் கார்டுகள்!

Fact Check By: Chendur Pandian 

Result: False

Leave a Reply