
வேலூர் சி.எம்.சி மருத்துவக் கல்லூரி மத்திய – மாநில அரசு விதிமுறைகளை மீறி செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் எல்லாம் சட்டத்திற்கு அடங்காத அல்லது அடக்க முடியாத கொம்பன்களா என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்வோம்.
தகவலின் விவரம்:
வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரிக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பொது இடத்துக்கு 12 சீட் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது என்று ஒரு செய்தி கிளிப் காட்டப்பட்டுள்ளது. அந்த செய்தி அடிப்படையில் பா.ஜ.க-வைச் சேர்ந்த ராகவன் என்பவர் சமூக ஊடகத்தில் பதிவிட்டதாக ஒரு பதிவின் படத்தை வைத்துள்ளனர்.
அதில், “நீட் தேர்வு அடிப்படையில்தான் எம்.பி.பி.எஸ் மாணவர்கள் தேர்வு இருக்க வேண்டும் என்ற நிலையில் வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரிக்கு மட்டும் மாநில அரசு விலக்கு அளித்துள்ளது ஏன்? 69 சதவிகித இட ஒதுக்கீட்டு முறையிலிருந்தும் இந்த கல்லூரிக்கு மட்டும் விலக்களிக்கப்பட்டுள்ளது என்? மாநில அரசின் இந்த முடிவு கண்டிக்கத்தக்கது.” என்று கூறப்பட்டுள்ளது.
நிலைத் தகவலில், “கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் சட்டத்திற்கு அடங்கா அல்லது அடக்க முடியாத கொம்பன்களா?” என்று விமர்சித்துள்னர்.
இந்த பதிவை, Vicky Nandha என்பவர் 2019 ஜூன் 8ம் தேதி வெளியிட்டுள்ளார். மத்திய- மாநில சட்ட விதிகளை மீறி சிறுபான்மை கல்வி நிறுவனம் செயல்படுவதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதிக அளவில் இது பகிரப்பட்டும் வருகிறது.
உண்மை அறிவோம்:
வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி, அகில இந்திய அளவில் தரமான மருத்துவக் கல்வியை வழங்கும் கல்வி நிறுவனங்கள் வரிசையில் மூன்றாவது இடம் வகிக்கிறது. நேஷனல் இன்ஸ்டிடியூஷனல் ரேங்கிக் ஃபிரேம்வொர்க் சி.எம்.சி-க்கு மூன்றாவது இடத்தை வழங்கியுள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரி என்று எடுத்துக்கொண்டால் சி.எம்.சி-க்கு முதலிடம்.
ஐடா ஸோபியா ஸ்கடர் என்ற அமெரிக்கப் பெண்மணியால் 1900-ம் ஆண்டில் நர்சிங் பள்ளியாகத் தொடங்கப்பட்டது வேலூர் கிறிஸ்துவக் கல்லூரி. நூறு ஆண்டுகளுக்கு முன்பு பெண்களுக்கு வீடுகளிலேயே பிரசவம் பார்க்கப்பட்டு வந்தது. சிக்கலான பிரசவமாக இருந்தால் மருத்துவ மனைகளில் ஆண் மருத்துவர்கள்தான் இருப்பார்கள் என்பதால் அழைத்துவர மாட்டார்கள். அந்தக் காலகட்டங்களில் ஆண்கள் பிரசவம் பார்ப்பதை சமூகம் அனுமதிக்கவில்லை.
இதனால் ஏராளமான பிரசவ மரணங்கள் நிகழ்வதைக் கண்டு வெதும்பி, வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு வேலூர் திரும்பிய ஐடா நன்கொடை திரட்டி இந்த கல்லூரியை நிறுவினர். பிரசவ மரணங்களை தடுக்க, அதிகளவிலான பெண்கள் மருத்துவர்கள் ஆக வேண்டும் என்ற நோக்கத்திலேயே 100 சதவிகித இடங்கள் அவர்களுக்கே ஒதுக்கப்பட்டது. தற்போது ஆண்- பெண் என இருபாலருக்கும் மருத்துவக் கல்வி வழங்கப்படுகிறது. இருப்பினும் 51 சதவிகித இடம் பெண்களுக்கு வழங்கப்படுகிறது.
வேலூர் சி.எம்.சி கிராமப்புற மக்களுக்கு மருத்துவ சேவை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படுகிறது. இங்கு படிக்கும் மாணவர்கள், கட்டாயம் மூன்று ஆண்டு கிராமப்புறங்களில் பணியாற்ற வேண்டும் என்று ஒப்பந்தம் பெறப்பட்டே மருத்துவக் கல்வி வழங்கப்படுகிறது. அதனால்தான் மிகக் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் 35 முதல் 50 சதவிகித இடத்தை அரசு ஒதுக்கீட்டுக்கு வழங்க வேண்டும். மீதம் உள்ள இடங்களை மட்டுமே நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பிக்கொள்ள முடியும். ஆனால், நீட், இட ஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கை நடத்தினால், எதற்காக இந்த கல்லூரி திறக்கப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறாமல் போய்விடும். அதனால், அப்படி ஒரு சேர்க்கையை நடத்த அனுமதிக்க மாட்டோம் என்று வேலூர் சி.எம்.சி கல்லூரி அறிவித்தது. 2017ம் ஆண்டு அரசு ஒதுக்கீட்டில் ஒரே ஒரு மாணவரை மட்டுமே சேர்த்தது. 2018ம் ஆண்டு 100 சதவிகித இடமும் நிர்வாகத்துக்குத்தான் என்றது.
கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு சேவை செய்ய உள்ளதால் சி.எம்.சி-யிடம் மருத்துவ படிப்புக்கான இடங்களை கேட்க வேண்டாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்று கல்லூரியின் நிர்வாகி ஒருவர் கூறியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக சி.எம்.சி மருத்துவக் கல்லூரியை தொடர்புகொண்டு பேசினோம். பெயர் வெளியிட விரும்பாத மூத்த மருத்துவர் ஒருவர் கூறுகையில், “நீட் தேர்வை நாங்கள் எதிர்க்கவில்லை. சேவை மனப்பான்மையுடன் நடத்தப்படும் கல்லூரி என்பதால், இங்கு படிக்க வரும் மாணவர்களுக்கு சேவை மனப்பான்மை வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். இதற்காக சேவை மனப்பான்மை, குழுவாக இணைந்து செயல்படும் தன்மை, தலைமைப் பண்பு உள்ளதா என்று ஆய்வு செய்து சீட் வழங்குகிறோம். அதுவும், நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு இந்த தகுதிகள் உள்ளதா என்று தேர்வு நடத்தி கண்டறிந்து இடம் வழங்கவே நாங்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளோம்.
ஏனெனில், இங்கு படித்து முடித்த மாணவர்கள் நாடு முழுவதும் கிராமப்பகுதிகளில் உள்ள எங்கள் மருத்துவமனையில் குறிப்பிட்ட ஆண்டுகள் பணியாற்ற வேண்டும். இந்த விதிமுறையை இதை வேறு எந்தக் கல்லூரியும் கடைப்பிடிப்பதில்லை” என்றார்.
நீதிமன்றத்தில் விலக்கு பெற்றுள்ளது என்பதை மறைத்து இந்த பதிவிடப்பட்டுள்ளது தெரிந்தது. வேலூர் சி.எம்சி பற்றி பா.ஜ.க பிரமுகர் ராகவன் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம். அவர் வெளியிட்ட பதிவு கிடைத்தது.
நீட் மற்றும் 69 சதவிகித இடஒதுக்கீட்டின் கீழ் வேலூர் சி.எம்.சி-யில் மாணவர் சேர்க்கை நடைபெறுவது இல்லை என்று ராகவன் கண்டனம் தெரிவித்திருந்தார். சி.எம்.சி மாணவர் சேர்க்கை விண்ணப்ப கையேட்டை டவுன்லோட் செய்து பார்த்தோம். அதில், எம்.பி.பி.எஸ் பிரிவில் சேர நீட் அடிப்படையில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்ணை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த ஆண்டு அரசு ஒதுக்கீட்டுக்கு 16 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டு இருந்தது. அந்த 16 இடங்களும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 10 இடங்கள் சி.எம்.சி-யில் பணி புரிபவர்களின் குழந்தைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 74 இடங்களும் கிறிஸ்தவ மிஷனரி பரிந்துரை அடிப்படையில் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கல்லூரியில் ஓராண்டுக்கான கல்வி கட்டணமாக ரூ.48,530 நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

இதுவே இதர தனியார் நிகர்நிலை மருத்துவ பல்கலைக் கழகம், கல்லூரிகளில் ரூ. 2 லட்சத்திலிருந்து 22.5 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. முன்பு டொனேஷன் என்ற பெயரில் கட்டணம் வசூலிக்கப்பட்டது, தற்போது அரசே கல்லூரிகளுக்கான கட்டணத்தை பல லட்சங்களாக நிர்ணயித்துள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது.

நாம் மேற்கொண்ட ஆய்வில்,
நீட் தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு மட்டுமே வேலூர் சி.எம்.சி-யில் இடம் ஒதுக்கப்படுகிறது.
இட ஒதுக்கீட்டு அடிப்படையில் இந்த ஆண்டு 16 சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. எவ்வளவு சீட் ஒதுக்குவது என்பது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது.
கிராமப்புறங்களில் கட்டாயம் சேவை புரிய வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் குறைந்த கட்டணத்தில் மருத்துவக் கல்வி வழங்கப்படுவதாக கல்லூரி நிர்வாகம் தெரிவிக்கிறது.
நீட் தேர்வை எதிர்க்கவில்லை, நீட்டில் வெற்றி பெற்ற மாணவர்களில் இருந்து சேவை மனப்பான்மை உள்ள தகுதி வாய்ந்த மாணவர்களை தேர்வு செய்ய மட்டுமே அனுமதி கேட்பதாக கல்லூரி நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கிராமப்புறத்தில் சேவை செய்வதால், அவர்களிடம் மருத்துவ மாணவர்களுக்கான அரசு ஒதுக்கீட்டை கேட்க வேண்டாம் என்று நீதிமன்றம் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், சட்டத்துக்கு உட்பட்டே, உரிய விதிவிலக்கைப் பெற்றே வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி செயல்படுகிறது என்பது உறுதி செய்யப்படுகிறது. இதன் மூலம் விதிமுறைளை மதிக்காமல் சி.எம்.சி செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:அரசு சட்டங்களை மீறி வேலூர் சி.எம்.சி மருத்துவக் கல்லூரி செயல்படுகிறதா? – சர்ச்சையைக் கிளப்பும் ஃபேஸ்புக் பதிவு!
Fact Check By: Praveen KumarResult: False
