
சவுதி அரேபியாவில் நிலத்தைத் தோண்டும்போது பழங்கால சிலை ஒன்று கிடைத்ததாகவும், அதை நாகம் ஒன்று பாதுகாத்து வருகிறது என்றும் கூறி ஃபேஸ்புக் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Link I Archived Link 1 I Archived Link 2
1.35 நிமிடங்கள் ஓடும் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளனர். வீடியோவில் யாரோ அரபி மொழியில் ஏதோ சொல்வது போல் உள்ளது. வீடியோவில் புல்டோசர் இயந்திரத்தை பயன்படுத்தி அந்த பகுதியில் பள்ளம் தோண்டுவது போல் உள்ளது. அப்போது அங்கே ஒரு சிலை அருகே பாம்பு ஒன்று இருந்து, அதைத் தடுப்பது போல உள்ளது. வீடியோவில் உள்ளவர்களைப் பார்க்கும்போது இந்தியர்களைப் போல இருந்தது. அதில் ஒருவர் சாமியார்கள் அணிவது போன்ற காவி நிற துண்டு ஒன்றைத் தலையில் கட்டியிருக்கிறார்.
நிலைத் தகவலில், “சௌதி அரேபியாவில் நிலத்தை தோண்டும்பொழுது கிடைத்த சிலை அதைப் பாதுகாக்கும் நாகம். தமிழன்தான் உலகை ஆண்டான் என்பதற்கு மேலும் ஒரு அடையாளம், எடுத்துக்காட்டு” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை தச்சூர் கிராமம் ஊராட்சி என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் 2019 மே 8ம் தேதி பகிர்ந்துள்ளனர்.
உண்மை அறிவோம்
இந்த வீடியோவின் பின்னணி குரல் அரபி போல உள்ளது. ஆனால், வீடியோவில் உள்ளவர்கள் எல்லாம் இந்தியர்கள் போல இருந்தனர். ஒருவேளை, அரேபியாவுக்கு வேலைக்குச் சென்ற இந்தியர்களாக இருக்கலாம் என்று தோன்றியது.
இந்த வீடியோவின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய, வீடியோவின் முக்கிய காட்சிகளை படமாக எடுத்து, அதை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம்.
அப்போது இந்த வீடியோ பற்றிய பல தகவல் கிடைத்தன. அதில், முதன்மையானது இந்த வீடியோ சவுதி அரேபியாவில் எடுக்கப்பட்டது இல்லை. இந்த வீடியோ மகாராஷ்டிரா மாநிலம் பீட் அருகே எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது.
நம்முடைய தேடலில், சிவன் சிலையை, விஷ்ணு சிலையைப் பாதுகாக்கும் பாம்பு என்று பலரும் இந்த வீடியோவை தங்கள் யூடியூப் பக்கத்தில் பகிர்ந்திருந்தது தெரிந்தது.
விஷ்ணு சிலையை பாதுகாக்கும் நாகம் என்று ஒருவர் இதே வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் உள்ளவர்கள் மராத்தியில் பேசிக்கொண்டிருந்தது தெளிவாக கேட்டது. அந்த வீடியோவை வெளியிட்டவர் மகாராஷ்டிரா மாநிலம் அபன்ஜோகா என்ற பகுதியில் இது நிகழ்ந்தது என்று குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பாக தொடர்ந்து தேடியபோது, சாமி சிலையைப் பாதுகாக்கும் நாகம் என்று கிராம மக்கள் வதந்தியை பரப்பியது கண்டுபிடிக்கப்பட்டது என்று பிசினஸ் ஸ்டாண்டர்டு வெளியிட்ட செய்தி கிடைத்தது. இந்த செய்தியை அவர்கள் 2018 ஏப்ரல் 18ம் தேதி வெளியிட்டிருந்தனர். அதில், “மகாராஷ்டிர மாநிலத்தில் ஒரு கிராமத்தில் பழமையான சாமி சிலையை சுற்றியபடி பாம்பு இருக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆனது. பீட் மாவட்டத்தில் கன்னேர்வாடி பகுதியில் நிலத்தைத் தோண்டும்போது சிவன் சிலை கிடைத்ததாகவும் அந்த சிலையைப் பாம்பு ஒன்று பாதுகாத்து வருவது போலவும் அந்த வீடியோ இருந்தது.
சமூக ஊடகங்களில் அந்த வீடியோ வைரல் ஆனதைத் தொடர்ந்து அந்த பகுதியில் நிறைய மாறுதல்கள் நடந்தன. பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடை, பூ, பழம் கடை என்று பல கடைகள் அங்கு முளைத்தன. சிலர், அங்கு மைக், ஸ்பீக்கர் கட்டி பக்தி பாடல்களை ஒலிக்கவிட்டனர். அந்த பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கூடி பாட்டு பாடி இறைவனை வேண்ட ஆரம்பித்தனர்.
இந்த சிலையை ஆய்வு செய்த தொல்பொருள் ஆய்வுத் துறையினர் அது சிவன் சிலை இல்லை, சூரியன் சிலை என்று கூறியுள்ளனர்.
இந்த நிலையில் மற்றொரு வீடியோவை தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், ஒருவர் அந்த மிகப்பெரிய நாகத்தைத் தூக்கிவந்து சிலை மீது விடும் காட்சி உள்ளது. இதன் மூலம் சாமி சிலையை பாம்பு பாதுகாக்கிறது என்ற தகவல் தவறானது” என்று குறிப்பிட்டிருந்தனர். இதே செய்தியை இந்தியாடுடே உள்ளிட்ட பல ஊடகங்களும் வெளியிட்டு இருந்தன. அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள். டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
சிலையை நாகம் காப்பது உண்மையா, பொய்யா என்ற ஆய்வுக்குள் நாம் இறங்கவில்லை… மக்களின் கடவுள் நம்பிக்கை தொடர்பாக நாம் எந்த ஆய்வும் நடத்தவில்லை. இந்த சம்பவம் சவுதி அரேபியால் நடந்ததா என்று மட்டுமே ஆய்வு மேற்கொண்டோம்.
நம்முடைய ஆய்வில்,
வீடியோவில் உள்ளவர்கள் இந்தியர்கள் என்று தெரிந்து.
இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்ததாக பல வீடியோ பதிவு ஆதாரங்கள் நமக்கு கிடைத்துள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக பிசினஸ் ஸ்டாண்டர்டு, இந்தியா டுடே வெளியிட்ட செய்திகள் கிடைத்துள்ளன.
இதன் அடிப்படையில், இந்த சாமி சிலை சவுதி அரேபியாவில் கிடைக்கவில்லை, இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தில் கிடைத்துள்ளது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் எடுக்கப்பட்ட வீடியோவை சவுதி அரேபியாவில் படம் பிடிக்கப்பட்டது என்று தவறான தகவலுடன் ஃமேற்கண்ட ஃபேஸ்புக் வீடியோவை பகிர்ந்திருப்பது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:அரேபியாவில் சிலையைப் பாதுகாக்கும் நாகம்: ஃபேஸ்புக் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
