தாயிடம் பால் குடிக்கும் பாம்புக் குட்டிகள்: ஃபேஸ்புக்கில் விஷமத்தனம்

சமூக ஊடகம்

‘’தாயிடம் பால் குடிக்கும் பாம்புக் குட்டிகள்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பரவி வரும் ஒரு புகைப்படத்தைக் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

Facebook Link I Archived Link

Pravin Devaraj என்பவர் ஆகஸ்ட் 17, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், பெரிய பாம்பு ஒன்றின் அருகே, குட்டிப்பாம்புகளை வரிசையாக படுக்க வைத்துள்ளனர். பார்ப்பதற்கு பால் குடிப்பது போல உள்ளது. ஆனால், பாம்புகளின் உடலில் எந்த அசைவும் இல்லை.

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட புகைப்படத்தில் இருப்பது ஆப்ரிக்கா, அமெரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் காணப்படும் ரேட்டில் ஸ்நேக் எனப்படும் விஷப் பாம்பாகும். இந்த வகை பாம்புகள், பாலூட்டிகள் கிடையாது. தவிர, இவை முட்டையிடும். ஆனால், அதனை கோழிகள் போல சரியாகப் பராமரிக்காது. முட்டையில் இருந்து தானாகவே குட்டிப் பாம்புகள் முதிர்ச்சியடைந்து வெளிவந்தால்தான் உண்டு.

இவை அனைத்திற்கும் மேலாக, பாம்பின் உடலில் பால் சுரப்பிகள் எதுவும் கிடையாது. ஆடு, மாடுகளுக்கு உள்ளதுபோல, பாம்பின் உடலில் பால் சுரக்காது.

மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிடப்படும் பாம்புகள் இருக்கும் புகைப்படத்தை கூகுளில் பதிவேற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது, இந்த புகைப்படம் பல ஆண்டுகளாகவே இணையத்தில் பகிரப்பட்டு வரும் போலியான ஒன்று என தெரியவந்தது. இதுபற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இந்த புகைப்படம் உலகம் முழுக்க பல்வேறு மொழிகளிலும் பல ஆண்டுகளாகவே பகிரப்பட்டு வருவதால், இதுபற்றி https://www.wcnc.com என்ற செய்தி இணையதளம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தி அதன் முடிவுகளை வீடியோவாகவே தொகுத்து வெளியிட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டில் வெளியிடப்பட்ட அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இறுதியாக, அந்த புகைப்படத்தை ஒருமுறை உற்றுப் பார்த்தாலே விவரம் புரியும். பாம்புகளை சுற்றிலும் ரத்தக் கறை படிந்திருப்பதோடு, அவற்றின் உடலில் அடிபட்ட காயம் தெளிவாக தெரியும். பால் குடிப்பது போல குட்டிப் பாம்புகளை செட்டப் செய்துள்ளனர். அவற்றின் வாய் திசைதிருப்பியபடி இருப்பதை தெளிவாகக் காணலாம்.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி, பாம்புக் குட்டிகள், தாயிடம் பால் குடிப்பது போன்ற புகைப்படம் தவறாகக் சித்தரிக்கப்பட்ட ஒன்று என சந்தேகமின்றி தெளிவாகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் புகைப்படம் தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:தாயிடம் பால் குடிக்கும் பாம்புக் குட்டிகள்: ஃபேஸ்புக்கில் விஷமத்தனம்

Fact Check By: Pankaj Iyer 

Result: False