FACT CHECK: ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க-வை அகற்றினால்தான் இந்தியாவை தாக்க முடியும் என்று தாலிபான்கள் கூறினரா?
பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை பற்றி மிக உயர்வாக தாலிபான்கள் அமைப்பின் தலைமைச் செயலாளர் கூறியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
அசல் பதிவைக் காண: Facebook I Archive
ஆப்கானிஸ்தானியர் போன்று ஆடை அணிந்த ஒருவர் பேசும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "இந்தியாவில் பிஜேபி இருக்கும் வரை நம்மால் எதுவும் செய்ய முடியாது. ஆர்எஸ்எஸ் மற்றும் பிஜேபி ஆகியவை இந்தியாவில் சக்திவாய்ந்தவை என்பதை தலிபான்கள் ஏற்றுக்கொண்டனர், இந்தியா தாக்கப்பட வேண்டும் என்றால், அது எந்த நாட்டாலும் முடியாது. முதலில் பிஜேபியை அகற்றனால் மட்டுமே நம்மால் எதையும் செய்ய முடியும். தலிபான் தலைமை செயலாளர் கூறியதை இந்த வீடியோவை பாருங்கள் ... ஆர்எஸ்எஸ் பெருமை பற்றி..... ... *முழு வீடியோவையும் கண்டிப்பாக பாருங்கள் தெரியும் .." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோ பதிவை Jayaramachandran Sethuraman என்ற ஐடி-யைக் கொண்டவர் 2021 செப்டம்பர் 12ம் தேதி ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
வீடியோவில் உள்ள நபர் என்ன சொல்கிறார் என்பது புரியவில்லை. ஆனால், அவர் ஆடையைப் பார்க்கும் போது ஆப்கானிஸ்தானைச் சார்ந்தவர் போல உள்ளது. இந்த நபர் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான் அமைப்பின் தலைமைச் செயலாளர் என்று இந்த வீடியோவை பதிவிட்டுள்ள நபர் குறிப்பிட்டுள்ளார். இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
வீடியோவை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். yandex.com ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடிய போது இந்த நபரின் பெயர் காலித் முகமது அப்பாஸி என்று தெரிந்தது. இவர் இஸ்லாமிய சொற்பொழிவாளர் என்றும், இவர் பாகிஸ்தானில் வசிக்கிறார் என்றும் தகவல் கிடைத்தது.
அசல் பதிவைக் காண: youtube.com I Archive
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் NWAA Studios என்ற லோகோ இருந்தது. அந்த லோகோவுடன் கூடிய வீடியோ நமக்குக் கிடைத்தது. அதில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டதை போன்று இவர் பேசும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி அந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது. 2019ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி இந்த வீடியோ ஒளிப்பதிவு செய்யப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
அவருடைய பெயரில் யூடியூப் சேனல் இருந்தது. ஃபேஸ்புக், ட்விட்டரில் கணக்கு உள்ளதா என்று தேடினோம். அப்போது, அவருக்கு ஃபேஸ்புக்கில் ப்ரொஃபைல் இருந்தது தெரிந்தது. அதில், அவர் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் வசிப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.
அசல் பதிவைக் காண: Facebook I Archive
வீடியோவில் இடம் பெற்ற காலித் முகமத் அப்பாஸியிடம் நம்முடைய மலையாளம் ஃபேக்ட் கிரஸண்டோ தரப்பில் தொடர்புகொண்டு கேட்கப்பட்டது. அதற்கு அவர், "நான் தாலிபான் அமைப்பைச் சார்ந்தவன் இல்லை. தாலிபான் அமைப்பினரோடு எந்த தொடர்பும் எனக்கு இல்லை. நான் பாகிஸ்தானைச் சார்ந்தவன். இந்த வீடியோ இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டது. இந்த வீடியோவை வைத்து தவறான தகவல் சேர்த்து பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதை நானும் அறிவேன். தாலிபான் தலைவர் இப்படி பேசினாரா என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. என்னுடைய பேச்சுக்கு தவறான அர்த்தம் கற்பிக்கப்படுகிறது" என்று கூறியுள்ளார். ஃபேக்ட் கிரஸண்டோ மலையாளம் வெளியிட்ட கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இஸ்லாமிய அறிஞர் ஒருவரின் பேச்சை எடுத்து வந்து, தாலிபான்களின் தலைமைச் செயலாளர் பேச்சு என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
ஆர்எஸ்எஸ், பாஜக இருக்கும் வரை இந்தியா மீது தாக்குதல் நடத்த முடியாது என்று தாலிபான்கள் கூறியதாக பரவும் வீடியோ தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel
Title:ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க-வை அகற்றினால்தான் இந்தியாவை தாக்க முடியும் என்று தாலிபான்கள் கூறினரா?
Fact Check By: Chendur PandianResult: False