நடிகர் சூர்யாவின் மனைவி ஒரு முஸ்லீம்; அவர் கிறிஸ்தவராக மதம் மாறுகிறாரா?
‘’நடிகர் சூர்யாவின் மனைவி ஒரு முஸ்லீம்; அவர் விரைவில் கிறிஸ்தவராக மதம் மாறப் போகிறார்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
Kubendran P என்பவர் கடந்த ஜூலை 14, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், ‘’சூர்யாவிற்கு திருமணம் செய்ய யாரும் பெண் தரவில்லை. எனவே, மும்பையை சேர்ந்த முஸ்லீம் நடிகையின் வலையில் விழுந்து, திருமணம் செய்துகொண்டு, குடும்பமே முஸ்லீமாக மாற இருந்தனர். தமிழக அரசின் மிரட்டல் காரணமாக, அவர்கள் மதம் மாறுவது நிறுத்தப்பட்டது. தற்போது வைகோ வழியில் மோகன் சி லாசரஸ் உதவியுடன் கிறிஸ்தவ மதம் மாற சூர்யா திட்டமிட்டுள்ளான். இந்த தருதலையை யாரும் கண்டுகொள்ள வேண்டாம்,’’ என இஷ்டத்திற்கு எழுதியுள்ளனர்.
இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
நடிகர் சூர்யா சமீபத்தில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை பற்றியும், கல்வி என்ற பெயரில் இந்தியாவில் நடைபெறும் அரசியலை பற்றியும் விமர்சித்து பேசியிருந்தார். இது பல தரப்பிலும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அவரது பேச்சின் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
சூர்யாவின் பேச்சிற்கு பலரும் ஆதரவு தெரிவித்த நிலையில், பாஜக மற்றும் அஇஅதிமுக ஆதரவாளர்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தற்போது கூட தனது பேச்சிற்கு சூர்யா விளக்கம் அளித்துள்ளார். இதனை பற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இந்நிலையில்தான் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அந்த பதிவில் கூறியுள்ளதுபோல, சூர்யாவின் மனைவி ஜோதிகா ஒரு முஸ்லீமா என்ற சந்தேகத்தின் பேரில் ஆய்வு மேற்கொண்டோம். ஆனால், அப்படி இல்லை. ஜோதிகாவின் தந்தை ஒரு சினிமா தயாரிப்பாளர். அவரது தாய்க்கு முதலாவது திருமணத்தில் பிறந்தவர் நக்மா. 2வது திருமணமாக, நக்மாவின் தாய் சினிமா தயாரிப்பாளர் சந்தர் சதானந்த் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அந்த திருமணத்தின் வழியாக பிறந்தவர்தான் ஜோதிகா. அதாவது ஜோதிகா, நக்மாவின் தாய் ஒரு முஸ்லீம். ஆனால், அவர் முதலாவது மற்றும் 2வது முறை திருமணம் செய்துகொண்டது இந்துக்களை. இதன்படி பார்த்தால், தந்தை வழியில் ஜோதிகாவும், நக்மாவும் இந்துக்கள்தான். அவர்கள் தற்போதும் இந்து மத வழக்கங்களையே பின்பற்றுகிறார்கள்.
இதேபோல, சூர்யாவும், ஜோதிகாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். பெண் கிடைக்காமல் சூர்யா ஜோதிகாவை திருமணம் செய்துகொள்ளவில்லை. இது மிகத் தவறான தகவல். இந்து மத முறைப்படி நடைபெற்ற அவர்களின் திருமண வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, மோகன் சி லாசரஸ் வழிகாட்டுதலில் வைகோ சமீபத்தில் கிறிஸ்தவராக மாறியிருந்தார் எனக் கூறியுள்ளது உண்மையா என தகவல் தேடினோம். ஆனால், அது தவறான தகவல். இதுபற்றி 2017ம் ஆண்டில் வதந்தி பரவிய நிலையில் அப்போதே வைகோ இதனை மறுத்து விளக்கம் அளித்திருக்கிறார். அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,
1) ஜோதிகாவின் தாய் ஒரு முஸ்லீம். அவரது தந்தை ஒரு இந்து. தற்போதும் இவர்கள் இந்து மதத்தையே பின்பற்றுகிறார்கள்.
2) சூர்யா பெண் கிடைக்காமல் ஜோதிகாவை திருமணம் செய்துகொள்ளவில்லை. இவர்களின் திருமணம் ஒரு காதல் திருமணம்.
3) வைகோ கிறிஸ்தவராக மதம் மாறவில்லை. அவரே இதனை மறுத்துள்ளார்.
4) சூர்யா கிறிஸ்தவராக மதம் மாறப் போகிறார் என்பதும் தவறான தகவல். பாஜக.,வினர் பொதுவாக, தம்மை விமர்சிப்பவர்கள் மீது முஸ்லீம் அல்லது கிறிஸ்தவ கைக்கூலி பட்டம் சுமத்துவது வழக்கமாக உள்ளது. அதுதான் சூர்யா விவகாரத்திலும் நடந்துள்ளது.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவு முற்றிலும் தவறான தகவல்களை கொண்டுள்ளதாக, உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
Title:நடிகர் சூர்யாவின் மனைவி ஒரு முஸ்லீம்; அவர் கிறிஸ்தவராக மதம் மாறுகிறாரா?
Fact Check By: Pankaj IyerResult: False