
ஊரடங்கை எத்தனை நாட்களுக்கு, எத்தனை நாட்கள் இடைவெளியில் அறிவிக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் வழிகாட்டு நெறிமுறைகளை வௌியிட்டதாகக் கூறி ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Link | Archived Link |
உலக சுகாதார நிறுவனத்தின் லோகோவோடு துண்டு பிரசுரம் போன்று ஒன்றை பகிர்ந்துள்ளனர். அதில் ஆங்கிலத்தில், “உலக சுகாதார நிறுவனம், மிகவும் மோசமான வைரஸை கட்டுப்படுத்துவதற்கான ஊரடங்கு அறிவிப்பு வழிகாட்டு நெறிமுறைகள்.
ஸ்டெப் 1 – 1 நாள்.
ஸ்டெப் 2 – 21 நாள்.
அதன்பிறகு ஐந்து நாட்கள் இடைவெளி.
ஸ்டெப் 3 – 28 நாட்கள்.
அதன்பிறகு ஐந்து நாட்கள் இடைவெளி.
ஸ்டெப் 4 – 15 நாட்கள்.
இந்த வழிகாட்டுதலையே இந்திய அரசும் பின்பற்றி மார்ச் 22ம் தேதி ஒரு நாள் ஊரடங்கை அறிவித்தது.
மார்ச் 24 – ஏப்ரல் 14 – 21 நாட்கள் (முதல் ஊரடங்கு)
ஏப்ரல் 15 முதல் 19 வரை – ஊரடங்கு தளர்வு.
ஏப்ரல் 20 முதல் மே 18 வரை – 28 நாட்கள் (2வது ஊரடங்கு)
ஒருவேளை கொரோனா வைரஸ் பரவுதல் பூஜ்ஜியம் என்ற நிலையை அடைந்தால் ஊரடங்கு ரத்து செய்யப்படும்.
மே 19 முதல் 24 வரை – ஊரடங்கு தளர்வு
மே 25 முதல் ஜூன் 10 – 15 நாட்கள் (இறுதி ஊரடங்கு)” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தை Kannan Ramachandran Yadav என்பவர் 2020 ஏப்ரல் 6ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
உலக சுகாதார நிறுவனத்தை பின்பற்றியே மோடி ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளார். ஒரு நாள் மக்கள் ஊரடங்கு என்பது எல்லாம் உலக சுகாதார நிறுவனம் வழிகாட்டுதல் அடிப்படையில்தான் என்று பலரும் இந்த பதிவை வாட்ஸ் ஆப், ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருகின்றனர். இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
முதலில், உலக சுகாதார நிறுவனம் இது தொடர்பாக ஏதேனும் வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டுள்ளதா என்று அறிய அதன் இணையதள பக்கத்தில் தேடினோம். அப்படி எந்த ஒரு தகவலும் நமக்கு அதன் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் கிடைக்கவில்லை.
Search Link |
உலக சுகாதார நிறுவனத்தின் தென் கிழக்கு ஆசியாவுக்கான ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக ஒரு பதிவு வெளியாகி இருப்பது தெரிந்தது. அதை பார்த்தபோது, “ஊரடங்குக்காக உலக சுகாதார நிறுவனம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டதாக சமூக ஊடங்களில் பரவும் தகவல் ஆதாரமற்றது, தவறானது. உலக சுகாதார நிறுவனம் ஊரடங்கு தொடர்பாக எந்த வழிகாட்டுதலையும் வெளியிடவில்லை” என்று குறிப்பிட்டிருந்தனர்.
Archived Link |
உலக சுகாதார நிறுவனம் பெயரில் செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று தேடினோம். அப்போது பல உண்மை கண்டறியும் ஆய்வுகள் வெளியாகி இருப்பதைக் காண முடிந்தது. இந்தியா டுடே வெளியிட்ட ஆய்வில், அதில் அவர்கள் உலக சுகாதார நிறுவன அதிகாரிகளைத் தொடர்புகொண்டு கேட்டதாகவும், அப்படி எதுவும் அவர்கள் வெளியிடவில்லை என்று கூறியதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.
indiatoday.in | Archived Link |
நம்முடைய ஆய்வில்,
உலக சுகாதார நிறுவனத்தின் இணையதள பக்கத்தில் ஊரடங்குக்கான வழிகாட்டு நெறிமுறை தொடர்பாக எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.
சமூக ஊடகங்களில் பரவும் தகவல் தவறானது என்று உலக சுகாதார நிறுவனத்தின் தென் கிழக்கு ஆசிய பிரிவு ட்வீட் வெளியிட்டுள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், கொரோனா தடுப்புக்காக உலக சுகாதார நிறுவனம் ஊரடங்கு வழிகாட்டுதல்களை வெளியிட்டது என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:ஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகளை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டதா?
Fact Check By: Chendur PandianResult: False
