
‘’மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா,’’ என்று கூறி ஒரு செய்தியை தி இந்து தமிழ் திசை இணையதளம் வெளியிட்டிருந்தது. இந்த செய்தியை, தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்திலும் இந்து தமிழ் திசை பகிர்ந்துள்ளது. கல்ராஜ் மிஸ்ரா இன்னமும் மத்திய அமைச்சர் பதவியில் தொடர்கிறாரா என்ற கோணத்தில் இதுபற்றி நாம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம்.
தகவலின் விவரம்:
குடிமக்கள் வங்கிக்கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்துவதாக பாஜக உறுதி அளிக்கவில்லை: மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா மறுப்பு

Archived Link
2019, ஏப்ரல் 7ம் தேதி தி இந்து தமிழ் இணையதளத்தில் வெளியான இச்செய்தி, அதே நாளில், அதன் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்திலும் பகிரப்பட்டுள்ளது. ஆர். ஷபிமுன்னா என்பவர் இந்த செய்தியை எழுதியுள்ளார்.
உண்மை அறிவோம்:
குடிமக்கள் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்துவதாக பாஜக உறுதி அளிக்கவில்லை என்று மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா தெரிவித்துள்ளார், என, இந்த செய்தியில் கூறியுள்ளனர்.
இவர்கள் கூறியது என்னமோ சரியான செய்திதான். செய்தியில் எந்த குறையும் சொல்லவில்லை. கல்ராஜ் மிஸ்ரா, ஏப்ரல் 6ம் தேதி இதுதொடர்பாக, ஊடகங்களில் பேட்டி அளித்துள்ளார். நாட்டு மக்களின் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்துவேன் என்று மோடி உறுதி அளித்ததாகக் கூறி, அரசியல் கட்சியினரும் சமூக ஊடக பயன்பாட்டாளர்களும் கேள்வி எழுப்பி வருவதை தொடர்ந்து, அதற்கு பதில் அளிக்கும் வகையில், பாஜக மூத்த தலைவரான கல்ராஜ் மிஸ்ரா இந்த பேட்டியை அளித்தார். இதுபற்றி செய்தி வெளியிட்ட ஊடகங்கள் பலவும், அவர் முன்னாள் மத்திய அமைச்சர் எனக் கூறியுள்ள நிலையில், தி இந்து தமிழ் திசைக்கு, மட்டும் இதில் என்ன முரண்பாடு ஏற்பட்டது எனத் தெரியவில்லை.

கடந்த 2014ம் ஆண்டு மோடி தலைமையில் பாஜக-தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்தபோது, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சராக கல்ராஜ் மிஸ்ரா பதவியேற்றுக் கொண்டார். ஆனால், 2017ம் ஆண்டு செப்டம்பரில் மத்திய அமைச்சரவையை மறு விரிவாக்கம் செய்து, மோடி நடவடிக்கை மேற்கொண்டார். இதன்போது, கல்ராஜ் மிஸ்ரா உள்ளிட்ட 6 அமைச்சர்கள் மாற்றப்பட்டு, வேறு சிலர் நியமிக்கப்பட்டனர். அதே சமயம், புதியவர்களுக்கு வழிவிட்டு, தனது பதவியை ராஜினாமா செய்வதாக, கல்ராஜ் மிஸ்ரா, செப்டம்பர் 2017, 2ம் தேதியன்று ஊடகங்களில் பேட்டி அளித்தார்.
இதன்படி, 2017, செப்டம்பர் 2ம் தேதியுடன் கல்ராஜ் மிஸ்ராவின் அமைச்சர் பதவிக்காலம் முடிவுக்கு வந்துவிட்டது.

இதுதொடர்பாக, விக்கிப்பீடியா தகவல் ஆதாரம் படிக்க இங்கே கிளிக் செய்யவும். இதேபோல, தி எகனாமிக் டைம்ஸ் வெளியிட்ட விரிவான செய்தியை படிக்க விரும்பினால், இங்கே கிளிக் செய்யவும்.
உண்மை இப்படியிருக்க, கல்ராஜ் மிஸ்ரா அமைச்சர் பதவியில் இருந்து வெளியேறி, 2 ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது அவர் மத்திய அமைச்சர் பதவியில் தொடர்வதாகக் கூறி, தி இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது.

UPSC, TNPSC உள்ளிட்ட பல்வேறு அரசுப் பணி தேர்வுகள் எழுதுவோர் தவறாமல் படிக்கும் நாளிதழ்களில் தி இந்துவும் ஒன்றாகும். இதில் வெளியிடப்படும் செய்திகளை அடிப்படையாக வைத்து, பொது அறிவை வளர்த்து, தேர்வு எழுதி, அரசுப் பணிகளுக்கு வந்தவர்கள் பலரும் உள்ளனர். அத்துடன், தி இந்துவில் வேலை கிடைக்காதா என்ற ஏக்கத்தில் தீவிர முயற்சி செய்பவர்களும் ஏராளம். ஊடகத்துறையினருக்கு மட்டுமின்றி, மத்திய, மாநில அரசுகளுக்கும் பல்வேறு விவகாரங்களில், வழிகாட்டியாகச் செயல்படும் தி இந்து, இப்படி ஒரு தவறான செய்தி வெளியிட்டது வியப்பாக உள்ளது. இது, அந்த ஊடகத்தின் மீதுள்ள நம்பகத்தன்மையை சீர்குலைப்பதாகவும், இச்செய்தியை படிக்கும் வாசகர்களை தவறாக வழிநடத்துவதாகவும் உள்ளது.
சூரியனுக்கே டார்ச் லைட் அடிக்கிறாயா என்று கேட்பதுபோல, தி இந்துவுக்கே செய்தி வெளியிடுவதில் குழப்பமா என்றுதான் இதைப் பார்த்தால் கேட்கத் தோன்றுகிறது. இன்றைய சூழலில், போதிய அனுபவம்/திறன் இல்லாத பணியாளர்கள், நாட்டின் பல்வேறு துறைகளிலும் காணப்படுகிறார்கள். இதில், தி இந்து தமிழ் திசையும் விதிவிலக்கல்ல என்று இதன்மூலமாக, தெளிவாகிறது.
உரிய ஆதாரங்களின்படி, மேற்கண்ட செய்தியின் தலைப்பு தவறாக உள்ளது என உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், தி இந்து தமிழ் திசை வெளியிட்ட செய்தியில், தலைப்பு தவறு என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்பட மற்றும் வீடியோ பதிவுகளை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

Title:கல்ராஜ் மிஸ்ரா இன்னமும் மத்திய அமைச்சர் பதவியில் உள்ளார்: தி இந்து தமிழ் திசைக்கு வந்த குழப்பம்
Fact Check By: Parthiban SResult: False Headline
