தொண்டர்கள் ஆயிரம் பேர் உயிரைக் கொடுத்தாவது ஹிந்தியை எதிர்ப்போம் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கூறியதாக புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். முடிவு உங்கள் பார்வைக்கு...

தகவலின் விவரம்:

ஸ்டாலின் உம் என்று கூறட்டும் , பிரளயத்தை ஏற்படுத்துவோம் - வைகோ

VAIKO PT 2.png

Archived link

புதிய தலைமுறை வெளியிடும் நியூஸ் கார்டு ஒன்றை பகிர்ந்துள்ளனர். அதில், “நான் சரியென்று சொன்னால் சாக உண்மையான தொண்டர்கள் ஆயிரம் பேர் இருக்கிறார்கள். அவர்கள் உயிரைக் கொடுத்தாவது ஹிந்தியை எதிர்ப்போம் – வைகோ” என்று உள்ளது. இதன் கீழே, அருணா ஐயர் லக்‌ஷ்மன் என்பவர் கமெண்ட் செய்தது பொல ஒரு படம் இணைக்கப்பட்டுள்ளது. அதில், "இம்பாசிபிள். தொண்டர்கள் ஏன் சாகனும? நீ உன் பிள்ளைகள் பேரக்குழந்தைகள் சாகவும்" என்று உள்ளது.

பார்க்க, புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டுக்கு அருணா என்பவர் சூடான பதில் அளித்தது போல உள்ளது.

இந்த பதிவை, Balachandar Nagarajan என்பவர் உலகத் தமிழர் ஒருங்கிணைந்த முகநூல் தளம் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் 2019 ஜூன் 8ம் தேதி வெளியிட்டுள்ளார். இது உண்மை என்று நம்பி பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

எந்த ஒரு தலைவரும் தன்னுடைய தொண்டர்கள் உயிரிழக்க வேண்டும் என்று நினைக்கமாட்டார்கள். அப்படியே அவர்கள் நினைத்தாலும் இப்படி வெளிப்படையாக, ஊடகங்களில் செய்தி வெளியாகும் அளவுக்கு சொல்வதற்கு வாய்ப்பே இல்லை.

இதனால், புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டு உண்மைதானா என்று கண்டறிய முடிவு செய்தோம். மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் ஜூன் 1, 2019 என்று இருந்தது. இதனால், குறிப்பிட்ட அந்த தினத்தில் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள செய்தி நியூஸ் கார்டு வெளியானதா என்று தேடினோம்.

VAIKO PT 3.png

மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ளது போன்றே ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ படத்துடன் கூடிய நியூஸ் கார்டு வெளியாகி இருந்தது. அதை கிளிக் செய்து படித்தபோது, அதில் உள்ள விஷயம் வேறாக இருந்தது.

Archived link

அந்த நியூஸ் கார்டில், “1965 மொழிப் போராட்டத்தை விடப் பன்மடங்கு எழுச்சியுடன் தமிழ்நாட்டில் போராட்டம் வெடிக்கும் என்பதை இந்தி எதிர்ப்புப் போரில் களம் கண்டவன் என்ற முறையில் எச்சரிக்கிறேன் - வைகோ" என்று இருந்தது. இதன் மூலம் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள படம் போலி என்று உறுதியானது.

மேலும், ஃபேஸ்புக் பதிவில் உள்ள நியூஸ் கார்டில், வைகோ கூறியதாக இருந்த பகுதியில் புதிய தலைமுறை லோகோ, டிசைன் உள்ளிட்டவை இல்லை என்பதும் தெரிந்தது. ஒரிஜினல் நியூஸ் கார்டில், எழுத்துக்குப் பின்புறம் வாட்டர் மார்க் ஆக, புதிய தலைமுறை லோகோ மற்றும் டிசைன் இருந்தது.

ஜூன் 1ம் தேதி வைகோ இந்தி திணிப்பு பற்றி ஏதும் பேசினாரா என்று கூகுளில் தேடினோம். அப்போது, அவர் இந்தி திணிப்பு தொடர்பாக அறிக்கை வெளியிட்டது தெரிந்தது. அந்த அறிக்கையைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

நாம் மேற்கொண்ட ஆய்வில், 2019 ஜூலை 1ம் தேதி புதிய தலைமுறை தொலைக்காட்சி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட வைகோ போட்டி தொடர்பான நியூஸ் கார்டு கிடைத்துள்ளது.

மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டது, பின்னணியில் வாட்டர் மார்க் லோகோ உள்ளிட்டவை இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைகோ வெளியிட்ட அறிக்கை தொடர்பான செய்தி நமக்கு கிடைத்துள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டில் வைகோ கூறியதை அகற்றிவிட்டு, விஷமத்தனத்துடன் அபாண்டமான அவதூறான கருத்தை வைத்து எடிட் செய்து புதிய தலைமுறை பெயரிலேயே அதைப் பகிர்ந்திருப்பது உறுதி செய்யப்படுகிறது. இதன் மூலம் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு பொய்யானது, விஷமத்தனமானது என்பது உறுதி செய்யப்படுகிறது.

வைகோ கூறாததை, அவர் கூறியதாக வெளியிட்டு, அவர் குடும்பத்தினர் சாக வேண்டும் என்று கருத்து பகிர்வது என்ன மாதிரியான சிந்தனையோ… வைகோ அறிக்கையில் இந்தியை படிக்கவே கூடாது என்று சொல்லவில்லை. கட்டாயமாக்குவதை மட்டுமே எதிர்த்துள்ளார். அவருடைய கருத்துக்கு எதிர்வினையாற்றுவதை விடுத்து, தனிப்பட்ட தாக்குதல் நடத்துவது வெறுப்பை விதைப்பதாக உள்ளது. இப்படி வதந்திகளை பரப்புவதை விட்டுவிட்டு, உண்மையை பேச துணிவுடன் இவர்கள் முன்வர வேண்டும் என்பதே நம்முடைய எதிர்பார்ப்பு!

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:1000 பேர் உயிரைக் கொடுத்தாவது இந்தியை எதிர்ப்போம்– வைகோ கூறியதாக பரவும் தகவல்!

Fact Check By: Praveen Kumar

Result: False