
‘’பார்ப்பனர்களும், தேவேந்திர குலத்தவரும் திருமண உறவு வைத்துக் கொள்ள வேண்டும்,’’ என்று அரசியல் விமர்சகர் குருமூர்த்தி பேசியதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

ஜனவரி 5, 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், குருமூர்த்தியின் புகைப்படம் பகிர்ந்து, ‘’பிராமணர் – பள்ளர் திருமண உறவு வேண்டும்: குருமூர்த்தி வேண்டுகோள்,’’ என்று எழுதியுள்ளனர்.
இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
பாஜக/ஆர்எஸ்எஸ் ஆதரவாளராகச் செயல்பட்டு வருபவர் குருமூர்த்தி. இவர், துக்ளக் பத்திரிகையின் ஆசிரியராகவும் உள்ளார். ஆடிட்டர் குருமூர்த்தி என பரவலாக அழைக்கப்படும் இவர், தமிழ்நாடு அரசியல் கட்சிகளுக்கு ஆலோசனை வழங்குவதும் உண்டு.
இதேபோல, தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர், தங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டாம் என்றும், பட்டியல் இனத்தவர் என்பதில் இருந்து தங்களை வெளியேற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இத்தகைய பின்னணியில்தான், குறிப்பிட்ட தகவல் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்யும் நோக்கில், குருமூர்த்தி அவரது ட்விட்டர் பக்கத்தில் எதுவும் பதிவு வெளியிட்டுள்ளாரா என தேடினோம். அப்படி எதுவும் தகவல் இல்லை.
ஊடக வட்டாரத்திலும், நமது நண்பர்களிடம் விசாரித்தோம். ‘’இப்படி எங்கும் அவர் பேசவில்லை,’’ என்றனர்.
இறுதியாக, பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டேவிடம் இதுபற்றி கேட்டோம். அவர், குருமூர்த்தி தரப்பினரை தொடர்பு கொண்டு விசாரித்துவிட்டுச் சொல்வதாகக் கூறினார். பிறகு, அவர்களிடம் விளக்கம் பெற்று, நம்மை தொடர்பு கொண்ட அவர், ‘’இது போலியான செய்தி,’’ என்று உறுதிப்படுத்தினார்.
இதன்மூலமாக, நாம் ஆய்வு செய்த தகவல் தவறானது என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:பிராமணர் – பள்ளர் திருமண உறவு தேவை என்று குருமூர்த்தி கூறினாரா?
Fact Check By: Pankaj IyerResult: False
