
மதுரையில் சித்திரைத் திருவிழாவை ஒத்திவைக்கலாம் என்று கூறிய வெங்கடேசன் தற்போது ரம்ஜான் பண்டிகையன்று சிபிஎஸ்இ தேர்வுகள் நடப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டு ஒன்றுடன் சேர்த்து புகைப்பட பதிவு போன்று பகிரப்பட்டுள்ளது. நியூஸ் கார்டில் ரம்ஜான் திருநாளில் சிபிஎஸ்இ தேர்வுகள் நடப்பதால் தேர்வு தேதிகளை மாற்ற வேண்டும்” என்று இருந்தது. நியூஸ் கார்டுக்கு மேலே, “தன்னை அழிக்க நினைப்பவனுக்கு அதற்கான அதிகாரத்தை கொடுக்கும் ஒரே இனம் ஹிந்துக்கள் மட்டுமே!” என்றும் நியூஸ் கார்டுக்கு கீழே, “மதுரையில் தேர்தலைத் தள்ளிவைக்கத் தேவையில்லை சித்திரைத் திருவிழாவைத் தள்ளி வைக்கலாம். அல்லது திருவிழாவுக்கு இந்த வருடம் தடைவிதிக்கலாம். ஒரு வருடம் ஆற்றில் அழகர் இறங்கவில்லை என்றால் மதுரை ஒன்றும் அழிந்துவிடாது – சு.வெங்கடேஷ்” என்று இருந்தது.
இந்த பதிவை Baktha Vijayakumar என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் பிப்ரவரி 14, 2023 அன்று பதிவிட்டுள்ளார். இதைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
மதுரையில் பிரசித்தி பெற்ற சித்திரைத் திருவிழாவை தள்ளிவைக்க வேண்டும் என்று சு.வெங்கடேசன் கூறியதாக பரவும் தகவல் வதந்தி என்பதை ஏற்கனவே உறுதி செய்திருந்தோம். இந்த ஆண்டு ரம்ஜான் பண்டிகையின் போது பள்ளிகளுக்கு தேர்வு நடப்பதாக எந்த சர்ச்சையும் எழவில்லை. எப்படி இருக்கும் போது இந்த நியூஸ் கார்டு உண்மையானதுதானா என்ற சந்தேகம் எழுந்தது. எனவே, இது பற்றி ஆய்வு செய்தோம்.
புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ஃபேஸ்புக் பக்கத்தில் தேடினோம். அப்போது 2022ம் ஆண்டு சு.வெங்கடேசன் இப்படிக் கூறியிருப்பது தெரிந்தது. ஓராண்டுக்கு முந்தைய நியூஸ் கார்டுடன் விஷமத் தகவலை சேர்த்து இப்போது பகிர்ந்திருப்பது தெரிந்தது.
மதுரை சித்திரைத் திருவிழாவைத் தள்ளி வைக்க வேண்டும் அல்லது என்று ரத்து செய்ய வேண்டும் என்று வெங்கடேசன் கூறியதாக விஷமத் தகவல் 2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டது. அந்த ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மதுரை நாடாளுமன்றத் தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக சு.வெங்கடேசன் போட்டியிட்டார்.

வாக்குப் பதிவு நடைபெறும் தினத்தன்று சித்திரைத் திருவிழா நடைபெறுவதாக இருந்தது. அதை வைத்து இந்த தகவலை சமூக ஊடகங்களில் பா.ஜ.க ஆதரவாளர்கள் பரப்பினார்கள். இது பற்றி அப்போதே சு.வெங்கடேசனிடம் பேசினோம். “இப்படி எங்கேயும் தான் கூறவில்லை” என்று வெங்கடேசன் நம்மிடம் தெரிவித்தார். மேலும், வதந்தி பரப்பிய நபர் மீது போலீசில் புகார் அளித்ததாகவும் நம்மிடம் கூறியிருந்தார். புகாரின் நகலையும் நம்மிடம் கொடுத்திருந்தார். 2019ம் ஆண்டு இது தொடர்பான நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அந்த கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

உண்மைப் பதிவைக் காண: dinamani.com
மதுரை தேர்தலைத் தள்ளிவைக்கத் தேவையில்லை என்று சு.வெங்கடேசன் கூறவில்லை என்பதை 2019ம் ஆண்டே உறுதி செய்துவிட்ட நிலையில் மீண்டும் அந்த வதந்தி பரவுவது அதிர்ச்சியை அளிக்கிறது. இந்து பண்டிகைகளுக்கு மட்டும் அவர் எதிர்ப்பு தெரிவிப்பது போன்ற தோற்றத்தைப் பதிவர்கள் உருவாக்க முயன்றிருப்பது தெரிகிறது. இது உண்மையில்லை, பொங்கல் திருநாளன்று வங்கித் தேர்வு நடைபெற்றது. பொங்கல் தினத்தன்று அந்த தேர்வை நடத்தக் கூடாது என்று எஸ்.பி.ஐ வங்கியில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியவர் வெங்கடேசன்.
முடிவு:
மதுரை சித்திரைத் திருவிழாவை ஒத்திவைக்க வேண்டும் என்று மதுரை எம்.பி வெங்கடேசன் கூறியதாக பரவிய பழைய வதந்தியை புதிது போல சிலர் பகிர்ந்து வருவதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:Rapid Fact Check: சித்திரைத் திருவிழாவை தள்ளிவைக்கலாம் என்று சு.வெங்கடேசன் எம்.பி கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: False
