
மதம் மாற்றம் காரணமாக மாணவி தற்கொலை செய்துகொண்டதாக பா.ஜ.க-வினர் கூறி வரும் விவகாரத்தில் மாணவி தற்கொலை செய்துகொண்டது அவரது உரிமை, இதற்காக பள்ளி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று பேராயர் எஸ்றா சற்குணம் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
கிறிஸ்தவ பேராயர் எஸ்றா சற்குணம் புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பள்ளி மீது விசாரணை தேவையற்றது. மாணவி லாவண்யா தற்கொலை செய்துகொண்டது அவரின் தனிப்பட்ட விருப்பம். கிறிஸ்தவத்தைப் பின்பற்ற அழைப்பது எங்கள் உரிமை. பிடிக்காவிட்டால் வேறு பள்ளியில் சேர்ந்திருக்க வேண்டும். தூய இருதய மேல்நிலைப் பள்ளி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது – பேராயர் எஸ்றா சற்குணம்” என்று இருந்தது.
இந்த பதிவை Ramya Iyer என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஜனவரி 23ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டியில் செயல்பட்டு வரும் தூய இருதய மேல் நிலைப் பள்ளியில் படித்து வந்த மாணவி ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தன்னை மதம் மாறும்படி தன்னுடைய விடுதி காப்பாளர் கேட்டுக்கொண்டார். மறுக்கவே தொடர்ந்து தொல்லைகள் கொடுத்து வந்தார். அதனால், தற்கொலை செய்துகொள்வதாக அந்த சிறுமி வாக்குமூலம் அளித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சிறுமி தற்கொலை செய்துகொண்டது அவரது உரிமை என்று கிறிஸ்தவ பாதிரியார் எஸ்றா சற்குணம் கூறியதாக நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. கிறிஸ்தவத்தில் தற்கொலை தவறானது என்று போதிக்கப்படுகிறது. அப்படி இருக்கும் போது அது அவரது உரிமை என்று கிறிஸ்தவ பாதிரியார் கூறியிருப்பாரா என்ற கேள்வி எழுந்தது. மேலும், நியூஸ் கார்டின் டிசைன், தமிழ் ஃபாண்ட் என அனைத்தும் உண்மையானது போல இல்லை. எனவே, இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
இந்த நியூஸ் கார்டு ஜனவரி 22ம் தேதி வெளியானதாகக் குறிப்பிடப்பட்டு இருந்தது. எனவே, 22ம் தேதி புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டுகளை பார்வையிட்டோம். அதில் எஸ்றா சற்குணம் தொடர்பாக எந்த ஒரு நியூஸ் கார்டும் வெளியாகவில்லை. எனவே, இது போலியாக இருக்கலாம் என்று தெரிந்தது.
இதை உறுதி செய்ய புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவு நிர்வாகி ராசுஸை தொடர்புகொண்டு விசாரித்தோம். அவரும் “இது போலியான நியூஸ் கார்டுதான். இதை புதிய தலைமுறை வெளியிடவில்லை” என்று உறுதி செய்தார்.

மாணவி தற்கொலை தொடர்பாக கிறிஸ்தவ பாதிரியார் எஸ்றா சற்குணம் பேட்டி ஏதும் அளித்துள்ளாரா, அல்லது கருத்து தெரிவித்துள்ளாரா, அது தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். ஆனால், பா.ஜ.க ஆதரவு ஊடகங்கள் உள்ளிட்ட எதிலும் நமக்கு அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. உண்மையில் எஸ்றா சற்குணம் இவ்வாறு கூறியிருந்தால் பா.ஜ.க ஆதரவு ஊடகங்களில் மிகப்பெரிய செய்தியாக வெளியிட்டிருக்கும். ஆனால், ஒரு சிறு துண்டு செய்தி கூட வெளியாகவில்லை. இதன் மூலம் இந்த நியூஸ் கார்டு விஷமத்தனமாக போலியாக உருவாக்கப்பட்டது என்பது உறுதியாகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்களுடன் மேற்கண்ட செய்தி தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்டது அவரது விருப்பம் என்று எஸ்றா சற்குணம் கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: False

இதேபோல நரேந்திர மோடி 15 லட்சம் வங்கிக் கணக்கில் போடுகிறேன் என்று கூறவே அவரும் போடுகிறேன் என்று கூறியதாக தவறான தகவல் வந்தபோது இதேபோல் faluse என்று கருத்து தெரிவித்திருக்கிறார்