புதரில் லேசான அசைவு காரணமாக ராஜீவ் காந்தி பாதுகாப்புப் படையினர் சுட்டதில் பிச்சைக்காரர் உயிரிழந்தாரா?

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

காந்தி நினைவிடத்தில் ராஜீவ் காந்தி அஞ்சலி செலுத்த வந்த போது புதரில் லேசான அசைவு ஏற்படவே, பாதுகாப்புப் படையினர் சுட்டதில் பிச்சைக்காரர் உயிரிழந்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

காந்தி நினைவிடத்தில் ராஜீவ் காந்தி அஞ்சலி செலுத்தும் மிக பழைய வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது ராஜ்காட் செல்கிறார்!

அங்கே புதர்களில் ஒரு வித அசைவுகள்! உடனே சப்தம் வந்த இடத்தை நோக்கி பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு! கொல்லப்பட்டது யாரெனில் வழக்கமாக அந்த காந்தி சமாதியில் உறங்கும் பிச்சைக் காரன்! இந்த நிலையை பஞ்சாப்பில் கொண்டு வர விரும்பாமல் பிரதமர் மோடிஜி தலைநகர் திரும்பினார்! India stand with Modi” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை Manigundan Bjp என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 ஜனவரி 12ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது, சாதாரணமாகப் புதரில் ஏற்பட்ட அசைவுக்கே ஒருவர் உயிரிழந்தார் என்பது போன்று குறிப்பிடப்பட்டுள்ளது. காந்தி நினைவிடம் என்பது ஏதோ ஊரில் உள்ள வழக்கமான சுடுகாடு / இடுகாடு போன்று நினைத்துப் பதிவிட்டது போல உள்ளது. அவ்வளவு முக்கியத்துவம் உள்ள இடத்தில் இரவில் பிச்சைக்காரர்கள் வந்து தூங்கும் அளவுக்கு பாதுகாப்பு குறைபாடு இருக்குமா என்று தெரியவில்லை. அதுவும் பிரதமர் வருகிறார் என்றால் பிச்சைக்காரர் ஒருவர் தூங்குவதைக் கூட டெல்லி போலீசார் கவனிக்காமல் இருந்திருப்பார்களா என்ற கேள்வியும் எழுகிறது. எனவே, இந்த பதிவு குறித்து ஆய்வு செய்தோம்.

அசல் பதிவைக் காண: Facebook 

வீடியோவில் AP என்று செய்தி நிறுவனத்தின் லோகோ இருந்தது. எனவே, ஏபி நிறுவனத்தின் வீடியோவை தேடி எடுத்தோம். அதில், பிரதமர் ராஜீவ் காந்தியை கொல்ல நடந்த முயற்சி என்று குறிப்பிட்டிருந்தனர். மேலும் இந்த சம்பவம் 1986 அக்டோபர் 2ம் தேதி நடந்தது என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

வீடியோ பற்றிய குறிப்பு பகுதியில், “காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்த ராஜீவ் காந்தி மீது சீக்கியர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் ராஜீவ் காந்தி காயமின்றி தப்பினார். துப்பாக்கிச் சூடு நடத்திய சீக்கியர் கைது செய்யப்பட்டார்” என்று இருந்தது. இதன் மூலம் புதர் அசைந்தது, பிச்சைக்காரர் மீது துப்பாகிச்சூடு நடத்தப்பட்டது, அதில் பிச்சைக்காரர் உயிரிழந்தார் என்று கூறப்பட்ட தகவல் வெறும் கற்பனையானது… துளியும் உண்மையில்லை என்பது உறுதியானது. 

1986ம் ஆண்டு காந்தி நினைவிடத்தில் என்ன நடந்தது… அப்போது வெளியான செய்தி ஏதும் கிடைக்கிறதா என்று பார்த்தோம். வாஷிங்டன் போஸ்ட், இந்தியா டுடே உள்ளிட்ட பல ஊடகங்களில் அப்போது வெளியான செய்தியை இணையத்தில் பதிவிட்டிருந்தனர். அவற்றைப் படித்துப் பார்த்த போது, இந்த சம்பவத்தில் உயிரிழப்பு நிகழ்ந்ததாக எந்த ஒரு தகவலும் இல்லை. ஆறு பேர் காயம் அடைந்தனர் என்று குறிப்பிட்டிருந்தனர். இதன் மூலம் இந்த சம்பவத்தில் உயிரிழப்பு நிகழவில்லை என்பது உறுதியாகிறது. 

அசல் பதிவைக் காண: washingtonpost.com I Archive 1 I indiatoday.in I Archive 2

கொலை முயற்சியில் ஈடுபட்ட சீக்கியர் பெயரை வைத்து தேடிய போது, ராஜீவ் காந்தியை கொலை செய்ய முயன்றது ஏன் என்று அவர் அளித்த பேட்டிகள் நமக்கு கிடைத்தன. ஆனால் அவை ஆங்கிலத்தில் இல்லை. இதனால் அவர் என்ன பேசுகிறார் என்பதை நம்மால் அறிந்துகொள்ள முடியவில்லை. அதே நேரத்தில் கொலை முயற்சி நடந்தது என்பதை அவரது பேட்டி உறுதிபடுத்துகிறது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், ராஜீவ் காந்தி ராஜ்காட் வந்த போது, புதர் அசைந்ததால் பாதுகாப்புப் படையினர் சுட்டதில் பிச்சைக்காரர் உயிரிழந்தார் என்று பகிரப்படும் வீடியோ தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது. ராஜீவ் காந்தியை கொலை செய்ய நடந்த முயற்சி வீடியோவை எடுத்து, தவறான தகவல் சேர்த்து பகிர்ந்திருப்பது உறுதி செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த இடத்தில் புதர் லோசாக அசைந்ததால் ராஜீவ் காந்தியின் பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டதில் பிச்சைக்காரர் உயிரிழந்தார் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:புதரில் லேசான அசைவு காரணமாக ராஜீவ் காந்தி பாதுகாப்புப் படையினர் சுட்டதில் பிச்சைக்காரர் உயிரிழந்தாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False