‘இந்தியாவின் லீ குவான் யூ’ மோடி என சிங்கப்பூர் பத்திரிகை செய்தி வெளியிட்டதா?

அரசியல் | Politics இந்தியா | India சர்வதேசம் | International

சிங்கப்பூரை வளர்ச்சியின் உச்சிக்கு கொண்டு சென்ற முன்னாள் அதிபர் லீ குவான் யூ போல இந்தியாவில் பிரதமர் மோடி பிறப்பெடுத்துள்ளார் என சிங்கப்பூர் பத்திரிகை செய்தி வெளியிட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

வாசகர் ஒருவர் நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ்அப் சாட் பாட் எண்ணுக்குப் புகைப்பட பதிவு அனுப்பி, இது உண்மையா என்று கேள்வி எழுப்பியிருந்தார். பிரதமர் மோடி மற்றும் சிங்கப்பூரின் மறைந்த முன்னாள் பிரதமர் லீ குவான் யூ ஆகியோரின் புகைப்படங்களுடன் “A New Lee Kuan Yew is Born in India: Govt Source” என்று தலைப்பிட்டு வெளியான செய்தித்தாள் படத்தை யாரோ பகிர்ந்திருந்ததை ஸ்கிரீன்ஷாட் எடுத்து அனுப்பியிருந்தார். 

அதில், “எங்களைபோல் வெளிநாட்டில் கஷ்டபட்டு உழைக்கிறவனுக்குதான் தெரியும் பணத்தின் அருமையும் மதிப்பும்… நன்றி மோடிஜி… போட்டான்பாரு சீங்கப்பூர் பத்திரிகைல… சிங்கப்பூரை வளார்ச்சியின் உச்சத்திற்க்கே கொண்டு சென்று உலக நாடுகளை திகைக்க வைத்த மறைந்த சிங்கப்பூர் அதிபார் லீ_குவான்…. இந்தியாவில் பிரதமார் மோடியாக மீண்டும் பிறந்துள்ளாார்.-சிங்கப்பூர் பத்திரிகை.. நல்லதெல்லாம் கண்ணுக்கும் படாதே !” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஃபேஸ்புக்கில் இந்த பதிவை யாராவது பகிர்ந்துள்ளார்களா என்று பார்த்தோம். அப்போது, 2016ம் ஆண்டில் இருந்து இந்த பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருப்பதை காண முடிந்தது. Chella Kovai என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 அக்டோபர் 30ம் தேதி இதை தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பத்திரிகையில் பிரதமர் மோடியை புகழ்ந்து சிங்கப்பூர் பத்திரிகை செய்தி வெளியிட்டது என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால், அந்த சிங்கப்பூர் பத்திரிகையின் பெயரைக் குறிப்பிடாதது சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே, இந்த செய்தி தொடர்பாகத் தேடினோம். இந்த செய்தியின் தலைப்பைக் கூகுளில் வகை செய்து தேடினோம். சிங்கப்பூர் நாளிதழ்கள், இதழ்களில் இப்படி செய்தி வெளியானதாக எந்த தகவலும் கிடைக்கவில்லை.

Archive

அதே நேரத்தில், இந்த செய்தியை 2016ம் ஆண்டு நவம்பர் 10ம் தேதி The Economic Times இதழ் வெளியிட்டதாக சில செய்திகள் நமக்குக் கிடைத்தன. ஆனால், இந்த தலைப்புடைய செய்தி The Economic Times-ன் இணையதளத்திலிருந்து நமக்குக் கிடைக்கவில்லை. சந்தேகத்தின் அடிப்படையில் செய்தியின் முதல் வரியை மட்டும் கூகுளில் டைப் செய்து தேடினோம். அப்போது, “Bombshell to recall Rs 500 & Rs 1,000 notes spelt out by PM Modi in March: Govt source” என்ற தலைப்பில் இந்த செய்தியை எக்கனாமிக் டைம்ஸ் இதழ் 2016 நவம்பர் 10ம் தேதி வெளியிட்டிருப்பது தெரிந்தது. ட்விட்டரில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ள தலைப்போடு 2016 நவம்பர் 10ம் தேதி வெளியான பதிவு ஒன்றும் நமக்கு கிடைத்தது. அந்த ட்விட்டர் பதிவில் கொடுக்கப்பட்டிருந்த லிங்க்கை திறந்தால், அது எக்கனாமிக் டைம்ஸ் இதழின் தலைப்பு மாற்றப்பட்டிருந்த கட்டுரைக்கு சென்றது.

உண்மைப் பதிவைக் காண: tatkalnews.com I Archive I Archive

ஒருவேளை அந்த செய்தி கட்டுரையில் சிங்கப்பூர் பத்திரிகை எதையாவது மேற்கோள் காட்டியுள்ளார்களா என்று பார்த்தோம். செய்தியைப் படித்த போது பண மதிப்பிழப்பு நடவடிக்கை பற்றிய தகவல் ரிசர்வ் வங்கி ஆளுநர் உள்ளிட்ட யாருக்கு எல்லாம் முன்பே தெரியும் என்பது போன்று கட்டுரை வெளியிட்டிருந்தனர்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை பிரதமர் மோடிக்கு புதிய மரியாதையை ஏற்படுத்தியுள்ளது. அவரை சிங்கப்பூரின் பெருமைக்குரிய லீ குவான் யூ-வுடன் ஒப்பிட்டு அரசின் பல உயர் அதிகாரிகளும் பேசி வருகின்றனர். பண மதிப்பிழப்பு அறிவிப்பு வெளியிடும் வரை தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்ததின் மூலம் இந்தியாவில் ஒரு புதிய லீ குவான் யூ பிறந்தார்” என்று உயர் அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர் என குறிப்பிடப்பட்டிருந்தது. 

உண்மைப் பதிவைக் காண: economictimes I Archive

எக்கனாமி டைம்ஸ் இதழ் முதலில் ஒரு தலைப்பு வைத்து பத்திரிகையை வெளியிட்டிருப்பதைப் புகைப்படங்கள் மற்றும் 2016 நவம்பர் 10ம் தேதி வெளியான சில செய்திகள் உறுதி செய்கின்றன. அதன் பிறகு அவர்கள் தலைப்பை மாற்றியுள்ளனர். ஆனால், கட்டுரையை அவர்கள் மாற்றவில்லை. அவர்களது இதழில் அந்த கட்டுரை இன்றளவும் இருக்கிறது. 

நம்முடைய ஆய்வில், இந்த கட்டுரையை இந்திய ஊடகம் வெளியிட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பண மதிப்பிழப்பு அறிவிப்பு வெளியானதற்கு அடுத்த நாளில் அதாவது 2016ம் ஆண்டு நம்பவர் 9ம் தேதி ரிசர்வ் வங்கி உயர் அதிகாரிகளிடம் பேசியதை வைத்து கட்டுரை எழுதியாக கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடியை சிங்கப்பூரின் லீ குவான் யூ-வுடன் ஒப்பிட்டு யாரோ ஒருவர் கூறியதை வைத்து கட்டுரையாளர் தலைப்பு வைத்துள்ளார். அதை சிங்கப்பூர் பத்திரிகை கருத்து என்று தவறாகப் பகிர்ந்திருப்பது நம்முடைய ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

பிரதமர் மோடியை புகழ்ந்து சிங்கப்பூர் பத்திரிகை கட்டுரை வெளியிட்டது என்று பரவும் படம் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:‘இந்தியாவின் லீ குவான் யூ’ மோடி என சிங்கப்பூர் பத்திரிகை செய்தி வெளியிட்டதா?

Fact Check By: Chendur Pandian 

Result: False