
‘’உடல்நலம் மேம்படுவதற்காக, தனது வீட்டில் பிராமணர்களை வைத்து சிறப்பு யாகம் நடத்திய மு.க.ஸ்டாலின்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

இதில், மு.க.ஸ்டாலினை பிராமணர்கள் சந்தித்து, மரியாதை செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதன் மேலே, ‘’தமிழக முதல்வரின் உடல்நலன் மேம்பட அவரது இல்லத்தில் சிறப்பு ஹோமம் நடைபெற்றது,’’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

இதுபற்றி உண்மைத்தன்மை கண்டறிந்து வெளியிடும்படி நமது வாசகர்கள் தொடர்ச்சியாக, நம்மிடம் கேட்டுக் கொண்டதால், நாமும் ஆய்வு மேற்கொண்டோம்.
உண்மை அறிவோம்:
கடந்த மே 7, 2021 அன்று தமிழ்நாடு முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார். இதையொட்டி, அவர் தொடர்பாக சமூக வலைதளங்களில் புதுப்புது தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் ஒன்றுதான் மேலே நாம் கண்ட தகவலும்.
ஆம். உண்மையில், மு.க.ஸ்டாலின் வீட்டில் சிறப்பு யாகம் எதுவும் நடைபெறவில்லை. குறிப்பிட்ட பிராமணர்கள், திருப்பதி தேவஸ்தானத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்றதை தொடர்ந்து, அவரை வாழ்த்தி, தேவஸ்தானம் தரப்பில் மரியாதை செலுத்தவே அவர்கள் அவரது வீட்டிற்குச் சென்றிருந்தனர்.
இதுபற்றி ஊடகங்களிலும் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு, ஆந்திரா மாநிலங்களில் யார் முதல்வராக பதவியேற்றாலும், திருப்பதி தேவஸ்தானம் சார்பாக, நேரில் சென்று வாழ்த்து கூறி மரியாதை செலுத்துவது வழக்கமான நிகழ்வாகும்.

எனவே, மு.க.ஸ்டாலின் வீட்டில் யாகம் எதுவும் நடைபெறவில்லை, இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:மு.க.ஸ்டாலின் உடல்நலம் மேம்பட வீட்டில் சிறப்பு யாகம் நடத்தினாரா? உண்மை இதோ!
Fact Check By: Pankaj IyerResult: False
