வசதியான ஒருவருக்கு கலைஞர் பெண்கள் உரிமைத் தொகை வாங்கியதாக சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2

தன்னுடைய வீட்டு வாசலில் கலைஞர் பெண்கள் உரிமைத் தொகை ரூ.1000ம் வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கும் கோலமிட்டவர் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "இவர்கள் தகுதி வாய்ந்த பெண்களை தேர்வு செய்த லட்சணம் இந்த படத்தில் தெரிகிறது. இந்த வீட்டு மதிப்பை கூட விடுங்கள். அந்த வாசல் கேட் எத்தனை ஆயிரம் பெறும் என பாருங்கள். விடியாத விடியல்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை Sharmila Nagarajan என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 செப்டம்பர் 15ம் தேதி பதிவிட்டிருந்தார். இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூபாய் 1000 வழங்கும் திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை விமர்சித்துத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பல கோடி மதிப்புடைய வீட்டில் வசிப்பவருக்குக் கூட பெண்கள் உரிமைத் தொகை வழங்கப்பட்டிருப்பதாக சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். முதலில் இந்த உதவித் தொகை ஆண்களுக்கு வழங்கப்படுவது இல்லை. அது கூட அறியாமல் ஆண் ஒருவரின் படத்தை வைத்துப் பதிவிடப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு போராட்டத்துக்குப் பிறகு நல்லதோ, கெட்டதோ அரசியல் தொடர்பான விமர்சனங்களுக்கு கோலங்களையும் பயன்படுத்துவது தொடர்கிறது. திமுக-வினர் பலரும் முதல்வருக்கு நன்றி என்று கோலமிட்டு அதை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருவதை காண முடிகிறது. அந்த வகையில் யாரோ ஒருவர் வெளியிட்ட பதிவை விஷமத்தனமாக வெளியிட்டிருப்பது தெரிகிறது. படத்தில் உள்ளவர் யார் என்று பார்த்தோம்.

Archive

படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடிய போது படத்தில் இருப்பவர் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா என்று தெரிந்தது. தன்னுடைய எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் இந்த படத்தை அவர் பகிர்ந்திருப்பதும் தெரிந்தது.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் குடும்ப உறுப்பினர்களில் யாரேனும், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களைத் தவிரத் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளாக இருந்தால் அவர்களுக்கு உதவித் தொகை கிடைக்காது என்று அரசு அறிவிப்பு கூறுகிறது. அதாவது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி), சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்எல்ஏ), மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், ஊராட்சிமன்றத் தலைவர்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் இந்த உதவித் தொகையைப் பெற முடியாது.

சங்கரன்கோவில் எம்.எல்.ஏ குடும்பத்தினர் தவறான தகவல் அளித்து உதவித் தொகை பெற்றதாக எந்த தகவலும் இல்லை. தங்கள் அரசு கொண்டு வந்த திட்டம் பற்றி கோலமிட்டிருப்பது அவரது எக்ஸ் தள பதிவு மூலம் அறிய முடிகிறது. உண்மை இப்படி இருக்க படத்தில் இருப்பவர் யார் என்றே அறியாமல், அரசு தேர்வு செய்த பயனர் என்று விஷமத்தனத்துடன் பதிவிட்டிருப்பது இதன் மூலம் தெளிவாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

மகளிர் உதவித் தொகை திட்டம் தொடங்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்து திமுக எம்.எல்.ஏ தன்னுடைய வீட்டின் முன்பு கோலமிட்டிருந்த படத்தை எடுத்து, வசதியான நபருக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:மகளிர் உரிமைத் தொகை வாங்கிய வசதியான நபர் என்று பரவும் வதந்தி!

Written By: Chendur Pandian

Result: False