
மு.க.ஸ்டாலினுக்கு 70 வயது, ஆனால் அவரது பள்ளி ஆசிரியருக்கு 68 வயது. இது கூட தெரியாமல் மு.க.ஸ்டாலின் நாடகம் நடத்துகிறார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

நம் ஃபேக்ட் கிரஸண்டோ வாசகர் ஒருவர் வாட்ஸ் அப்பில் ஒரு நியூஸ் கார்டுடன் கூடிய பதிவை அனுப்பி அது பற்றி கேகள்வி எழுப்பியிருந்தார். கடந்த டிசம்பரில் சன் நியூஸ் தொலைக்காட்சி வெளியிட்டிருந்த நியூஸ் கார்டு அது. அதில், “முதலமைச்சர் எனக்கு மிகவும் விருப்பமான மாணவர். மு.க.ஸ்டாலின் பள்ளியில் படிக்கும்போது, அவர் தந்தை அமைச்சராக இருந்தார். அப்போது கூட அவர் பள்ளியில் ‘பந்தா’ செய்தது கிடையாது. எனக்கு மிகவும் விருப்பமான மாணவர்; அவர் இன்னும் உயர்வார் என அப்போது வைத்த நம்பிக்கை இப்போது நிறைவேறியுள்ளது; அவரின் சாதனை மேலும் பெருக வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பள்ளி தமிழ் ஆசிரியர் ஜெயராமன் நெகிழ்ச்சி” என்று இருந்தது.
இதற்கு கீழ், “இதுல பாருங்க … விசேசம் என்னான….சுடாலினுக்கு 70 வயது …அவரது ஆசிரியருக்கு 68 வயது ….பொதுவா பள்ளிகளில் மாணவனைகாட்டிலும் ஆசிரியருக்கு குறைந்தது 20-30 வயது கூடுதலா இருக்கும் ….ஆனா நம்மாலு செட்டிங் செல்லப்பா……எவனோ ஒருவனை தூக்கியாந்து எழுதிகொடுத்ததை படிக்கவச்சிட்டானுங்க” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
ஃபேஸ்புக்கில் இதை யாராவது பகிர்ந்துள்ளார்களா என்று பார்த்தோம். கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் இதை பலரும் பகிர்ந்திருந்தனர். சோழை லோகேஷ் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 ஏப்ரல் 7ம் தேதி இதை பதிவிட்டிருந்தார். இவரைப் போல பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கடந்த 2022ம் ஆண்டு டிசம்பரில் சேத்துப்பட்டில் உள்ள சென்னை கிறிஸ்துவ கல்லூரி மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது. அதில், அப்பள்ளியில் படித்து தற்போது தமிழ்நாடு முதலமைச்சராக இருக்கும் மு.க.ஸ்டாலினும் பங்கேற்றார். அப்போது அவரது ஆசிரியரும் பங்கேற்றிருந்தார்.
அவரது ஆசிரியர் என்று போலியாக ஒரு நபரை அழைத்து வந்து பேச வைத்ததாகவும், அந்த நபருக்கு ஸ்டாலினை விட இரண்டு வயது குறைவு என்றும் சமூக ஊடகங்களில் சிலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர். ஆனால், இதற்கான எந்த ஒரு ஆதாரத்தையும் இவர்கள் அளிக்கவில்லை.
இந்த நிகழ்ச்சி நடந்தபோதே மு.க.ஸ்டாலினின் ஆசிரியர் தொடர்பாக விகடனில் கட்டுரை வெளியாகி இருந்தது. ஸ்டாலினின் ஆசிரியர் ஜெயராமனின் பேட்டியை விகடனில் வெளியிட்டிருந்தனர். அந்த பேட்டியை எடுத்துப் பார்த்தோம். அதில், ” எனக்கு 83 வயதாகிவிட்டது. வயதின் முதுமையில் உடல்நிலை சரியில்லை. இப்போதுகூட, என் மாணவர் ஸ்டாலினுக்காகத்தான் அந்த விழாவில் கலந்துகொண்டு வந்தேன்” என்று அவர் கூறியதாகக் குறிப்பிட்டிருந்தனர். இதன் மூலம் ஸ்டாலினை விட வயது குறைந்தவர் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதியாகிறது.

உண்மைப் பதிவைக் காண: vikatan.com I Archive
ஸ்டாலின் எந்த ஆண்டு அந்த பள்ளியில் படித்தார் என்று தேடிப் பார்த்தோம். எந்த ஆண்டிலிருந்து எந்த ஆண்டு வரை அவர் படித்தார் என்ற தகவல் நமக்குக் கிடைக்கவில்லை. 1973ம் ஆண்டு தன்னுடைய பட்டப்படிப்பை முடித்திருந்தார் என்று தன்னுடைய தேர்தல் பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டிருந்தார். அதை வைத்துப் பார்க்கையில் 1970ல் அவர் தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்திருக்க வேண்டும். கிறிஸ்துவக் கல்லூரி பள்ளி விழாவில் மு.க.ஸ்டாலின் தன்னுடைய பேசும் போது, “அப்போது மேயராக இருந்த குசேலருடன் காரில் சென்றேன்” என்று குறிப்பிட்டிருந்தார். குசேலர் எப்போது மேயராக இருந்தார் என்று பார்த்தோம். 1961 முதல் 1963ம் ஆண்டு வரை அவர் மேயராக இருந்தார் என்று தகவல் கிடைத்தது.
ஆசிரியர் ஜெயராமன் தன்னுடைய வயது 83 என்று குறிப்பிட்டிருந்தார். அதன்படி பார்த்தால் 1939 – 40-ல் அவர் பிறந்திருக்க வேண்டும். சென்னை கிறிஸ்துவக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஆசிரியர் ஜெயராமன், மு.க.ஸ்டாலினின் தன் தந்தை அமைச்சராக இருந்த போதும் கூட பந்தா இல்லாமல் வருவார் என்று குறிப்பிட்டிருந்தார். அதன் அடிப்படையில் பார்த்தால் கருணாநிதி அமைச்சராகப் பொறுப்பேற்ற காலத்தில் மு.க.ஸ்டாலினின் தமிழ் ஆசிரியராக ஜெயராமன் இருந்திருக்க வேண்டும்.
1967ல் நடந்த சட்டமன்ற தேர்தலில்தான் தி.மு.க முதன்முறையாக ஆட்சியைப் பிடித்தது. அப்போது மு.கருணாநிதி அமைச்சராகப் பொறுப்பேற்றார். போக்குவரத்து, பொதுப்பணித் துறை, நெடுச்சாலைகள், துறைமுகங்கள் உள்ளிட்ட துறை அமைச்சராக அவர் இருந்தார். மு.க.ஸ்டாலின் 1953ல் பிறந்தார். அதன் அடிப்படையில் கருணாநிதி அமைச்சராகப் பொறுப்பேற்ற போது அவருக்கு வயது 14 இருந்திருக்கும். 1939ல் பிறந்த ஆசிரியருக்கு 28 வயது இருந்திருக்கும். பி.ஏ, எம்.ஏ படித்துவிட்டு ஆசிரியராக பணியாற்ற அது போதுமான வயதுதான்.
தந்தி டிவி-க்கு அளித்திருந்த பேட்டியில் தன்னிடம் மூன்று ஆண்டுகள் மாணவராக இருந்தார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இது எதுவும் தெரியாமல், விமர்சிக்க வேண்டும் என்பதையே நோக்கமாக வைத்து ஆசிரியர் ஒருவரை கொச்சைப்படுத்தும் வகையில் இவ்வாறு பதிவிட்டிருப்பதை அறிய முடிகிறது.
நம்முடைய ஆய்வில், ஸ்டாலினுக்கு தமிழ்ப் பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர் தனக்கு தற்போது வயது 83 என்று கூறியது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் ஸ்டாலினை விட ஆசிரியருக்கு வயது குறைவு என்ற தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
ஸ்டாலினை விட அவரது பள்ளி ஆசிரியருக்கு 2 வயது குறைவு, யாரோ ஒரு நபரை அழைத்து வந்து ஸ்டாலினின் பள்ளிக் கூட ஆசிரியர் என்று தவறாக பேச வைத்து மோசடி செய்துள்ளனர் என்று பரவும் தகவலில் துளி கூட உண்மை இல்லை என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:மு.க.ஸ்டாலினுக்கு 70 வயது; அவரது பள்ளிக்கூட ஆசிரியருக்கு 68 வயது என்று பரவும் தகவல் உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
