
வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர் ஒருவரின் அஸ்தியை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் திருநீறாகப் பூசிக்கொண்டார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
யோகி ஆதித்யநாத் சாம்பல் மேட்டில் குனிந்து, சாம்பலை எடுத்து திருநீறு போல நெற்றியில் வைத்துக்கொள்ளும் வீடியோ காட்சி பகிரப்பட்டுள்ளது. பின்னணியில் இந்திப் பாடல் ஒலிக்கிறது. நிலைத் தகவலில், “வீர மரணம் அடைந்த நமது இந்திய இராணுவ வீரரின் சாம்பலை நெற்றியில் திருநீராக அணியும் யோகி ஜி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை வேத நாயகம் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 மார்ச் 23ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதை தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இந்திய ராணுவ வீரர் ஒருவரின் அஸ்தியை எடுத்து நெற்றியில் பூசிக் கொண்டார் என்று அவரது தேசப் பற்றை பறைசாற்றும் வகையில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் உண்மைதானா, எங்கு, எப்போது நடந்தது என்று ஆய்வு செய்தோம்.
வீடியோவை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த வீடியோவை சிலர் ட்விட்டரில் பதிவிட்டிருப்பதைக் காண முடிந்தது. Dr. Prachi Sadhvi என்ற ட்விட்டர் ஐடி கொண்ட நபர் இந்த வீடியோவை பதிவிட்டிருந்தார். சாத்வி பிராச்சி என்ற அந்த நபர் தன்னை பாக்வா கிராந்தி சேனா என்ற அமைப்பின் தலைவர் என்றும், ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் என்றும், விஎச்பி-யில் தலைவர் என்றும் குறிப்பிட்டிருந்தார். அவர் வெளியிட்டிருந்த பதிவை மொழிமாற்றம் செய்து பார்த்தபோது, “எரிக்கப்பட்ட ஹோலிகாவின் சாம்பலை நெற்றியில் பூசிக்கொள்வது சனாதன தர்மத்தின் மரபு” என்று குறிப்பிட்டிருந்தார். இந்த ட்விட் 2022 மார்ச் 22ம் தேதி பதிவிடப்பட்டிருந்தது.
ஹோலி பண்டிகை நடந்த நேரத்தில், ஹோலிகாவின் சாம்பலை யோகி ஆதித்யநாத் பூசியிருக்கிறார். அதை இந்திய ராணுவ வீரரின் அஸ்தி என்று விஷமத்தனமாக பகிர்ந்திருக்கிறார்கள் என்று புரிந்தது. இதை மேலும் உறுதி செய்ய வேறு ஏதும் ஆதாரங்கள் கிடைக்கிறதா என்று பார்த்தோம்.
யோகி ஆதித்யநாத் ராணுவ வீரரின் அஸ்தியை நெற்றியில் பூசியிருந்தால் அது மிகப்பெரிய செய்தியாகியிருக்கும். இறந்த வீரர் யார், அவர் எப்படி வீர மரணமடைந்தார் என்றெல்லாம் விரிவாக எழுதியிருப்பார்கள். ஆனால் நமக்கு துண்டு செய்தி கூட கிடைக்கவில்லை. அதே நேரத்தில் ஹோலி பண்டிகையின் போது, கோரக்நாத் மட கோவிலுக்கு யோகி ஆதித்யநாத் சென்றதாகவும் அப்போது ஹோலி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக எரிக்கப்பட்ட ஹோலியின் சாம்பலை யோகி ஆதித்யநாத் பூசிக் கொண்டார் என்றும் செய்திகள் கிடைத்தன.

உண்மைப் பதிவைக் காண: etvbharat.com I Archive
மேலும் இந்தி செய்தி ஊடகம் ஒன்று அவர் நெற்றியில் சாம்பல் பூசிக்கொண்ட படத்துடன் செய்தி வெளியிட்டிருந்தது. அதிலும், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடு காரணமாக ஹோலி விழா நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு ஹோலி விழா நடத்தப்பட்டது. பாரம்பரியப் படி ஹோலிக்கா எரிக்கப்பட்டது. அந்த சாம்பலை யோகி ஆதித்யநாத் பூசிக்கொண்டார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த படத்தில் யோகி ஆதித்யநாத் அருகில் இருக்கும் அதே சாமியர்களை, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவிலும் காண முடிந்தது.
இது தொடர்பாக நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ இந்தி தரப்பில் இருந்து கோரக்பூர் மாவட்ட கூடுதல் மாஜிஸ்திரேட் வினீத் குமார் சிங்கை தொடர்புகொண்டு விளக்கம் கேட்கப்பட்டது. அப்போது அவர், “இந்த வீடியோ ஹோலியின் போது எடுக்கப்பட்டது. ஹோலிக்கு முந்தைய நாள் ஹோலிக்கா உருவம் எரிக்கப்படுவது வழக்கம். தீ அணைந்ததும், சாம்பலை எடுத்து நெற்றியில் பூசிக்கொள்வது இந்து மத பாரம்பரியம் ஆகும். அதுதான் அங்கு நடந்தது” என்று கூறினார். இது தொடர்பாக நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ இந்தி வெளியிட்ட கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
இதன் மூலம், இந்திய ராணுவ வீரரின் இறுதிச் சடக்கு முடிந்த இடத்தில், அஸ்தியை எடுத்து யோகி ஆதித்யநாத் பூசிக்கொண்டார் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
ஹோலி சாம்பல் பூசியதை ராணுவ வீரரின் அஸ்தியை யோகி பூசிக்கொண்டார் என்று தவறாக சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:ராணுவ வீரரின் அஸ்தியை திருநீறாகப் பூசினாரா யோகி ஆதித்யநாத்?
Fact Check By: Chendur PandianResult: False
