FACT CHECK: உத்தரப்பிரதேசத்தில் தலித் சிறுவனை அடித்துக் கொன்ற சங் பரிவார் என்று பரவும் வதந்தி!

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

உத்தரப்பிரதேசத்தில் சங் பரிவார் பயங்கரவாதிகள் தலித் சிறுவன் ஒருவனை அடித்துக் கொலை செய்தார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2

டைம்ஸ் நவ் வெளியிட்ட வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில், உத்தரப்பிரதேசம் மெயின்புரியில் தலித் மீது தாக்குதல் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. மிகப்பெரிய கம்புகளை வைத்து இளைஞர்கள் மோதிக்கொள்ளும் காட்சிகள் பகிரப்பட்டிருந்தன. ஆனால், கொல்லப்பட்டார் என்று குறிப்பிடவில்லை.

நிலைத் தகவலில், “சங் பரிவார் பயங்கரவாதிகள் உத்தரபிரதேசத்தில் ஒரு தலித் சிறுவனை அடித்து கொலை செய்தனர்… இன்று, பாஜகவுக்கு வாக்களித்த அனைத்தும் தலித் சமூகத்துக்காக …. RSS will go to any level to fulfill their ideology…” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த வீடியோ பதிவை  பாளையும்நமதே நாளையும்நமதே என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 ஏப்ரல் 6ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

டைம்ஸ் நவ் வெளியிட்ட வீடியோவில் தலித் தாக்கப்பட்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் இந்த செய்தி உண்மையானது போல இருந்தது. ஆனால், தாக்கியவர்கள் எந்த சாதியைச் சார்ந்தவர்கள் என்று குறிப்பிடவில்லை. மேலும் தாக்கப்பட்ட நபர் இறந்துவிட்டார் என்றும் குறிப்பிடவில்லை. எனவே, இதுபற்றி ஆய்வு செய்தோம்.

கூகுளில் உத்தரப்பிரதேசம் மெயின்பூரியில் தலித் இளைஞர் மீது தாக்குதல் என்று டைப் செய்து தேடியபோது 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் டைம்ஸ் நவ் வெளியிட்ட அசல் வீடியோ பதிவு நமக்கு கிடைத்தது. இரண்டு தலித் இளைஞர்கள் கடுமையாக தாக்கப்பட்டார்கள் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அவர்கள் கொலை செய்யப்பட்டார்கள் என்று அதில் கூறவில்லை. 

டைம்ஸ் நவ் வீடியோ அசல் பதிவை காண: timesnownews.com I Archive

இது தொடர்பாக வேறு வேறு கீ வார்த்கைளைப் பயன்படுத்தி தேடியபோது பிரியங்கா காந்தி, மெயின்பூரி மாவட்ட போலீஸ் என பலரும் வெளியிட்ட ட்வீட் பதிவுகள் நமக்கு கிடைத்தன. இந்தி தொலைக்காட்சி ஒன்று வெளியிட்ட இந்த வீடியோவுடன் கூடிய செய்தியை அகில இந்திய காங்கிரஸ் கட்சி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.

அதை காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ரீட்வீட் செய்து “பா.ஜ.க ஆட்சியில் தலித் மற்றும் ஆதிவாசிகள் தொடர்ந்து தாக்கப்படுகின்றனர்” என்று குற்றம்சாட்டி இருந்தார்.

Archive

இதற்கு மெயின்பூரி போலீஸ் தரப்பில் ஒரு விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது. இந்தியில் அந்த அறிக்கை இருந்ததால், நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ இந்தி பிரிவைத் தொடர்புகொண்டு அதை மொழிமாற்றம் செய்து தரும்படி கேட்டோம். அவர்கள் அதில், “காட்சி ஊடகங்கள் தலித் குடும்பங்கள் தாக்கப்பட்டது என்று தவறான தகவலை பரப்பி வருகின்றனர். உண்மையில் ராஜ்புத்ஸ் (தாக்கூர்) சமூக இளைஞர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். விவசாயம், அறுவடை தொடர்பான மோதல் காரணமாக அவர்கள் அடித்துக்கொண்டனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய யாரும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. மருத்துவ ஆய்வுக்குப் பிறகு இரு தரப்பைச் சேர்ந்தவர்கள் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவிடப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மற்றும் மற்றொரு குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, செய்தி ஊடகங்கள் தவறான தகவலை பரப்புவதை நிறுத்த வேண்டும்” என்று இருப்பதாக தெரிவித்தனர்.

Archive

மற்றொரு வீடியோவில் மெயின்பூரி போலீஸ் அதிகாரி வைரல் வீடியோ பற்றிய விளக்கத்தை அளித்திருந்தார். அடித்துக்கொண்டது தாக்கூர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான். இதில் யாரும் தலித் இல்லை என்பதை அவர் பேட்டி வடிவில் கூறியிருந்தார். இதன் மூலம் சங் பரிவார் அமைப்பினர் தலித் இளைஞரை அடித்துக் கொலை செய்தார்கள் என்று பரவும் தகவல் தவறானது என உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உத்தரப் பிரதேசத்தில் தலித் மீது தாக்குதல் நடந்தது என்று பகிரப்படும் வீடியோ செய்தி தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:உத்தரப்பிரதேசத்தில் தலித் சிறுவனை அடித்துக் கொன்ற சங் பரிவார் என்று பரவும் வதந்தி!

Fact Check By: Chendur Pandian 

Result: False