
வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு பல கோடி ரொக்க பரிசு மற்றும் சப்-கலெக்டர் பதவி வழங்கப்பட்டது. ஆனால், தங்கப் பதக்கம் வென்ற ஹிமாதாசுக்கு வெறும் ரூ.50 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
தடகள வீராங்கனை ஹிமாதாஸ் உணவு உட்கொள்ளும் புகைப்படம் மற்றும் தமிழ் திரைப்படத்தின் காட்சி ஒன்றின் படத்தை இணைத்து போட்டோ கார்டு தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் போட்டோஷாப் முறையில் தமிழில் “வெள்ளிப் பதக்கம் மட்டுமே வாங்கிய P.V.சிந்துவுக்கு 15கோடி பரிசுடன், சப்-கலெக்டர் பதவியும் ஆனால் தங்கப் பதக்கம் வென்ற ஹிமாதாஸூக்கு வெறும் 50,000 மட்டும் கொடுத்து இந்தியா ஜனநாயக நாடல்ல சாதிய நாடு என்று மீண்டும் நிரூபித்து இருக்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை John B Ravichandran என்ற ஃபேஸ்புக் ஐடியைக் கொண்ட நபர் 2021 ஆகஸ்ட் 16ம் தேதி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பி.வி.சிந்து, ஹிமா தாஸ் ஆகியோர் எந்த போட்டியில் தங்கம், வெள்ளிப் பதக்கம் வென்றனர் என்று குறிப்பிடவில்லை. தற்போது டோக்கியோ ஒலிம்பிக் போட்டி முடிந்துள்ள சூழலில் இந்த பதிவு இந்த ஒலிம்பிக் போட்டியில் இந்த சம்பவம் நடந்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. ஆனால், இந்த ஒலிம்பிக்ஸ் போட்டியில் பி.வி.சிந்துவுக்கு வெண்கலம் கிடைத்தது. ஹிமா தாஸ் பங்கேற்றதாக செய்திகள் இல்லை. எனவே, பழைய பதிவாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
இது தொடர்பாக ஃபேஸ்புக்கில் தேடிய போது 2018ம் ஆண்டு முதல் இந்த பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவது தெரிந்தது. 2018ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜகார்த்தாவில் நடந்தது. எனவே, அந்த போட்டியில் இவர்கள் பெற்ற பதக்கங்களை வைத்து இப்படி செய்தி வெளியாகி இருக்கலாம் என்று தெரிந்தது.
முதலில் ஆந்திரா / தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பி.வி.சிந்து பெற்ற பதக்கங்கள், ரொக்க பரிசு, பதவிகள் தொடர்பாக தேடினோம். அப்போது அவர் 2016ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றிருப்பது தெரிந்தது. 2021 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் அவர் வெண்கல பதக்கம் வென்றிருந்தார். மேலும் பல சர்வதேச பேட்மிண்டன் போட்டிகளில் தங்கப் பதக்கம் உள்பட பல்வேறு பதக்கங்களை அவர் வென்றிருப்பது தெரிந்தது. மேலும் ஆந்திர மாநிலத்தில் டெபுட்டி-கலெக்டராக அவருக்கு பதவி வழங்கப்பட்டிருக்கும் செய்தியும் நமக்கு கிடைத்தது. ஆசிய கோப்பையில் பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கம் வெல்வதற்கு முன்பாகவே அதாவது 2017ம் ஆண்டே சிந்துவுக்கு உதவி கலெக்டர் பதவி வழங்கப்பட்டிருப்பதும் தெரிந்தது.

அசல் பதிவைக் காண: hindustantimes.com I Archive
அடுத்ததாக ஹிமா தாஸ் பற்றிய செய்தியை தேடினோம். 2018ம் ஆண்டு ஜகார்த்தாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் அவர் இரண்டு தங்கப்பதக்கம் மற்றும் ஒரு வெள்ளிப்பதக்கம் வென்ற செய்தி கிடைத்தது. மேலும் அவர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற போது அவர் சார்ந்த அஸ்ஸாம் மாநிலம் சார்பில் அவருக்கு ரூ.50 லட்ச ரூபாய் ரொக்கப் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. அது மட்டுமின்றி, கர்நாடக மாநிலம் சார்பில் ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் ஹிமா தாசுக்கு ரொக்கப் பரிசு மிகக் குறைவாக வழங்கப்பட்டது என்ற தகவல் தவறானது என்பது உறுதியானது.

அசல் பதிவைக் காண: indiatoday.in I Archive 1 I timesofindia I Archive 2
ஹிமா தாசுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்று அஸ்ஸாம் அரசு அறிவிப்பு ஏதும் வெளியிட்டதா என்று தேடினோம். அப்போது, 2018 ஜூலை மாதம் வெளியான செய்தி ஒன்று கிடைத்தது. அது 2020ம் ஆண்டு நடைபெற இருந்த டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்கத் தயாராகும் வகையில் அவருக்கு மாதம் ரூ.50 ஆயிரம் சிறப்பு உதவித் தொகை வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
அசல் பதிவைக் காண: samayam.com I Archive
2018ம் ஆண்டு ஹிமாதாஸ் ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற போது அவருக்கு வெறும் 18 வயதுதான். அதன் பிறகு 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஹிமாதாஸ் அஸ்ஸாம் மாநில துணை காவல்துறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்ட செய்தியும் நமக்கு கிடைத்தது. 2018ம் ஆண்டில் மிக உயரிய அர்ஜூனா விருதும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அசல் பதிவைக் காண: indiatoday.in I Archive
இதன் மூலம் ஹிமா தாசுக்கு பதவி மற்றும் ரொக்கப் பரிசு, விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளார் என்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் தங்கப் பதக்கம் வென்ற ஹிமா தாசுக்கு வெறும் 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டது என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
வெள்ளிப் பதக்கம் வென்ற சிந்துவுக்கு துணை கலெக்டர் பதவியும் பல கோடி ரொக்க பரிசும் வழங்கப்பட்ட நிலையில், தங்கம் வென்ற ஹிமா தாஸூக்கு வெறும் ரூ.50 ஆயிரம் மட்டும் வழங்கப்பட்டது என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்படும் பி.வி.சிந்து- ஹிமாதாஸ் தவறான ஒப்பீடு!
Fact Check By: Chendur PandianResult: False
