FACT CHECK: ஸ்டெர்லைட்டிடம் இருந்து ரூ.47.93 கோடியை சீமான் வாங்கினார் என நியூஸ் 7 செய்தி வெளியிட்டதா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

ஸ்டெர்லைட்டிடம் இருந்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ரூ.47.93 கோடி வாங்கினார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

நியூஸ் 7 தமிழ் வெளியிட்டது போன்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில், “ஸ்டெர்லைட்டிடம் இருந்து 47.93 கோடி நிதி வாங்கிய நாம் தமிழர் கட்சி சீமானின் வீடியோ வெளியானது.. முக்கிய செய்திகள் #Breaking News” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த பதிவை 2021 ஜூன் 29ம் தேதி aaj Kumar Rohit என்பவர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

உண்மை அறிவோம்:

ஸ்டெர்லைட் நிறுவனத்திடமிருந்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பணம் பெற்றதாக தொடர்ந்து தவறான தகவல் பகிரப்பட்டு வருகின்றன. தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அரசியல் கட்சிகளுக்கு நிதி உதவி வழங்குவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் ஸ்டெர்லைட் நிறுவனத்திடமிருந்து பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் நிதி பெற்றது தொடர்பாக நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழில் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஸ்டெர்லைட் நிறுவனத்திடமிருந்து ரூ.47.93 கோடி வாங்கினார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. சமூக ஊடகங்களில் தேடியபோது 2018ம் ஆண்டில் இருந்து இந்த நியூஸ் கார்டு வைரலாக பகிரப்பட்டு வருவது தெரிந்தது. 

அசல் பதிவைக் காண: Facebook I Archive

இதனுடன் “காங்கிரஸ் எம்.எல்.ஏ மூலம் நடிகர் சீமான் அவர்களுக்கு 10 கோடி பணம் பரிமாற்றம் அம்பலம்” என நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டையும் சேர்த்து வைத்து பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதை காண முடிந்தது. பல ஆயிரம் பேர் அதை ஷேர் செய்து வந்துள்ளனர். இதில் காங்கிரஸ் கட்சியிடமிருந்து பணம் பெற்றார் என்று வெளியான நியூஸ் கார்டு பற்றி நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் ஏற்கனவே ஆய்வு செய்து கட்டுரை வெளியிட்டிருந்தது. அதில், இந்த நியூஸ் கார்டை நாங்கள் வெளியிடவில்லை, போலியாக உருவாக்கி பகிர்ந்துள்ளனர் என்று நியூஸ் 18 தமிழ்நாடு நிர்வாகிகள் நம்மிடம் கூறியிருந்தனர். அந்த கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

இந்த நிலையில் நியூஸ் 7 வெளியிட்டது போன்று பகிரப்படும் நியூஸ் கார்டு பற்றி ஆய்வு செய்தோம். ஸ்டெர்லைட் நிறுவனத்திடமிருந்து சீமான் பணம் பெற்றதாக அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. அவரது கட்சியை சார்ந்தவர்களே கூட இது குறித்து விளக்கம் அளிக்க கோரி சீமானுக்கு கடிதம் எழுதியது சில ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் இது குறித்து சீமான் பதில் அளிக்கவில்லை. 

அசல் பதிவைக் காண: vikatan.com I Archive

இந்த சூழலில் ஸ்டெர்லைட் நிறுவனத்திடமிருந்து சீமான் பணம் பெற்றது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது என்று நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியது. அப்படி எதுவும் வீடியோ வெளியாகி உள்ளதா, நியூஸ் 7 அப்படி ஏதும் செய்தி, வீடியோவை வெளியிட்டுள்ளதா என்று மட்டும் ஆய்வு செய்தோம்.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு 2018ம் ஆண்டு வெளியாகி உள்ளது. இந்த நியூஸ் கார்டில் உள்ள தமிழ் ஃபாண்ட் வழக்கமாக நியூஸ் 7 பயன்படுத்தும் தமிழ் ஃபாண்ட் இல்லை. மேலும், சீமான் பணம் பெற்றதாக எந்த ஒரு வீடியோவும் இதுவரை வெளியாகவில்லை. அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை. இதன் மூலம் இந்த நியூஸ் கார்டு போலியானது என்பது தெளிவானது.

இதை உறுதி செய்ய நியூஸ் 7 தமிழ் டிஜிட்டல் பிரிவு நிர்வாகி சுகிதாவை தொடர்புகொண்டு கேட்டோம். அவர் “இந்த நியூஸ் கார்டு நாங்கள் வெளியிட்டது இல்லை, போலியானது” என்று உறுதி செய்தார். இதன் அடிப்படையில் ஸ்டெர்லைட் நிறுவனத்திடமிருந்து சீமான் ரூ.47.93 கோடி நிதி உதவி பெற்றார் என்று பகிரப்படும் நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

ஸ்டெர்லைட் நிறுவனத்திடமிருந்து சீமான் நிதி பெற்ற வீடியோ வெளியானது என்று பகிரப்படும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ஸ்டெர்லைட்டிடம் இருந்து ரூ.47.93 கோடியை சீமான் வாங்கினார் என நியூஸ் 7 செய்தி வெளியிட்டதா?

Fact Check By: Chendur Pandian 

Result: False