FACT CHECK: இந்த சூரியன் மேற்பரப்பு படம் நாசா வெளியிட்டது இல்லை!

அறிவியல் சமூக ஊடகம் சர்வதேசம்

நாசா வெளியிட்ட சூரியனின் மேற்பரப்பு என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

சூரியனின் மேற்பரப்பு என்று ஒரு புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நாசா வெளியிட்ட சூரிய மேற்பரப்பின் மிக தெளிவான படம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை நம்ம குன்றத்தூர் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2021 பிப்ரவரி 9 அன்று பகிர்ந்துள்ளது. இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

நாசா அறிவித்தது, நாசா வெளியிட்டது என்று பல படங்கள், பதிவுகள், வீடியோக்கள் சமூக ஊடகங்களில் அவ்வப்போது வைரலாவது வழக்கம். பெரும்பாலும் அது போலியானதாகவே இருக்கின்றன. அந்த வகையில் பலரும் இதை ஷேர் செய்து வரவே, சூரியனின் மேற்பரப்பு படத்தை நாசா வெளியிட்டதா என்பதை அறிந்துகொள்ள முடிவு செய்தோம்.

நாசா இணையதளத்துக்குச் சென்று சூரியன் தொடர்பாக புதிதாக படம் எதுவும் வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ளது போன்று எந்த ஒரு படத்தையும் நாசா வெளியிடவில்லை என்பது தெரியவந்தது. 

எனவே, இந்த புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது சில ஃபேக்ட் செக் ஊடகங்கள் இந்த புகைப்படம் தொடர்பாக உண்மை கண்டறியும் ஆய்வை நடத்தியிருப்பது தெரியவந்தது. அவற்றை ஒதுக்கிவிட்டு நாம் ஆய்வு செய்தோம். அப்போது, இந்த புகைப்படத்தை பலரும் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டு வருவதைக் காண முடிந்தது. அவற்றை ஆய்வு செய்தோம். 

அப்போது “நாசா வெளியிட்ட சூரியனின் மிகத் தெளிவான புகைப்படம்” என்று ட்விட்டரில் வெளியான பதிவு ஒன்றுக்கு, “இந்த புகைப்படத்தை நான் தான் தயாரித்தேன். என்னுடைய சூரிய தொலைநோக்கி மூலம் கிடைக்கப்பெற்ற தகவல் அடிப்படையில் இந்த புகைப்படத்தை உருவாக்கியுள்ளேன்” என்று ஒருவர் கமெண்ட் செய்திருப்பது தெரிந்தது. யார் அவர், இதை அவர்தான் வெளியிட்டாரா என்று ஆய்வு செய்தோம்.

Archive

அவருடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த புகைப்படத்தை 2021 ஜனவரி 13ம் தேதி அவர் வெளியிட்டிருப்பது தெரியவந்தது. அதில், “சாஃப்ட்வேரை மிக அதிக அளவில் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட சூரியனின் மேற்பரப்பு. இதன் மூலம் சூரியனின் சிக்கலான காந்தப்புலத்தை அறிய முடியும். இது கலைக்கும் அறிவியலுக்கும் இடையேயான மெல்லிய கோட்டில் உருவாக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகைப்படத்தை வெளியிட்ட Jason Guenzel ட்விட்டர் பக்கத்தை ஆய்வு செய்தோம். வானியல் தொடர்பாக பல்வேறு படங்களை உருவாக்கி வருபவர் என்று தெரிந்தது.

தொடர்ந்து தேடியபோது இந்த புகைப்படம் fineartamerica.com என்ற இணையதளத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதும் தெரிந்தது. அதில், இந்த புகைப்படத்தை Jason Guenzel என்பவர் உருவாக்கினார் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

அசல் பதிவைக் காண: fineartamerica.com I Archive

நம்முடைய ஆய்வில், சூரியனின் மேற்பரப்பு என்று எந்த ஒரு படத்தையும் நாசா வெளியிடவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தை கம்ப்யூட்டர் மென்பொருட்களைப் பயன்படுத்தி உருவாக்கினேன் என்று Jason Guenzel என்பவர் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் நாசா வெளியிட்ட சூரியனின் மேற்பரப்பு என்று பகிரப்படும் தகவல் உண்மையுடன் தவறான தகவலும் சேர்ந்தது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

நாசா வெளியிட்ட சூரியனின் மேற்பரப்பு என்று பகிரப்படும் படம் உண்மையில் நாசா வெளியிட்டது இல்லை என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:இந்த சூரியன் மேற்பரப்பு படம் நாசா வெளியிட்டது இல்லை!

Fact Check By: Chendur Pandian 

Result: Partly False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply